Saturday, October 28, 2023
HomeSlogamஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்பொருள் விளக்கத்துடன்- நாமம் 3.

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்பொருள் விளக்கத்துடன்- நாமம் 3.

*ஸ்ரீமத் ஸிம்ஹாசனேச்வரீ*

*श्रीमद्सिम्हासनेश्वरी*

மிருகங்களுக்குள் சிங்கம் ப்ரதானமாகையால் அரசர்கள் உட்காரும் ஆஸனமானது சிங்கம் போன்ற உருவங்களின் மேல் வைக்கப் பட்டிருக்கும். அதனால் ஸிம்ஹாஸனம் என்று பெயர்.

அம்பாள் மஹாராக்ஞீ என்று சொல்லப்பட்டதாலும், ராஜாவுக்கு லக்ஷணம் ஸிம்ஹாஸனம் ஆனபடியாலும், அடுத்தாற் போல ஸிம்ஹாஸனேஶ்வரீ என்ற நாமம் சொல்லப்பட்டது.

அவள் ஸ்ரீ. அவள் புரம் ஸ்ரீபுரம். அவளது சக்ரம் ஸ்ரீசக்ரம். அதேபோல் அவளது சிம்ஹாஸனமும் ஸ்ரீமத் ஸிம்ஹாஸனம்.

அவள் அப்படிப்பட்ட ஒரு ஸ்ரீமத் ஆன ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்து கொண்டு உலகின் ஈஸ்வரியாக விளங்குகிறாள். அம்பாள் ப்ரபஞ்ச ஸாம்ராஜ்யலக்ஷ்மியோடு கூடிய ஸிம்ஹாஸனத்திற்கு ஈஶ்வரீ.

அரசன் நகர்வலத்தில் மக்களுடன்‌ கலந்துரையாடும்போது அவனது தயாள கருணா குணங்களைக் காண்பிப்பான். ஆனால் அதே அரசன் ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்திருக்கும்போது மிகுந்த கண்டிப்புடனும் அந்த ஆஸனத்தை நெருங்குவோருக்கு காலனைப் போன்று பயமளிக்கக் கூடியவனாகவும்‌ இருப்பான். நகர்வலத்தில் வந்த அரசன்தானா அது என்று ஆச்சர்யம் அளிக்கும் விதம் இருப்பான். அவனது ஸிம்ஹாஸனம் யாரும் அவ்வளவு எளிதாக அணுக முடியாத பய உணர்ச்சி ஊட்டக்கூடியதாக இருக்கும். ஆஸனேஷு ஸிம்ஹம. அதாவது ஆஸனங்களில் உயர்ந்தது சிம்மம். சிங்கத்தின் மீது யாரும் அமர முடியாது.

ஒரு நாடாளும் அரசனின் ஸிம்ஹாஸனமே இவ்வளவு கட்டுப்பாடும் பயமும் ஊட்டக் கூடியதாக இருந்தால், உண்மையிலேயே ஸிம்ஹத்தை தனது வாஹனமாகக் கொண்டு துர்க்கை தன்னுடைய ஒரு அம்சமாகவும், அனைத்துலகங்களையும் படைத்து, காத்து, அதை கடைசியில் தன்னில் ஒடுக்கிக் கொள்ளும் அன்னையாகவும் இருக்கும் பராசக்தியின் ஸிம்ஹாஸனம் எவ்வளவு அடக்கும் சக்தி கொண்டது. எனவே அது ஸ்ரீமத் ஸிம்ஹாஸனம்.

அரசர்கள் தங்களுக்கு ஸ்ரீ அன்னையின் சிறிது அருள் கிடைத்துவிட்டாலே உலகைத் தன் ஆளுகைக்குள் கொண்டு வருகிறார்கள். அப்படி என்றால் அத்தனை சக்தியையும் தன்னிடம் கொண்டிருக்கும் அம்பாள் உலகை ஆள்பவள் எப்படி அமர்ந்திருப்பாள். ஈஸ்வரீ அவள்.

தேவீ வழிபாட்டில் நவாவரண பூஜையில் பிந்து ஸ்தானத்தில் ஐந்து படிகள் கொண்டதான ஒரு ஸிம்ஹாஸனத்தை பாவனை செய்து அதன் படிகளில் முறையே ஸ்ரீவித்யா லக்ஷ்மீ, ஸ்ரீலக்ஷ்மீலக்ஷ்மீ, ஸ்ரீமஹாலக்ஷ்மீ, ஸ்ரீத்ரிசக்திலக்ஷ்மீ மற்றும் ஸ்ரீஸர்வஸாம்ராஜ்யலக்ஷ்மீ என்று ஐந்து லக்ஷ்மீ தேவதைகளை வணங்கிப் பின் தேவியை வழிபடுவது முறை. ஸ்ரீதேவீ உட்காரும் ஸிம்ஹாஸனம் இந்த ஐந்து லக்ஷ்மீக்களுடன் கூடியதால் அது ஸ்ரீமத் ஸிம்ஹாஸனம் ஆகிறது.

முதல் மூன்று நாமங்களாகிய ஶ்ரீமாதா, ஶ்ரீமஹாராக்ஞீ, ஶ்ரீமத் ஸிம்ஹாஸனேஶ்வரீ இவைகளில் முறையே ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் (படைத்தல், காத்தல், அழித்தல்) ஆகிய மூன்றும் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஓம் ஸ்ரீமத் ஸிம்ஹாசனேச்வர்யை நமஹ !

அம்பிகையின் திருவடிகளில் சரணம்…..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + six =

Most Popular