அகஸ்தியர் சரணம்!
ஓம் அகஸ்திய நாதனே
ஸ்ரீ சற்குரு நாதனே
ஓம் குருமுனி தேவனே
ஸ்ரீ குருமண்டல தெய்வமே
பொதிகாசலமோ நின் நாமம்
தணிகாசலமோ குரு நாதம்
குருவே குமரா என்றோதும்
குருமுனி பாதம் நமஸ்காரம்
சாய்ந்த லிங்கமோ சதுரகிரி
ஆய்ந்து வந்ததோ தீர்த்தகிரி
தீர்த்தமலையின் அடிவாரம் எழுந்த
உமக்கு நமஸ்காரம்
பொதிகை உமக்கு தலைமையகம்
அம்பாசமுத்திரம் துறைமுகமாம்
என்பால் வந்தாய் குருமண்டலம்
அகஸ்திய சுவாமிக்கு நமஸ்காரம்
சின்மய முத்திரை பிடித்தபடி
அன்புடன் புகுந்தாய் தீர்த்தகிரி
தீர்த்தமலையின் அடிவாரம்
உறையும் குருவே நமஸ்காரம்
சீடன் புலஸ்தியன் செவி மடுக்க
பாடம் நடத்திய குரல் தொனிக்க
வந்தாய் இந்த குருமண்டலம்
எந்தாய் உமக்கு நமஸ்காரம்
குற்றாலத்துறை நாதரப்பா
கற்றாய் அவரிடம் ஞானமப்பா
கற்றதை எமக்கும் எடுத்துரைக்க
வந்தாய் அன்பாய் நமஸ்காரம்
திருநீர் கடலில் மூழ்கி நின்று
திருப்பாற் கடலை கண்டவரே
அறப்பால் ஊட்ட அன்னையுடன்
எழுந்தாய் எந்தை நமஸ்காரம்
போகர் தொடங்கி கோரக்கர்
சேனை சூழ இப்பக்கம்
லோகம் வாழ எழுந்தருளும்
சித்தர்கள் தலைவா நமஸ்காரம்
சாமி சிவனிடம் கையேந்தி
தாமிரபரணி நதி வாங்கி
தென்னக தாகம் தீர்த்த முனி
என்னகம் இருந்து அருள்க இனி
செந்தமிழ் இலக்கணம் படைத்தவரே
விந்திய தலைக்கனம் முடித்தவரே
விந்தை நின் வருகை இவ்விடமே
எந்தையை விடுமோ எம் கரமே
அப்பஞ் சாமி சுப்பனிடம்
அருந்தி வந்தீர் ஞான ரசம்
ரசத்தின் சாரம் உரைக்க வந்த
குருவை விடுமோ எம் கரமே
ஆண்டவன் தர்மம் எதுவென்று
ஆண்டியின் தர்மம் இதுவென்று
இலக்கணம் வகுத்த தவமுனியே
இருப்பாய் எங்கள் நா நுனியே
நீரின் மேல் ஒரு மாமாங்கம்
நிஷ்டையில் மிதந்த உனது அங்கம்
யாரார் கண்டார் யாரறிவார்
அறிவேனோ நான் குருநாதா
அகஸ்த்திய பெருங்கடல் அதிசயங்கள்
அகப்படுமோ வெறும் அற்பருக்கு
நகத்தளவேனும் அறிவதற்கு
அருள்வாய் மாதவ முனிநாதா
சோமன் உனக்கு தவச்சோலை
ராமனுக்கு உரைத்தீர் சிவகீதை
பாமரர் யாமும் வேண்டுகின்றோம்
பகர்வீர் ஐயா ஒரு பாதை
அஞ்சனம் மை அதை வடித்தெடுத்து
கோசலை மகனுக்கு அதை கொடுத்து
அஞ்சேல் என்று அருளியவா
தஞ்சம் என்பாய் தாங்கிடவா
பாடும் வண்டாய் உருமாறி
காடுகள் தோறும் தேன் தேடி
செய்தாய் சிவனுக்கு அபிஷேகம்
தேன் போல் காண்பீர் என் பாசம்
எண்ணாயிரம் பா வியாசர் சொல்ல
பன்னி ராயிரம் நீங்கள் சொல்ல
காண முடியுமோ அதன் ஆழம்
காண துடிக்குதே உ(ய)யிர் யாவும்
வனமதில் பத்ரகாளி உலா
வனப்புடன் சொன்னது நின் தமிழா
கொற்றவை அவளின் சிறு குழந்தாய்
நற்றமிழ் அறிவை தா விருந்தாய்
கல்லால மரத்தின் கீழ் இருந்து
மல்லார் வாதுக்கு பதில் உரைத்து
தென்முகக் கடவுள் போல் இருந்தாய்
தேனெனும் ஞானம் நா விருந்தாய்
குடித்தது ஏழு பெருங்கடலை
முடித்தது சூது அரக்கர்களை
எமை படுத்தது சாமி பல கவலை
நடத்திடு மீண்டும் சித்துக்களை
அத்திரி மலையில் இசை வார்த்து
அசுரன் ராவணன் தலை கவிழ்த்து
ஆணவம் வென்ற அரு முனியே
கானத்தில் உறைவதும் உன் பணியே
பாலாம்பிகையை தியானிக்கும்
பாதை தன்னை அறிவிக்கும்
வேலாயுதனின் சீடா வா
காலன் பயத்தை கரைத்திட வா
மான் தோல் புலித் தோல் ஆசனங்கள்
பெருமானைத் தேடும் யோகங்கள்
வகுத்தாய் உரைத்தாய் வர முனியே
அகத்தில் அமைதியைத் தா குருவே
சித்தர் பெருமக்கள் பாடி வைத்த
சத்துள்ள நூல்களின் மதிப்புரைத்த
அத்தனின் குழந்தாய் அகஸ்தியரே
சித்தத்தில் தெளிவை நீ அருள்வாய்
குகையின் உள்ளே தவயோகம்
சிவ சிவ என்றே ஒலி கூட்டும்
பஞ்சாட்சரத்தின் பாலகனே
பஞ்சம் முடிக்க வா உடனே
குருந்த மரத்தில் சூட்சுமமாய்
இருந்து அருளும் கும்பமுனி
வருந்தி அழைக்கும் மானிடருக்கு
மருந்தாய் வருக மூத்த முனி
கற்பம் தாது செந்தூரம்
கற்பித்த மருந்தோ கடலாகும்
ஆயுள் வேத ஆண்டவனே
தாயாய் இருந்து நோய் நீக்கு
ஜீவ நாடியில் படரும் நிகழ்வுகளை
பாடலில் பதியும் குருநாதா
கோடி கோடி மாந்தருக்கும்
நலமே சொல்வாய் குணசீலா
நர சிங்கம் உறையும் ஸ்தல முரைத்து
அவர் அங்கம் புரியும் நல முரைத்து
துரை சிங்கம் ஆன தூய முனி
உன் அரங்கம் இனிமேல் இவன் மேனி
சிவனை மெத்தப் படித்த முனி
அவனில் ஒருமுகம் ஆன முனி
இவனில் இறங்கி வர வேண்டும்
அவனியில் நாத மழை வேண்டும்
அண்ணாமலையான் அருட்சுடரை
கண்ணில் ஏந்தும் பெருமானே
அன்னாய் ஆர்த்த அருந்தமிழை
உன் முன்னால் கிடக்கும் எமக்கருள்வாய்
கார்த்திகை தீபம் இவன்தானோ
கேட்ட பின்னாலே கனி வீசி
வார்த்தனையே நல் அருளாசி
மறப்பேனோ அந்த திருக்காட்சி
எங்களின் குருவை தெண்டனிட்டால்
தென்படுமே அந்த மாமேரு
கொங்கணர் உரைத்த வாக்கு இது
நான் மேருவை காண்பது எப்போது?
