ஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம்- 15

405

சோழ மன்னனுக்கு பிசாசாக மாற சாபம் கொடுத்தப் பின், அதற்கு அடுத்த ஜென்மத்தில் அவன் மீண்டும் மன்னனாக பிறக்கவும் விஷ்ணு அருள் புரிந்தப் பின் பசுவும் கன்றும் மறைந்து விட்டன. அந்த பிசாசு வடிவில் இருந்த சோழ மன்னனே பின்னர் சுதர்மன் எனும் மன்னனின் மகனாகப் பிறந்த ஆகாசராஜன். அந்த ஆகாசராஜனுக்கு மகளாகக் பூமியில் கிடைத்தவளே பத்மாவதி.
முன்னரே கூறியது போல பத்மாவதி எனும் பெயரில் ஆகாசராஜன் மூலம் லஷ்மியின் துணை அவதாரமும் பூமியில் இருந்து அவதரித்து விட்டாள். பிசாசாக மாறிய சோழ மன்னனின் செய்கை மூலம் விஷ்ணு பகவானும் பூமியில் மனித உருவில் ஸ்ரீ வராஹா ஷேத்திர வனத்தில் பூமியில் தோன்றி விட்டார். இனி அவர்கள் இணைந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் லஷ்மி தேவி மீண்டும் விஷ்ணுவுடன் இணைவாள். இந்த பூமிக்கு கண்கண்ட தெய்வமாக விஷ்ணுவும் லஷ்மியும் ஒன்றிணைந்து மக்களுக்கு செல்வ மழையையும், வேண்டியதைத் தரும் கலியுக வரதராகவும் மாற வேண்டும். அந்தப் பின்னணியில் இப்போது விஷ்ணு பகவான் எழுமலையானான சரித்திரக் கதை துவங்குகிறது.

சோழ மன்னனுக்கு பிசாசாக மாற சாபம் கொடுத்தப் பின், அதற்கு அடுத்த ஜென்மத்தில் மீண்டும் மன்னனாகவும் விஷ்ணு அருள் புரிந்தப் பின் அனைவரும் சென்று விட்டார்கள். அனைவரும் சென்றுவிட்டப் பின் அடுத்த கணம் விஷ்ணு பகவான் அவர்களுக்கு தெரியாமல் ஒரு மனித உருவில் அவதரித்து தனது தலையில் ரத்தம் வழிய அடுத்த காட்சியை நிறைவேற்ற காட்டில் நடக்கலானார். தூரத்தில் ஒரு குடுசை தெரிந்தது. அதன் வாயிலில் ஒரு பெண்மணி நின்று கொண்டு இருந்தாள்.
அதன் அருகில் மனித அவதாரத்தில் இருந்த விஷ்ணு பகவான் சென்று நின்று கொண்டபோது உள்ளே இருந்து கிருஷ்ண நாமம் ஒலித்துக் கொண்டு இருந்ததைக் கேட்டதும் தன்னுடைய பூர்வ ஜென்ம நினைவு விஷ்ணுவிற்கு மீண்டும் வந்து விட்டது. ஆனாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் உள்ளே இருப்பது யார் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு ‘அம்மா… தாயே தயவு செய்து வெளியில் வருவீர்களா?’ எனக் குரல் கொடுத்தார். யாரோ ஒருவர் வந்து வாயிலில் நின்று கொண்டு தன்னை வெளியில் அழைப்பதைக் கேட்ட பெண்மணி வெளியில் வந்து அங்கு நின்றிருந்த அந்த அன்னியரை நோக்கினாள். அவர் தலையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டு இருந்ததைக் கண்ட அவள் ‘ குழந்தாய்..என்ன ஆயிற்று ?… வா..வா இங்கு வந்து அமர்ந்து கொள்.. ஏதாவது மிருகம் உன்னை அடித்து விட்டதா?… வா..உள்ளே வா… முதலில் உன் காயத்துக்கு மருந்து போடுகிறேன். அதன் பின் பேசலாம் ‘ என்று கூறியப் பின் அவர் தலைக்கு கை மூலிகையில் செய்த மருந்தைத் தடவி கட்டுப் போட்டப் பின் அவர் யார் என்பதைக் குறித்து விஜாரிக்கத் துவங்கினாள்.

