Thursday, October 19, 2023
HomePurana Kathaigalவேண்டும் வரம் தரும் மூங்கிலணை காமாட்சி அம்மன் திருக்கோவில் வரலாறு

வேண்டும் வரம் தரும் மூங்கிலணை காமாட்சி அம்மன் திருக்கோவில் வரலாறு

முன்பொரு காலத்தில்,காஞ்சனா எனும் காட்டுப் பகுதியை,சூலபாணி எனும் அசுர மன்னன் வங்கிசபுரி எனும் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான். இவன் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவம் புரிந்து பல அரிய வரங்களைப் பெற்றிருந்தான்.அதில் தனக்குத் தன்னைக்காட்டிலும் அதிக வலிமையுடன்,தான் பெற்ற அரிய சக்திகளுடன் ஆண் மகன் ஒருவன் பிறக்க வேண்டும் என்பதும் ஒன்று.

இந்த தவத்தின் பலனால் அவனுக்கு வலிமையான ஆண்மகன் பிறந்தான்.அவனுக்கு வச்சிரதந்தன் எனும் பெயரிட்டு வளர்த்து,அவனை அப்பகுதியின் அரசனாக்கினான்.அவனுக்கு மாங்குசானன் என்பவன் அமைச்சராகவும்,துட்டபுத்தி என்பவன் தளபதியாகவும் இருந்தனர்.இவர்களிருவரின் ஆலோசனைப்படி காட்டுப் பகுதியிலிருந்த தவசிரேஷ்டர்களையும்,வேத விற்பன்னர்களையும் கொடுமைப்படுத்தத் தொடங்கினான்.

பிறப்பிலேயே பல்வேறு சக்திகளைப் பெற்றிருந்ததால் அவனை யாராலும் எதிர்க்க முடியவில்லை.பாதிக்கப்பட்டவர்கள் அவனுடைய தொல்லைகள் பற்றி பிரம்மனிடம் சென்று முறையிட்டனர்.அவரும் வச்சிரதந்தனை அழிக்க தேவேந்திரனை அனுப்பி வைத்தார்.
தேவேந்திரன் வச்சிரதந்தனின் தளபதியான துட்டபுத்தியின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தனது படையையும் இழந்து போர்க்களத்திலிருந்து ஓடிவிட்டான்.இப்படி ஓடிய தேவேந்திரன் வச்சிரதந்தனை பராசக்தியால் தான் அழிக்க முடியும் என்று கருதி பிற தேவர்களுடன் #பராசக்தி காமாட்சியம்மனாக எழுந்தருளியுள்ள காஞ்சிபுரம் சென்று அன்னையிடம் வேண்டினர்.அவர்களின் வேண்டுகோளை ஏற்ற #காமாட்சியம்மன் அவனை அழிக்கப் புறப்பட்டார்.

வங்கிசபுரி வரும் வழியில் பன்றி மலை என்ற வராக மலையில் இறங்கி துர்க்கையை வச்சிரதந்தனுடன் போரிட அனுப்பி வைத்தார்.துர்க்கை அங்கிருந்து புறப்பட்டு வங்கிசபுரி வந்து வச்சிரதந்தனுடன் போர் புரிந்தார்.

அவனுடைய தலையைத் துண்டித்தார்.மீண்டெழுந்து சிங்கத்தலையுடன் நின்றான்.அதையும் துண்டித்தார்.பின்னர் புலி,கரடி,காட்டெருமை என ஒவ்வொரு தலையுடன் தோன்ற அனைத்தையும் துண்டித்தார் துர்க்கை.இவனை ஒழிக்க காமாட்சியம்மனாலேயே முடியும் என்ற நோக்குடன் துர்க்கை அங்கிருந்து திரும்பினார்.

துர்க்கை தோல்வியுடன் திரும்பியது கண்டு காமாட்சியம்மன் கோபத்துடன் துர்க்கா தேவியையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து வங்கிசபுரி வந்தார்.வச்சிரதந்தன் ஏவிய ஆயுதங்கள் காமாட்சியம்மனை மூன்று முறை வலம் வந்து அவனிடமே திரும்பிச் சென்றது.
வச்சிரதந்தனும் அந்த அம்மனை வணங்கினான்.பின்னர் அம்மனுடன் போரிடத் தொடங்கினான்.
துர்க்கையுடன் போரிட்டது போல் பல்வேறு தலைகளுக்கு மாறினான்.காமாட்சியம்மன் துர்க்கையிடம் வச்சிரதந்தன் தலை துண்டிக்கப்பட்டு தரையில் விழுந்தவுடன் அதைக் காலால் நசுக்கி அழித்து விடும்படி கூறி வச்சிரதந்தனின் தலையைத் துண்டித்தார்.துர்க்கையும் அந்தத் தலையைக் காலால் நசுக்கி அழித்தார்.அசுரன் மறுதலை எடுக்க முடியாமல் அழிந்தான்.தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

அசுரனது தலையை மிதித்த இடம் தலையாறு எனவும்,மூளை சிதறிப் போய் விழுந்த இடம் மூளையாறு எனவும்,குலைகாய் ஈரல் விழுந்த இடம் குலையூத்து எனவும், உடல் குறுக்காக விழுந்த இடம் குறுக்குமலை எனவும் பெயர் பெற்றன.இன்றும் இந்தப் பகுதியில் இந்தப் பெயர்கள் வழக்கத்திலுள்ளன.

