விஜயநகரப் பேரரசர்களின் ஆட்சிக்கு உள்பட்ட ஹம்பி எனும் சின்னஞ்சிறு கிராமம். அங்கே இருந்த வீடுகளுள் ஒன்றிலிருந்து வேத மந்திரங்களின் ஒலி எழுந்து, அந்த கிராமம் முழுதும் நிறைந்து கொண்டிருந்தது. அதற்குக் காரணமான திம்மண்ணபட்டர், தம் வீட்டின் நடுவே அமர்ந்து, தன்னைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களுக்கு, வேதத்தினை சொல்லித் தந்து கொண்டிருந்தார். வேத விற்பன்னரான திம்மண்ணபட்டர், வீணையை மீட்டி இனிமையாக நாதம் எழுப்புவதிலும் வல்லவர். வேதமும், வீணை நாதமும் இணைந்து ஒலித்துக் கொண்டிருந்தாலும், வேதனையும் சேர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது, திம்மண்ணபட்டரின் மனதில். வேதஒலியும், வீணை இசையும், ஒரு குழந்தையின் அழுகைக் குரலுக்கு ஈடாக முடியுமா? அப்படியோர் அழுகைச் சங்கீதம் தம் வீட்டில் ஒலிக்கவில்லையே…! என்பதுதான், அவரது வேதனைக்குக் காரணம். வேதனையைப் போக்கவல்லவன், வேங்கடவனே என நினைத்த திம்மண்ணர், மனைவி கோபாம்பாளையும் அழைத்துக்கொண்டு, திருப்பதிக்குச் சென்றார்.
வேங்கட அசல பதியை வேண்டினார். திருமாலின் அருளால், திருமகள் ஒருத்தி பிறந்தாள் திம்மண்ணருக்கு. வெங்கடம்மாள் என்று பெயரிட்டு வளர்த்தார். மீண்டும் திருப்பதிமலையானை வேண்டினார். “திருப்தியாக வாழ்” என்று, ஆண் மகவு ஒன்றை அருளினான், திருமலையான். குருராஜன் எனப் பெயரிட்டார்கள் குழந்தைக்கு. அந்தச் சமயத்தில், ஹம்பியை விட்டு புவனகிரி எனும் கிராமத்திற்குக் குடி வந்திருந்தார் திம்மண்ணா. சிறிது காலத்திற்குப் பின், “மனை சிறக்க மகப்பேறு” தந்த மலையப்பனுக்கு நன்றி சொல்லி வணங்க, மனைவியோடு மீண்டும் திருமலைக்குச் சென்றார், திம்மண்ணா. ஆனால், திருப்பதி சென்றதும் அவர் மனதுள் ஏதோ உள்ளுணர்வு தோன்றியது.
அதனால், வேங்கடவனை வேண்டினார், “”மாதவா… மாதவம் புரிந்தோர் பெற்றிடும் பேறு போல், மகா மேதையான மகனைப் பெற்றிடும் வரம் தா!”” வேண்டுவோர் வேண்டுவன தருபவன் அல்லவா வேங்கடவன்! திம்மண்ணர் விஷயத்திலும், அப்படியே செய்தான். அதன் பலனாக, 1598_ம் வருடம், பால்குண ஆண்டு, சுக்லபட்ச சப்தமி, வியாழக்கிழமையன்று, மிருகசீர்ஷ நட்சத்திரத்தில், திம்மண்ணபட்டர், கோபாம்பாள் திருமனையில், ஆண்குழந்தை ஒன்று பிறந்து, அழுதது! அந்த அழுகை, திம்மண்ணர் மீட்டும் வீணை இசையை வீணாக்கிவிட்டு சங்கீதமாய் எதிரொலித்தது. வெங்கடேசன் அருளால் பிறந்த குழந்தைக்கு, அவன் பெயரையே சூட்டி, “”வெங்கட நாதா”” என்று வாய்நிறைய அழைத்தார், அப்பா! பாலூட்டி, தாலாட்டி, சீராட்டினாள் அம்மா…! நாட்கள் நகர்ந்தன…
குழந்தை வெங்கடநாதனுக்கு பல் முளைக்க ஆரம்பித்தது… கூடவே, சொல்லும் முளைத்தது… அதுவும், வேதச் சொல். அதனால், முத்துப் பற்கள் முளைத்து அவனுக்கு மூன்று வயது நிரம்பியதுமே வித்யாப்பியாசம் செய்துவைத்தார், திம்மண்ணர். சரஸ்வதி இருக்குமிடத்தில், தனக்கு இடம் கிடைக்குமோ கிடைக்காதோ என நினைத்தோ என்னவோ, திம்மண்ணரின் வீட்டுக்குள் நுழைய மகாலட்சுமி தயங்கினாள். எனவே, குழந்தை வெங்கடநாதனின் கல்விஞானம் வளர்ந்தபோது, வீட்டில் வறுமையும் சேர்ந்து வளர்ந்தது. குழந்தைகள் கஷ்டப்படுவதைப் பார்க்கப் பிடிக்காமலோ என்னவோ, சீக்கிரமே திருமாலின் திருவடி சேர்ந்தார் திம்மண்ணபட்டர். அம்மாவுடன் அண்ணன் குருராஜர் தங்கிவிட, அக்கா வெங்கடம்மாளின் புகுந்த வீட்டுக்கு அனுப்பப்பட்டான் வெங்கடநாதன்.
