Tuesday, October 17, 2023
HomeUncategorizedவிஷ்ணு சஹஸ்ரநாமம் வரலாறு!

விஷ்ணு சஹஸ்ரநாமம் வரலாறு!

விஷ்ணு சஹஸ்ரநாமம் வரலாறு!
இந்த சஹஸ்ரநாமத்தை சனக குமாரர்களில் ஒருவரே பிதா மகனான பீஷ்மருக்கு உபதேசித்ததாகவும், பீஷ்மர் மூலமே இது மகாபாரத யுத்த முடிவில் அனைவருக்கும் தெரியக் காரணமாக இருந்தது என்பதுமே சரியானதாகும். ஆனால் இந்த சஹஸ்ரநாமத்தை எழுத்து வடிவில் முதலில் படைத்தது வேத வியாசர் ஆகும். வேத வியாசரே மகாபாரதத்தை எழுதியவர்.
ஆமாம் விஷ்ணு சஹஸ்ரநாமம் தோன்றியது எப்படி என்கிறீர்களா? அதன் கதை இது. மகாபாரத யுத்தம் முடிந்தது. தர்மத்தை அழித்து வெற்றி அடைய நினைத்த துரியோதனின் சகோதரர்கள் மரணம் அடைந்து விட்டார்கள். கங்கா தேவி பெற்றெடுத்த மாபெரும் புனிதரான பீஷ்மர் அர்ஜுனனின் அம்புக்கு இரையாகி மரணப் படுக்கையில் கிடக்கிறார்.
அவர் உத்ராயண காலத்தில் மட்டுமே தான் மரணம் அடைய வேண்டும் என்று விரும்பியதினால் அர்ஜுனன் அவருக்கு அம்பினால் ஒரு படுக்கையை அமைத்துக் கொடுக்க அவர் அதில் படுத்துக் கிடக்கிறார். ஆனால் அதே நேரத்தில் ராஜ்ய பதவியில் அமர்ந்து கொண்டிருந்த யுதிஷ்டருக்கு மனதில் அமைதி இல்லை. நடந்து முடிந்திருந்த யுத்தத்தில் தமது உற்றார் உறவினர்களை, நண்பர்களை, நாட்டு மக்களை என அனைவரையும் இழந்து விட்டு பதவியில் அமர்ந்திருக்கிறோமே என்ற மன உறுத்தலால் அவர் அமைதி இல்லாமல் இருந்தார்.
இரண்டாவது நாளில் உடனடியாக கிருