ஸ்ரீராமநவமி ஸ்பெஷல்

226

அம்பொனெடு மணிமாட அயோத்தி யெய்தி அரசெய்தி அகத்தியன்வாய்த் தான்முன் கொன்றான்
றன்பெருந்தொல் கதைக்கேட்டு மிதிலைச் செல்வி உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள்
செம்பவளத் திரள்வாய்த்தன் சரிதை கேட்டான் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
எம்பெருமான் றஞ்சரிதை செவியால் கண்ணால் பருகுவோ மின்னமுதை மதியோ மின்றே.(748)
அழகிய உயர்ந்த பொன்னையும் இரத்தினங்களையுங் கொண்டு அமைக்கப்பட்ட உபரிகை வீடுகளையுடைய அயோத்யா நகரத்துக்கு மீண்டு வந்து
அரசாட்சியை அடைந்து தன்னால் முன்பு கொல்லப்பட்டவனான இராவணனுடைய பெரிய பூர்வ வ்ருத்தாந்தங்களை யெல்லாம்
அகஸ்திய மகாமுனிவன் வாயாற்சொல்லக்கேட்டு மிதிலா நகரத்தில் தோன்றிய பிராட்டி உலக முழுவதும் வாழும்படி பெற்ற
தன் பிள்ளைகளான குசலவர்களுடைய சிவந்த பவழத்துண்டு போன்ற வாயினால்
தனது சரித்திரமான ஸ்ரீராமாயணத்தை
கேட்டருளினவனான
தில்லைநகர் திருச்சித்ரக்கூடம் தன்னுள் எழுந்தருளியிருக்கிற எமது தலைவனுடைய சரித்திரத்தை
காதினாற்கேட்டு (அப்பெருமானைக்) கண்ணால் ஸேவிக்கப் பெறுவோம்யாம் (அதுவேயன்றி)
இனிய தேவாம்ருதத்தையும்
ஒரு பொருளாக நன்கு மதிக்க மாட்டோம்.