சங்கடத்தில் மட்டுமே சிக்கித் தவிப்பவர்களும் இல்லை; சந்தோஷத்தை மட்டுமே அனுபவிப்பவர்களும் கிடையாது! ஆனால் ஒன்று… சங்கடம் – சந்தோஷம் என எந்தச் சூழ்நிலையிலும், நம்மில் பலரும் இறைவனின் திவ்விய நாமங்களைச் சொல்லி வருகிறோம். ‘கிருஷ்ணா… தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுடாப்பா’என்றோ, ‘ராமா… நீதான்டாப்பா பாத்துக்கணும்’ என்றோ பலரும் சொல்கிறோம், அல்லவா?! அதுதான் திவ்விய நாமத்தின் மகிமை!
மகாபாரதத்தில்… யுதிஷ்டிரருக்கு ஒரு சந்தேகம். அந்தச் சந்தேகத்தை யாரால் தீர்த்து வைக்க முடியும்? நல்ல ஆச்சார்யர் ஒருவரால்தான் சந்தேகத்தைத் தீர்க்கமுடியும்.
ஒவ்வொருவருக்கும் ஆச்சார்யர் எனப்படும் குரு மிகவும் அவசியம்! அதேபோல், ஆச்சார்யர்களுக்கு சிஷ்யர்கள் தேவை. ஒரு ஆச்சார்யர் என்பவர், மடி கனத்துக் கிடக்கிற பசுவுக்குச் சமமானவராம்! அதாவது, மடி கனத்த நிலையில், பசுவானது, கன்று பால் குடித்ததா இல்லையா என்று பார்க்காமல், கனத்த மடியிலிருந்து பாலைப் பீய்ச்சி விடும்.
அதேபோல், ஆச்சார்யர் எந்த எதிர்பார்ப்புமின்றி, தனக்குத் தெரிந்தவை அனைத்தையும் தனது சிஷ்யர்களுக்கு போதித்து விடுவார்!
பீஷ்மர், அப்படிப்பட்ட ஆச்சார்யர்தான்! அவரிடம் யுதிஷ்டிரர் சென்று, ‘என்னுடைய சந்தேகத்தை தாங்கள்தான் தீர்த்துவைக்க வேண்டும் குரு!’என்றார். பீஷ்மரும் சந்தோஷத்துடன் பதில் சொல்லத் தயாரானார்.
”குருவே! பிறவியின் நோக்கம் நிறைவேற, அதாவது மோட்ச லாபம் கிடைப்பதற்கு ஏதேனும் வழி உண்டா?’’ என்று கேட்டார் யுதிஷ்டிரர்.
மெள்ளப் புன்னகைத்த பீஷ்மர் சொன்னார்… ”நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபடு; மோட்ச லாபம் நிச்சயம்!” என்றார்.
இறைவனது திருநாமங்களுக்குத்தான் எத்தனை வலிமை, பாருங்கள்!
கோவிந்தா ஹரி கோவிந்தா !
புரட்டாசி ஸ்பெஷல் ! வாழ்க்கையில் சங்கடமும் சந்தோஷமும் மாறி மாறித்தான் வரும்!
RELATED ARTICLES