வகுளா தேவிக்கு அவளே யசோதை, தானே கிருஷ்ணர் என்ற பூர்வ ஜென்ம கதையை விஷ்ணு நினைவு படுத்தினார் அவளைக் கண்டதுமே விஷ்ணுவிற்கு அவளே பூர்வ ஜென்மத்தில் யசோதையாக இருந்த தன்னுடைய தாயார் என்பது புரிந்து விட அவளிடம் கேட்டார் ‘அம்மா…என்னை உங்களுக்கு தெரியவில்லையா?….நான்தான் அம்மா, பூர்வ ஜென்மத்தில் உனது மகனாக இருந்த கிருஷ்ணர்’ என்று கூறி தன் சுய உருவைக் காட்ட அவள் ஓடி வந்து அவரைக் கட்டித் தழுவி தேம்பித் தேம்பி அழுதாள். ‘கிருஷ்ணா, இப்போதுதான் பூர்வ ஜென்ம நினைவு எனக்குள் எழுந்துள்ளது…உன்னை யார் என்று கேட்காமல் இருந்திருக்கலாம் அல்லவா….. கிருஷ்ணா நீ இந்நாள் வரை எங்கு இருந்தாய்? என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தாய்? இந்த ரத்தக் காயம் உனக்கு எப்படி ஏற்பட்டது ‘ என்று கேட்டு அழத் துவங்கியதும் அவளுக்கு ஆறுதல் கூறினார் கிருஷ்ணராக தோற்றம் தந்து நின்று கொண்டு இருந்த விஷ்ணு பகவான். அதன் பின் அவளுக்கு நடந்தக் கதை அனைத்தையும் கூறிவிட்டு, தான் இனி அங்கேயே அவளுக்கு மகனாக தங்குவதாகவும், ஆனால் அவருக்கும் அங்கு பிறந்து இருந்த லஷ்மி தேவிக்கும் திருமணம் ஆகும்வரை அந்த விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது என்றும் சத்தியம் பெற்றுக் கொண்டார்.

இங்கு ஒரு சிறிய விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆகாசராஜருக்கு மகளாக கிடைத்தது லஷ்மியின் மாய அவதாரமான வேதவதிதான். அவளும் லஷ்மி தேவியேதான் என்றாலும் முதலில் விஷ்ணுவானவர் முன் பிறவியில் வேதவதியாக இருந்த லஷ்மி தேவியை மணந்தப் பின்னரே, தவத்தில் அமர்ந்து உள்ள உண்மையான லஷ்மி தேவியை ஏற்றுக் கொள்ள வேண்டி இருந்தது. ஆகவே ஸ்ரீனிவாச அவதாரத்தில் லஷ்மி தேவியுடன் மீண்டும் இணைந்தாலும், முதலில் அவளுடைய மாய அவதாரத்தை மணந்து கொண்டப் பின்னரே லஷ்மியுடன் இணைந்தார்.

வகுளாதேவி எனும் பெயர் கொண்ட அந்தப் பெண்மணி பூர்வ ஜென்மத்தில் யசோதையாக இருந்தவள். ஆனாலும் இருவருமே இன்னொரு பிறவி எடுத்து இருந்ததினால் அவர்களுக்கு அந்த மனித உருவில் இருந்தவர்கள் செய்ய வேண்டிய சில கடமைகள் இருந்தன. விஷ்ணுவானவர் லஷ்மி தேவியை திருமணம் செய்து கொள்ளும் முன்னால், தங்குவதற்கு நல்ல இடம் வேண்டும் என்பதற்காக அருகில் இருந்த வராஹப் பெருமானின் ஆலயத்துக்குச் சென்று அவரை வேண்டிக் கொள்ளலாம் என்று கூறி விஷ்ணுவை அங்கு அழைத்துச் சென்றாள். அந்த வகுளாதேவிக்கு கோவிந்தராஜன் என்ற பெயரில் ஒரு மகனும் இருந்தார். அவரையே ஸ்ரீனிவாசருக்கு இனி உடன் பிறவா அண்ணன் என்று கூறி இருவருக்கும் வகுளா தேவி உறவை ஏற்படுத்தித் தந்தாள்.

