வாசவி ஜெயந்தி ஸ்பெஷல் ! 3.5.20 !

283

வசந்த வாழ்வளிக்கும் ஸ்ரீ வாசவி தேவி!

ஆரிய வைசியர்களின் குலதெய்வமாக விளங்குகிறாள் வாசவி என்ற திருநாமம் கொண்ட ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி. இந்த அம்மனின் அவதார நன்னாள் அன்று ஆரிய வைசியர்களால் தேவி குடி கொண்டுள்ள எல்லா ஆலயங்களிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

வாணிபத்துடன் தர்மசிந்தனை மேலோங்க பண்பும் கலாசாரமும் வழுவாமல் நன்னெறியுடன் வாழ்ந்து வரும் ஆரிய வைசியர்களுக்கு எல்லாமே இந்த வாசவி என்ற கன்னிகாபரமேஸ்வரி தான்.

ஒருசமயம் சிவபெருமான் வைசியர் அனைவரையும் பூவுலகம் சென்று தங்கள் கடமைகளைச் செய்யுமாறும் தான் நகரேஸ்வர ஸ்வாமியாகவும் அம்பிகை விந்தியவாசினியாகவும் தோன்றி அவர்களை என்றும் காத்திருப்போம்

என்று கூறினார். ஆனால் வைசியர்கள் இறைவனை நீங்க மனமின்றி பிரம்ம லோகம் சென்று பிரம்மனைத் துதித்தனர். பிரம்மதேவன் அவர்களிடம், தானே பூவுலகில் பாஸ்கராச்சாரியராகப் பிறந்து அவர்களின் குருவாக இருந்து வழிநடத்துவேன் என்று ஆறுதல் கூறினார். பின்னர் வைகுந்தவாசனை தரிசனம் செய்ய அவரும் அவர்களிடம் உலக நன்மைக்காக பூவுலகிற்குச் செல்லுங்களென்றும், தானே ஜனார்த்தன ஸ்வாமியாகவும், திருமகள் கோனக மலையாகவும் வந்து அவர்களை காப்பதாகவும் வாக்களித்தார்.

வைசியர்கள், மும்மூர்த்திகளின் ஆசிகளுடனும், அவர்களால் அளிக்கப்பட்ட நவநிதிகளையும் பெற்றுக் கொண்டு நீங்க மனமில்லாமல் கைலாயத்தை விட்டு பூவுலகடைந்தனர். இதற்கிடையில் பிரம்மனின் ஆணைப்படி தேவதச்சனான மயன், பூவுலகில் பெனுகொண்டா என்ற அழகிய நகரை நிர்மாணித்தான். இந்நகரைச் சுற்றிலும் அழகிய பல்வேறு 18 பட்டினங்களையும் நிர்மாணித்தான். இந்த நகரங்களையடைந்த வைசியர்கள் தங்கள் குலகுருவாக அவதரித்திருந்த பாஸ்கராச்சார்யார் சொல்படி வளமாக வாழ்ந்து வந்தனர். வைசியரான சமாதி மகரிஷி பெனுகொண்டா நகர மன்னன் குசுமசெட்டியாகப் பிறந்து குசுமாம்பாள் என்ற பெண்ணை மணந்து இறைநினைவுடன் வாழ்ந்து வந்தார். வெகுகாலமாக அவர்களுக்குக் குழந்தைபாக்கியம் இல்லாததால் குலகுருவின் ஆசியுடன் புத்திரகாமேஷ்டியாகம் புரிய, வசந்தருதுவில், வைகாசி, சுக்கிரவாரம், தசமி, புனர்வசு கூடிய நன்னாளில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் பிறந்தன.

தெய்வாம்சம் பொருந்திய பெண் குழந்தை ஒரு கையில் கிளியையும், மற்றொரு கையில் வீணையையும், மேலிரு கரங்களில் தாமரையையும், பாசத்தையும் தாங்கி நாற்கரங்களோடு, பேரழகுடன் பெற்றோருக்குக் காட்சி தந்து பின் சாதாரண குழந்தையாக மாறினாள். அவர்களின் குலகுரு பாஸ்கராச்சாரியார் அந்த பெண் குழந்தைக்கு வாசவி என்றும், ஆண் குழந்தைக்கு விருபாக்ஷன் என்றும் பெயரிட்டு ஆசீர்வதித்தார். குழந்தைகள் இருவரும் எல்லா கலைகளையும் கற்று, சிவபூஜை செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

இதற்கிடையில் சபிக்கப்பட்ட சித்திரகண்டன் என்ற கந்தர்வன், விஷ்ணுவர்த்தன் என்ற பெயருடன் சந்திரவம்சத்தில் தோன்றி, இராஜமகேந்திரபுரத்தை ஆண்டுவந்தான். பின்னர் தன்னைச் சுற்றியுள்ள பலநாடுகளையும் வெல்லும் நோக்குடன் படையெடுத்துச் சென்றான். அவ்வாறு செல்கையில் பெனுகொண்டாவில் வாசவியைக் கண்டு அவளை மணக்க விரும்பி,

குசுமசெட்டியிடம் பெண் கேட்டான்.

குசுமசெட்டி தங்கள் குலகுருவுடன் கலந்து பேசி, பின் மன்னனிடம் அவனுக்குப் பெண் தருவதைப் மிகப்

பெருமையாகக் கருதுவதாகவும் ஆனால் இறையருளால் புத்திரகாமேஷ்டியாகம் செய்து பிறந்த தெய்வக் குழந்தையை தன் குல வழக்கப்படி, தன் குலத்தவருக்கே மணம் செய்து கொடுக்க வேண்டுமென்றும் தன் இயலாமையை பொறுமையுடன் தெரிவித்தான்.