அஷ்டமா சித்தி அளந்து வைத்து
இஷ்டமானவரை அறிய வைத்து
சித்து விளையாடும் மாமுனியே
உத்தமர் தமக்கு அருள் முனியே
நியாயமானதொரு கோரிக்கை
சுவாமி உன் மீது நம்பிக்கை
வைத்தவர் தம்மை காப்பவரே
அப்பா என்றதும் வா உடனே
தீர்த்த மலை கண்ட உன் கோவில்
எத்தனை எத்தனை சித்தாடல்
அத்தனையும் சொல்ல ஆற்றலுண்டோ
ஐயா! எனக்கருள் அகஸ்த்தியரே!
காட்டில் தொலைந்த கால்நடையை
கூட்டி வந்துவிட்ட அற்புதத்தை
எப்படி உரைப்பேன் குருநாதா
சொன்னால் உலகம் உருகாதா!
அகஸ்தியர் ஆலய திருநீறு
அகற்றிய ரோக ரணம் நூறு
வாராது வந்த வைத்தியனே
ஊரோடு உரைப்பேன் உன் திறனே
பாலகன் பாலகி வேண்டுமென்று
காலை பிடித்தவர் கதைகளுண்டு
அகப்பை நிரப்பி மகப்பேறு
தந்தது ஐயா! உன் வரலாறு
யாக சாலை சுடர் கொழுந்தாட்டம்
நாக தேவதையின் நடமாட்டம்
நடத்தும் கும்பமுனி அருள்வீச்சம்
நாளை உலகுக்கு வழிகாட்டும்
நேரம் தோறும் மாறி வரும்
லோபாமுத்ரையின் முகபாவம்
பேசும் அம்மா அவள் என்று
உணர்ந்தோர் விழியில் தீர்த்தம் வரும்
குணங்குடி பல ரிஷி தேடி வரும்
குருமண்டலத்தின் திருப்பாதம்
கண்டால் தமக்கு வரும் யோகம்
இது சத்தியம் சத்திய வாக்காகும்
வாழ்க அகஸ்தியரின் திருநாமம்
வாழ்க அகஸ்தியன் திருப்பாதம்
வாழ்க நின் ஸ்ரீ குருமண்டலம்
வாழ்க வளமுடன் வையகமே
ஓம் அகஸ்திய நாதனே
ஸ்ரீ சற்குரு நாதனே
ஓம் குருமுனி தேவனே
ஸ்ரீ குருமண்டல தெய்வமே
ஓம் குருநாதா அகஸ்தியரே
குருமுனி நாதா அகஸ்தியரே
ஓம் குருநாதா அகஸ்தியரே
குருமுனி நாதா அகஸ்தியரே
ஓம் குருநாதா அகஸ்தியரே
குருமுனி நாதா அகஸ்தியரே
ஓம் குருநாதா அகஸ்தியரே
குருமுனி நாதா அகஸ்தியரே
ஓம் குருநாதா அகஸ்தியரே
குருமுனி நாதா அகஸ்தியரே
ஓம் குருநாதா அகஸ்தியரே
குருமுனி நாதா அகஸ்தியரே
ஓம் குருநாதா அகஸ்தியரே
குருமுனி நாதா அகஸ்தியரே
ஓம் குருநாதா அகஸ்தியரே
குருமுனி நாதா அகஸ்தியரே
ஓம் அகஸ்தியாயை வித்மஹே பொதிகைவாசாய தீமஹி
தந்நோ; மஹா குரு பிரசோதயாத்;
ஓம் லோபாமுத்ராயை வித்மஹே பொதிகைவாசாய தீமஹி
தந்நோ; மஹா மாதா பிரசோதயாத்;