வங்கிசபுரிக்கு அருகில் வேகவதி என்ற ஆறு ஓடிக் கொண்டிருந்தது.இந்த ஆறு மாணிக்கமலைத் தொடரிலிருக்கும் தலையாறு எனுமிடத்தில் மூங்கில் காடுகளுக்கிடையே பாய்கிறது.அசுரனைக் கொன்ற அம்மன் யௌவன வடிவம் கொண்டு இந்நதி அருகில் தவமிருந்தாள்.அசுரனைக் கொன்ற பாவம் அம்மனுக்கு நீங்குவதற்காக சப்த கன்னியர்கள்,தெய்வப் பெண்கள்,துர்க்கை அனைவரும் சேர்ந்து ஆயிரத்தெட்டு தங்கக் குடங்களில் நீரெடுத்து வாசனைத் திரவியங்களுடன் மஞ்சளும் கலந்து அபிசேகம் செய்தனர்.

கன்னித் தெய்வமாய் பொலிவுறும் காமாட்சியம்மனுக்கு அபிஷேகம் செய்த மஞ்சள் நீர் ஆற்றில் கலந்ததால் வேகவதி ஆறாக இருந்த ஆறு #மஞ்சளாறு எனப் பெயர் மாற்றமடைந்தது.
அம்மன் தலையாற்றின் மூங்கில் காடுகளில் தவமிருந்த இடத்தில் சிறிய கோவில் கட்டப்பட்டுள்ளது.இது“அம்மா மச்சு”என்று அழைக்கப்படுகிறது.

சிறப்புகள்

கோவிலில் அடைத்த கதவிற்கு முன்பாகவே பூஜை செய்யப்படுகிறது.
கோவிலின் குச்சுவீடு கலசம் (கர்ப்பகிருக கலசம்) தரிசனம் சிறப்பான ஒன்றாக உள்ளது.
அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் தேங்காய் உடைக்கப்படுவதில்லை.பழம் உரிக்கப்படுவதில்லை.அன்ன நைவேத்தியம் செய்யப்படுவதில்லை.
கோவிலில் நெய் விளக்கு தீபம் மட்டுமே ஏற்றப்படுகிறது.விளக்குக்காகப் பக்தர்களிடம் காணிக்கையாகப் பெறப்படும் நெய் இங்குள்ள மண்பானைகளில் ஊற்றி வைக்கப்படுகின்றன.இந்த நெய்யிற்கு எறும்பு,ஈ,வண்டு என்று எதுவும் வருவதுமில்லை, மொய்ப்பதும் இல்லை.
திருவிழாக் காலத்தில் கோவிலில் அம்மனுக்குக் காணிக்கையாகச் செலுத்தப்படும் நெய் சேகரிப்புக்காக சுமார் ஐம்பது மண்பானைகள் வைக்கப்படுகின்றன.இவையனைத்தும் எட்டு நாட்கள் திருவிழாவில் நிரம்பி விடுகின்றன.
தேவதானப்பட்டியைச் சுற்றிலுமுள்ள சில கோவில்களுக்கு இங்கிருந்து நெய் மற்றும் நைவேத்தியப் பொருட்கள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.
வருடத்திற்கு ஒருமுறை கோவிலின் குச்சு வீடு கலசத்திற்குக் கூரை வேயப்படும் போது ராஜகம்பளம் சாதியினர் தங்கள் கண்களைத் துணியால் கட்டிக் கொண்டு தான் காமாட்சிப் புல்லால் கூரை வேய்கின்றனர்.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் போன்றே இங்கும் பூஜை மண்டபத்தின் முன்பு கௌளி சின்னம் (பல்லியின் சின்னம்) பொறிக்கப்பட்டுள்ளது.இங்கும் கௌளி குறி கேட்டல் முக்கியமான ஒன்றாக உள்ளது.
ராஜகம்பளம் சாதியைச் சேர்ந்தவர்கள் இங்கு பரம்பரை அறங்காவலர்களாக சுழற்சி முறையில் இருந்து வருகின்றனர்.
மூங்கில் அணையிட்டு நிறுத்தியதால் இந்த அம்மன் மூங்கிலணைக் #காமாட்சி என்று அழைக்கப்படுகிறார்.

கோவில் கதவிற்குப் பூஜை

கோவில் பூஜை செய்யும் பொறுப்பு மலை மேல் குடியிருக்கும் மன்னாடியர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.அவர்களும் பூஜைப் பணிகளைச் செய்து வந்தனர்.இந்நிலையில் மன்னாடியருக்கும், ஜமீந்தாரருக்கும் அவர்களது நிலங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இந்தக் கருத்து வேறுபாட்டில் கோபம் கொண்ட மன்னாடியார் கோவில் கதவைப் பூட்டியதுடன்“நான் அடைத்த கதவு என்றும் திறக்கக் கூடாது”என்று சொல்லிவிட்டுச் சென்றார்.அன்றிலிருந்து இன்று வரை பூட்டிய கதவு திறக்கப்படுவதில்லை.மேலும்,அடைத்த கதவிற்கு முன்பாகத் தான் பூஜை செய்யப்படுகிறது.தற்போது அந்த அடைத்த கதவின் முன்பாக நாக பீடம் அமைக்கப்பட்டு காமாட்சியம்மனுக்கு வழிபாடு செய்யப்படுகிறது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × five =

Most Popular