எனக்கு காணிக்கை செலுத்தினால் தங்க இடம் தருவேன் என்று விஷ்ணுவிடம் வராகார் கூறினார்
வராஹப் பெருமானின் ஆலயத்துக்குச் சென்று அவரை வேண்டிக் கொண்டதும், விஷ்ணுவை அடையாளம் கண்டு கொண்ட வராகர் அவர் முன் தோன்றி அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். மனித அவதாரத்தில் இருந்த விஷ்ணுவும் தான் வந்தக் காரியத்தைக் கூறி விட்டு தனக்கு தங்க இடம் வேண்டும் என்று கூறியதும், வராகப் பெருமானோ தனக்கு தக்க காணிக்கை செலுத்தினால் அங்கு தங்கிக் கொள்ள தான் அனுமதிப்பதாகக் கூறினார். அது என்ன காணிக்கை?
ஒவ்வொரு அவதாரத்துக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் உண்டு. அதை அவர்கள் நிறைவேற்றிக் கொள்வார்கள். விஷ்ணுவோ ‘வராஹப் பெருமானே, என்னிடம் தற்போது லஷ்மி இல்லை என்பதினால் என்னிடம் பணம் இல்லை. ஆகவே எனக்கு இப்போது தங்க இடம் கொடுத்தால், நான் எப்போது இந்த இடத்தில் ஒரு ஆலயத்தில் குடி அமர உள்ளேனோ அந்த நேரம் வரும்போது யார் என்னை தரிசனம் செய்ய வருவார்களோ அவர்கள் முதலில் உம்மை வணங்கியப் பிறகே என்னை வந்து தரிசிக்கலாம் என்று கட்டளை இடுகிறேன். உம்மை வந்து தரிசிக்காமல் என்னை வந்து தரிசித்தால் அவர்களுக்கு என்னை தரிசித்த பலன் கிடைக்காது என்று உறுதி தருகிறேன். அதை ஏற்றுக் கொண்டு எனக்கு தங்க இடம் கொடுக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ள வராஹப் பெருமான் அதை ஏற்றுக் கொண்டு அவரை அங்கேயே தங்கிக் கொள்ள அனுமதித்தார். அதனால்தான் இன்றும் திருப்பதிக்கு செல்பவர்கள் முதல் நெய்வித்தியத்தை வராஹருக்குப் படைத்த பின்னரே வெங்கடேசப் பெருமானுக்கு படைக்க வேண்டும் என்ற நியதி ஏற்பட்டது. அதுவே வராஹப் பெருமான் விஷ்ணுவிடம் இருந்து பெற்றுக் கொண்டக் காணிக்கை.

இந்த இடத்தில் ஒரு விளக்கத்தைக் கொடுக்க வேண்டி உள்ளது. விஷ்ணுவை அடையாளம் தெரிந்து கொண்டு விட்ட வராஹர் எப்படி அவருக்கு இடம் கொடுக்க மறுக்க முடியும்? வராஹரே விஷ்ணு எடுத்த அவதாரம்தானே என்ற கேள்வி எழும். நியாயமான கேள்விதான். இந்தக் கதையில் தற்போது விஷ்ணுவின் நிலை அவர் ஒரு மானிட உருவம் படைத்தவர். அந்த மானிட உருவத்துக்கு ஏற்றாற்போலத்தான் பூமியில் நிகழ்வுகளை நடத்திக் கொள்ள முடியும். நான்தானே விஷ்ணு என்று எண்ணிக் கொண்டு அவரால் எதையும் செய்ய இயலாது. இது நிர்ணயிக்கப்பட்ட நியதி. அதே நேரத்தில் முன்னரே நான் கூறி உள்ளது போல ஒரு கடவுளினால் ஒரே நேரத்தில் பல அவதாரங்களை எடுத்துக் கொண்டு இருக்க முடியும் என்பதும் நியதி. வராஹராக உள்ள விஷ்ணுவின் அவதாரத்துக்கு என சில தனிப்பட்ட சக்திகள் அந்த அவதாரத்தில் உண்டு. அதை விஷ்ணுவினாலும் தடுக்க முடியாது. காரணம் அந்த அவதாரம் எடுக்கும்போதே அதற்கென சில நியமங்கள், நியதிகள், சக்திகள் போன்றவற்றுடன்தான் அந்த அவதாரத்தை எடுக்கிறார்கள். இப்போது மனித அவதாரத்தில் உள்ள விஷ்ணு பகவான் வராஹரின் முன்னால் சக்தி அற்றவராகவே இருப்பார். ஆகவே வராகார் வைக்கும் கோரிக்கைகளை விஷ்ணு பகவான் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். அதனால்தான் வராஹராகவே உள்ள விஷ்ணுவும், ஸ்ரீனிவாசராக உள்ள விஷ்ணுவும் ஒருவரே என்றாலும் கூட, ஸ்ரீனிவாச அவதாரத்தில் உள்ள விஷ்ணு அந்த அவதாரத்தில் வேறானவர். அது போலவேதான் அவர் ஆலயத்தின் அருகில் உள்ள சன்னதியில் உள்ள வராஹரும் வேறானவர்தான். அதனால்தான் வராஹர் அவதாரத்தில் உள்ள விஷ்ணுவிற்கு மரியாதை கிடைத்தப் பிறகே (நெய்வித்தியம் படைத்தலில்) ஸ்ரீனிவாசர் அவதாரத்தில் உள்ள விஷ்ணுவும் மரியாதை பெறுகிறார். இவை அனைத்துமே பரப்பிரும்மனின் நாடகத்தின் தவிர்க்க முடியாத காட்சிகள்.

…………தொடரும்