வராஹ புராணம் – பகுதி 3

256

பூமி பாதாளத்தில் அழுந்திவிட, பூதேவி மகா விஷ்ணுவிடம் முறையிட்டாள். அவள் செய்த துதியே கேசவ துதி எனப்படுகிறது. இதைச் செய்பவர்கள் வறுமை, பாவங்களிலிருந்து விடுபடுவர். புத்திரப்பேறு கிடைக்கும். இறுதியில் விஷ்ணுலோகம் அடைவர். பூமித்தேவியின் முறையீட்டைக் கேட்ட பகவான் விஷ்ணு மிகப்பெரிய வராக (பன்றி) உருவெடுத்தார். இப்படி எடுத்த வராக அவதார பகவான் பூமியைக் காத்திட சமுத்திரத்திற்குள் பிரவேசித்தார்.

பிரஜாபதிகளில் காசியப முனிவரும் ஒருவர். அவருடைய மனைவியரில் ஒருத்தி திதி. அவள் ராக்ஷசர்களின் தாய். ஜயவிஜயர்கள் அவள் வயிற்றில் ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என்ற இருவர்களாய் உதித்தனர். அவர்களில் இளையவன் ஹிரண்யாக்ஷன். அவன் பிரம்மாவைக் குறித்துக் கோர தவம் செய்தான். அதன் வெப்பம் மூன்று லோகங்களையும் தகித்தது. இதனால் அச்சம் கொண்ட தேவர்கள் சத்தியலோகம் சென்று பிரம்மாவைக் கண்டு இரண்யாக்ஷன் தவம் பற்றிக் கூறித் தங்களுக்கு அருள்புரிய வேண்டினர். அப்போது பிரம்மா தான் சென்று இரணியாக்ஷன் தவத்தை முடிக்கச் செய்வதாகவும், தேவர்களை ரக்ஷிப்பவனாகவும் இருப்பதாகக் கூறி அவர்களை அனுப்பி வைத்தார். பின்னர் இரணியாக்ஷன் தவம் செய்யுமிடம் அடைந்து அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

அதற்கு அவன் சிருஷ்டியில் தோன்றிய யாராலும், எதாலும், எந்த ஆயுதத்தாலும் மரணம் ஏற்படக்கூடாது. தனக்கு மூவுலகத்திற்கும் அதிபதியாகும் வரங்கள் இரண்டும் வேண்டினான். அப்போது பிரம்மா விஷ்ணுவைத் தியானித்து எல்லாம் அவன் செயலே என்று நினைத்து அரக்கன் கேட்ட வரங்களைக் கொடுத்தார். வரம் பெற்ற இரணியாக்ஷன் மூவுலகங்களையும் வென்று தனக்கு எதிரி யாருமின்றி ஆளத் தொடங்கினான். அடுத்து அவன் சத்தியலோகம் அடைந்து பிரம்மனை வெல்ல முயன்றபோது யுக்தியுடன் அவனைச் சமாதானப்படுத்தி உலக நாயகனாகிய விஷ்ணுவை வென்றால் உனக்குச் சமமாக யாரும் இருக்கமாட்டார் என்று கூற விஷ்ணுவின் இருப்பிடம் அடைந்தான் இரணியாக்ஷன். அங்குத் துவாரபாலகர்கள் அவனைத் தடுக்கவில்லை. அவன் வருகை அறிந்து விஷ்ணு பாதாளலோகம் சென்று விட்டார். இரணியாக்ஷன் வைகுந்தத்தில் அனைவரும் விஷ்ணு ஸ்வரூபியாகக் காணப்பட்டனர். செய்வதறியாமல் விஷ்ணுவைத் தேடி பாதாளலோகம் செல்ல முனைந்தவன் வழித்தெரியாமல் தவித்து இறுதியில் தனக்குத் தடையாயிருக்கும் பூமியைப் பாயாகச் சுருட்ட மறைந்தது. அதுகண்டு எல்லோரும் ஸ்ரீஹரியிடம் முறையிட்டனர். பூமாதேவி கண்ணீர் மல்கப் பிரார்த்தனை செய்தாள்.

உடனே பகவான் விஷ்ணு யஜ்ஞ வராகமாக உருவெடுத்தார். குர்குர் என்று சப்தம் செய்தது வராகம். பூமியைப் பாயாகச் சுருட்டிய இரணியாக்ஷன் மீது பாய்ந்து தன் தந்தத்தால் (கோரைப் பல்லால்) குத்தினார். அவன் அதைத் தாளமுடியாமல் சமுத்திரத்திலே குதித்து மறைந்தான். அவனை வராகம் தனது கால்களால் பற்றிக் கொண்டு மறுபடியும் தந்தத்தால் குத்தியது. அதனால் அவன் உடனே மரணமடைந்தான். அவனால் சுருட்டப்பட்ட பூமியை வராகமூர்த்தி வெளிக்கொணர்ந்து அதனை ஆதிசேஷன் மீது நிலைப்படுத்தி வைகுண்டம் அடைந்தார். இதுவே வராக அவதாரம்.

தொடரும்…

ஓம் நமோ வராஹாய