வராஹ புராணம் – பகுதி 9 வாசு மன்னன்

395

வாசு மன்னன் தன்னரசைத் தன் மகன் விவாசனனுக்கு அளித்து, புஷ்கரத்தீர்த்தம் அடைந்து, அங்கு புண்டரீகாக்ஷனை முன்னிட்டு ஒரு யாகம் செய்ய யாகத்தீயிலிருந்து ஓர் உருவம் தோன்றி வாசுவின் முன் நின்று, உங்கள் ஆணை என்ன எனக்கேட்டது. வாசு அந்த உருவத்தைப் பார்த்து நீ யார்? எங்கிருந்து வந்தாய்? என வினவினான். அதற்கு அவ்வுருவம் கூறிய வரலாறு கீழே தரப்பட்டுள்ளது:

முற்பிறவியில் வாசு காசுமீர மன்னனாக இருந்தான். அவன் ஒரு சமயம் வேட்டையாடச் சென்றபோது ஒரு மானைக் கண்டு அதை அம்பெய்தி கொன்று விட்டான். அது உண்மை மானல்ல. ஒரு முனிவர் மான் வடிவில் திரிந்து கொண்டிருந்தார். அதை அறிந்த வாசு தான, தர்மங்களும், மற்ற சமய சடங்குகளும் செய்வதுடன் தவமும் இயற்றினான். முடிவில் வயிற்று வலியால் அவன் மரணமடைந்தான். மரணத்தருவாயில் ‘நாராயணா’ என்ற பகவான் நாமத்தை உச்சரித்தான்.

பின்னர் யாகத்தீயிலிருந்து தோன்றிய உருவம் தான் ஒரு பிரம்மாராக்ஷசன் என்றது. வாசு மான் வடிவில் இருந்த மானை அதாவது பிராமணனைக் கொன்றதால் அது வாசு மன்னன் உடலில் புகுந்து இருந்ததாகவும், அதுவே அவனது மரணத்தறுவாயில் தண்டனையாக வயிற்றுவலி கொடுத்ததாகவும் கூறிற்று.

வாசுவின் நாராயண நாம உச்சரிப்பால் அவன் விஷ்ணு தூதர்களால் சொர்க்கம் அழைத்துச் செல்லப்பட்டான். விஷ்ணு தூதர்கள் பிரம்ம ராக்ஷசை வாசுவின் உடலிலிருந்து விரட்டி அடித்தனர். வாசு சொர்க்கலோகத்தில் பல ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் வாசம் செய்தான். மறுபடியும் அவன் காசுமீர் மன்னனாகத் திரும்பவும் அந்த பிரம்மராக்ஷசன் அவன் உடலில் பிரவேசித்தது.

எனினும் வாசு, புண்டரீகாக்ஷனை தியானித்து அவன் நாமங்களை உச்சரித்து யாகம் செய்ய அது விலகியது. இப்போது அதன் பாவங்கள் புண்டரீக நாமங்களைக் கேட்டதன் பயனாக விலகிவிட்டன. அது மறுபடியும் ஒரு தர்மவான் ஆயிற்று. வாசு, பிரம்மராக்ஷசனால் தன் முற்பிறவிகளைப் பற்றி அறிய நேர்ந்ததால் அதற்கொரு வரம் அளித்தான். அதாவது அது தர்மவியாதன் என்ற வேடனாகப் (தருமவானான வேடன்) பிறக்கும்படியான வரம். பின்னர் வாசு வைகுந்தப் பிராப்தி அடைந்தான்.

தொடரும்…

ஓம் நமோ வராஹாய!