வெங்கடம்மாளின் கணவர் லட்சுமி நரசிம்மாசாரியார், மைத்துனனை மகனாகவே பாவித்து பாசம் காட்டி வளர்த்தார். அதோடு, ஆசானாக இருந்து அனைத்தையும் போதித்தார். கற்பிக்கப்பட்ட அனைத்தையும் கற்பூரமாய்ப் பற்றிக் கொண்டான், வெங்கடநாதன். ஆண்டுகள் வளர்ந்தன… வெங்கடநாதனின் அறிவு வளர்ந்தது… கூடவே, அவனும் வளர்ந்தான். தம்பியைப் பார்க்க வந்த குருராஜர், அவனது அறிவுத் திறமையைப் பார்த்து மகிழ்ந்தார். சரஸ்வதி கடாட்சம் நிரம்பப் பெற்றிருந்த வெங்கடநாதனுக்கு, “சரஸ்வதி” என்ற பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார். இல்லறத்தில் இறங்கிய பின்னரும், இரை தேடலைவிட, இறைதேடலே பிடித்திருந்தது வெங்கடநாதனுக்கு.
அதனால், ஏற்ற குருவைத் தேடி அலைந்தவன், கும்பகோணத்திற்குச் சென்றான். அங்கே, ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் எனும் மத்வ மகானைக் கண்டான். அவரே தமக்கு ஏற்ற குரு எனக் கொண்டான். ஒளி இருக்கும் திசை நாடி, செடி வளைந்து செல்வதுபோல், ஞானஒளி நிறைந்திருந்த வெங்கடநாதன் வந்தது முதல், அவன்மேல் தனி அன்பு காட்டினார், சுதீந்திரர். அதுவே, மற்ற சீடர்களின் பொறாமை விதைக்கு உரமிட்டது. அதனால், எப்போதும் உறங்குகிறான் வெங்கடநாதன் என்று, சுதீந்திரரிடம் பழி கூறினர். கோள் மூட்டியவர்களின் வார்த்தைகளின் உண்மை அறிய அன்று இரவு, வெங்கடநாதன் என்ன செய்கிறான் எனப் பார்க்கப் போனார், குருதேவர். அங்கே, பழைய ஓலைகளை தீமூட்டி எரித்து, அந்த வெளிச்சத்தில் எதையோ எழுதிவிட்டு, ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் வெங்கடநாதன். அவன் விழித்துக் கொண்டு விடாதபடி, மெதுவாக அருகே சென்றார், சுதீந்திரர். எழுதிவைக்கப்பட்டிருந்த சுவடியை எடுத்துப் பார்த்தார். சுவடியில் வெங்கடநாதன் எழுதிவைத்திருந்ததைப் படித்ததுமே அவருக்குப் புரிந்து போனது, உறங்கிக் கொண்டிருக்கும் அவன், உலகை விழிப்புறச் செய்யப் பிறந்தவன் என்பது. அன்போடு தன் போர்வையை அவனுக்குப் போர்த்திவிட்டுப் போனார். விடிந்தது. விழித்தெழுந்த வெங்கடநாதன், திடுக்கிட்டான். “தான் எழுதிவைத்த சுவடியைக் காணவில்லை… அதைவிட அதிர்ச்சி, குருநாதரின் போர்வை, தன்மீது போர்த்தப்பட்டுள்ளது…!” பதட்டத்தோடு சென்று, குருநாதரிடம் சொன்னான் வெங்கடநாதன். தாமே அவற்றைச் செய்ததாகச் சொன்னார், சுதீந்திரர். அதோடு, மற்ற சீடர்களுக்கும் அவனைப்பற்றி எடுத்துச் சொல்லி