தைப்பூசம் அன்று சொல்ல வேண்டிய முருகன் ஸ்தோத்திரம்!
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீ முருகப் பெருமானின் ஸ்தோத்திரம் சொல்ல வேண்டும். தினமும் ஸ்ரீ முருகன் ஸ்தோத்திரம் சொல்வதால் தோஷம் விலகி நன்மை உண்டாகும். முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும். முருகக் கடவுளின் அடையாளப் பூ காந்தள் மலர்க் கண்ணியாகும்.
முருகன் ஸ்தோத்திரம்:
சங்கரன் மகனே சரவண பவனே
ஐங்கரன் துணைவனே அமரர்தம் கோனே
செங்கண்மால் மருகனே தெய்வானை கேள்வனே
பங்கயம் போன்ற பன்னிரு கண்ணனே
பழனிமா மலையுறும் பன்னிரு கரத்தனே
அழகுவேல் ஏந்தும் ஐயனே சரணம்
ஆறிரு தடந்தோள் வாழ்க
அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க
யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியாரெல்லாம்
மூவிரு முகங்கள் போற்றி
முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற
ஈராறு தோள் போற்றி – காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள்
மலரடி போற்றி – அன்னான்
சேவலும் மயிலும் போற்றி
திருக்கைவேல் போற்றி போற்றி
ஆடும் பரிவேல் அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனியானைச் சகோதரனே.
நாளென் செய்யும்வினை தானென் செயுமென நாடிவந்த
கோளென் செயும் கொடுங் கூற்றென் செய்யுங் குமரே சரிரு
தாளுஞ் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
அஞ்சு முகந்தோன்றில் ஆறு முகந்தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் எனவேல் தோன்றும் நெஞ்சில்
ஒருக்கால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகா என்றோதுவார் முன்
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரிக் கனக சபைக்கோ ரரசே!
மயில் நடமிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவணபவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்
வருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!
இந்த ஸ்தோத்திரத்தை முருகப்பெருமானின் படத்திற்கு முன்பு கிழக்கு பக்கம் பார்த்தவாறு வைத்துக்கொள்ள வேண்டும். முருகருக்கு அரளிப்பூ அல்லது முல்லை பூ வாங்கி சூட்டுவது மிகவும் சிறந்தது. நெய் தீபம் ஏற்றிய பின்பு முருகப்பெருமானின் முன்பு அமர்ந்து மனதார பதினோரு முறை ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரத்தை முதலில் உச்சரிக்க வேண்டும். அதன்பின்பு முருகப்பெருமானுக்குரிய இந்த ஸ்தோத்திரம் சொல்வது மிகவும் சிறந்தது.