கருட புராணம் – பகுதி 7 பிரேத ஜன்மம் அடைவதற்கான காரணங்கள்

348

ஒருவன் பிரேத ஜன்மம் அடைவதற்கான பல காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றைக் கீழே காண்க. பூர்வ ஜன்மத்தில் மகாபாவம் செய்தவனே பிரேத ஜன்மம் அடைவான்.

1. நீர்நிலைகள் ஏற்படுத்துதல், தண்ணீர்ப்பந்தல் வைத்தல். சத்திரம், தேவாலயம் கட்டுதல் போன்ற தருமத்தை ஒருவன் செய்திட, அவன் மரித்தவுடன் அவன் குலத்தில் பிறப்பவன் அவற்றை விற்றுவிட்டால் பிரேத ஜன்மம் பெறுவான்.

2. தருமத்தைச் செய்தவனே விற்றாலும் பிரேத ஜன்மம் பெறுவான்.

3. பிறருக்குரிமையான பூமியை அபகரித்தவன் பெறுவான்.

4. அடிபட்டு, இடிபட்டு, இடி தாக்கி, தீக்குளித்து, தூக்கிட்டுக் கொண்டு, விஷம் உண்டு, மாடு மூட்டி இறந்தவர்கள் சம்ஸ்காரம் செய்வதற்கு நாதியற்றவன், திருடனால் மரித்தவன், அயலூரில் இறந்தவன், பெற்றோர்க்குச் சிரார்த்தம் செய்யாது மரணமடைந்தவன் ஆகியோர் பிரேத ஜன்மத்தை அடைவர்.

5. ஒருவனுடைய அந்திமக் கிரியைகளை அந்தச் சாதியிலுள்ளவரே செய்ய வேண்டும். வேறு ஒருவர் செய்தால் பிரேத ஜன்மமடைவர்.

6. மலையிலிருந்தோ, கட்டிலில் படுத்து உள்ளவாறோ, இறை நாமம் உச்சரிக்காமல் உயிர்விட்டவன், ரஜஸ்வாலை பெண், சண்டாளன் ஆகியோரைத் தீண்டிவிட்டு சூதகத் தீட்டோடு இறந்தவன் பிரேத ஜன்மத்தை அடைவான்.

7. தாய், மனைவி, பெண், மருமகள் முதலியோரின் சரீர தோஷத்தைப் பார்க்காமலேயே, பிறர் சொல் கேட்டு ஜாதிப்பிரஷ்டம் செய்தவன், மனச்சாட்சிக்கு விரோதமாகத் தீர்ப்பு வழங்கியவன், அந்தணர், பசுக்களைக் கொல்பவன், இமிசிப்பவன், மதுபானம் அருந்துவோர், குருபத்தினியைக் கெடுத்தவன், வெண் பட்டு, சொர்ணம் திருடியவன் பிரேத ஜன்மம் அடைவர். பிரேத ஜன்மம் அடைந்தோர் எப்போதும் கொடிய பாலைவனங்களில் சஞ்சரித்து வருந்துவர்.

தொடரும்…

விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா!!!