விளக்கினார். வெங்கடநாதன் தங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதை உணர்ந்து தலைகுனிந்தார்கள் அவர்கள். கற்க வேண்டியவற்றை கசடறக் கற்றுத் தேர்ந்த வெங்கடநாதன், இல்லறத்தை நல்லறமாக நடத்த எண்ணி, குருவிடம் அனுமதி பெற்று புவனகிரிக்குத் திரும்பினான். மனைவியுடனான மகிழ்வான வாழ்வின் பயனாக ஆண்மகவு ஒன்று பிறந்தது வெங்கடநாதனுக்கு. தொடர்ந்த வறுமையின் கொடுமையைத் தாங்க முடியாமல் தவித்த வெங்கடநாதன், குரு சுதீந்திரரையே தேடிப்போய் வழிகேட்டான். பிறரிடம் பொருள் கேட்டுத் தேடிப் போக வழி தெரியாத அவன் நிலை உணர்ந்து, போதுமான பணம் கொடுத்து அனுப்பினார் குருதேவர். அதேசமயம், அவர் உள்மனம் ஒன்றைச் சொன்னது.
“வெங்கடநாதன், எனக்குப்பின் மத்வ பீடத்தை அலங்கரிக்க வேண்டியவன்!” உள்ளம் சொன்னதை மறைத்துக் கொண்டு, உவகையோடு அவனை ஊருக்குச் செல்ல அனுமதித்தார் சுதீந்திரர். சிலகாலம் சென்றது… சுதீந்திரரின் உடல்நலம் குன்றியது. தம் சீடர்களை அழைத்து, “”எனக்குப்பின் இந்த பீடத்திற்கு தலைமை வகிக்கும் தகுதி, வெங்கடநாதனுக்கு மட்டுமே உள்ளது. அவனை அழைத்து வாருங்கள்!”” என்றார் சுதீந்திரர். கும்பகோணம் வந்து குருதேவரைப் பணிந்த வெங்கடநாதன், துறவறம் ஏற்க மறுத்தான். பாசம், பந்தம் எனும் கட்டுகள் தன்னைப் பிணைத்திருப்பதாகச் சொன்னான்.அப்போதைக்கு அதனை ஏற்று, வெங்கடநாதனைத் திருப்பி அனுப்பினார், சுதீந்திரர். ஆனால், அவருக்கு நம்பிக்கை இருந்தது_வெங்கடநாதன் நிச்சயம் திரும்பிவந்து சந்நியாசம் ஏற்பான் என்று. அதனால், யாதவேந்திரர் என்ற சீடரிடம் தலைமைப் பொறுப்பை சிலகாலம் ஒப்படைத்தார். சுதீந்திரரின் நம்பிக்கை சீக்கிரமே பலித்தது. மீண்டும் சுதீந்திரரின் உடல் நலம் பாதிக்கப்பட, இப்போதும் வெங்கடநாதன் அழைத்து வரப்பட்டான். இந்தமுறை சந்நியாசம் ஏற்க, அவன் மறுக்காமல் சம்மதித்தான். அதேசமயம், மகனுக்குத் தந்தை ஆற்ற வேண்டிய கடமையைச் செய்துவிட்டு வருவதாகக் கூறி குருவிடம் அனுமதி பெற்றுத் திரும்பினான். விரைவிலேயே, தன் மகனுக்கு உபநயனம் செய்துவைத்துவிட்டு, இல்லாளிடமும் சொல்லாமல் வந்து சந்நியாசம் பெற்ற வெங்கடநாதனுக்கு, “ராகவேந்திர தீர்த்தர்” என்று தீட்சா நாமம் சூட்டப்பட்டது. கரம் பிடித்த கணவன், சந்நியாசம் பெற்றுவிட்டார் என்பதை அறிந்த சரஸ்வதி, வாழ்வை வெறுத்து, கிணற்றில் குதித்தாள். பேயுருவாகி கணவரைத் தேடிப்போனாள்.