இதனால் கோபமடைந்த விஷ்ணுவர்த்தன் பலவகையிலும் அவர்களிடம் ஆசை வார்த்தைகள் கூற, அது கண்டு பயந்த குசுமசெட்டி தன் குலத்தாருடன் ஆலோசித்து பதில் சொல்வ தாகக் கூறி சமாதானப்படுத்தி அனுப்பியபின் தன் குலத்தாருடன் ஆலோசனை நடத்தினார். 18 நகரங்களிலிருந்து 714 கோத்திரக்காரர்கள் நகரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள வைசிய மகா சபையில் ஒன்று கூடி விவாதித்தனர். 612 கோத்திரக்காரர்கள் பெண் கொடுக்கலாம் என்றனர். 102 கோத்திரக்காரர்கள் கொடுக்க வேண்டாம் என்றனர். மேலும் அவர்கள் தங்கள் குலதர்மத்தைக் காக்க தீக்குளிக்கவும் துணிந்தனர். அதனால் கோபமடைந்த 612 கோத்திரக்காரர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து நாட்டை விட்டு வெளியேறினர்.

விஷ்ணுவர்த்தன், வாசவியைச் சிறைபிடிக்க சேவகர்களை விரைந்து அனுப்பினான். வாசவி, தன்னால் வந்த குழப்பத்தைத் தீர்க்கவும் விஷ்ணுவர்த்தனிடம் அகப்படாமல் இருக்கவும் தான் அக்னிப்பிரவேசம் செய்வதாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்தாள்.

இதைக் கண்ட 102 கோத்திரக்காரர்களும் தாங்களும் தீக்குளிப்பதாக அறிவித்தனர். அவர்களிடம் வாசவி, “”இன்று முதல் நீங்கள் (102 கோத்திரக்காரர்கள்) பொன், புகழ், கல்வி உள்ளிட்ட சம்பத்துகள் அனைத்தையும் பெற்று குறைவின்றி வாழுங்கள்”என வரமளித்தாள். பின்னர் நகரேஸ்வரர் கோயிலை அடைந்து, நகரேஸ்வரர், வித்யாவாசினி, ஜனார்த்தனி, கோனகமலை முதலிய தேவதைகளை வணங்கி, தானதர்மங்கள் செய்து அங்கு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கினாள். அவளுடன் 102 கோத்திரக்காரர்கள் தங்கள் குழந்தைகளை மட்டும் விட்டுவிட்டு தம் மனைவியருடன் அக்னிப் பிரவேசம் செய்தனர். ஆனால் அவர்கள் அக்னி பிரவேசம் செய்ததும் அக்குண்டங்களில் நீர் நிரம்பி அக்னி குளிர்ந்தது. அக்னிதேவன் அவர்களுக்குக் காட்சி கொடுத்து வாழ்த்தினார். பின்னர் மீண்டும் அவர்கள் அக்னி பிரவேசம் செய்து கயிலையை அடைந்தனர். வாசவி பரமேஸ்வரரோடு ஒன்று கலந்தாள். அன்று முதல் வாசவி, கன்னிகா பரமேஸ்வரியாக எல்லோருக்கும் அருள்பாலித்து வருகிறாள்.

வாசவியாக வாழ்ந்த ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரியை ஆரிய வைசியர்கள் தங்கள் குலதெய்வமாக ஏற்று, ஆண்டுதோறும் அம்பிகையின் அவதார நன்னாளையும், அக்னிப் பிரவேசத்தையும் அதிவிமரிசையாக தங்கள் ஆலயங்களில் கொண்டாடி வருகின்றனர்.

ஆயிரம் வருடங்கள் பழைமையான இக் கோயில் ஆந்திர மாநிலத்தில், மேற்கு கோதாவரி ஜில்லாவில் பெனுகுண்டாவில் உள்ளது. இவ்வாலயத்தில் ஆயிரம் கால் மண்டபம்போல் அமைந்த தூண்களில், அம்மனுடன் ஐக்கியமான 102 கோத்திரத்தார்களின் வரலாறு அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பிராட்வேயில் உள்ள கொத்தவால்சாவடி ஆதியப்பா தெருவும், கோடவுன் தெருவும் சந்திக்கும் இடத்தில் வாசவி தேவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இத்தலத்தில் அம்பிகை வலது திருக்கரத்தில் பூவை ஏந்திக்கொண்டு கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். கருவறையின் இடதுபுறம் ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரியின் உற்சவ விக்ரகம் அமைந்துள்ளது. இங்கு, அம்பிகையை வழிபட்டு, 9 வாரங்கள் நெய்தீபமேற்றி வழிபட சர்ப்ப தோஷங்கள், மாங்கல்ய தோஷங்கள் உட்பட எல்லா கிரக தோஷங்களும் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆலயம் முழுவதும் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் வரலாறு ஓவியமாக தீட்டப்பட்ட படங்கள் மாட்டப்பட்டுள்ளன.

பார்வதியின் அம்சமான ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரியின் சரிதத்தைப் படிப்பவர்களும், காதார கேட்பவர்களும் இவ்வுலகில் சகல செல்வங்களும் பெற்று வாழ்ந்திடுவர் என்கிறது கந்தபுராணம்.

தேவி சரணம்…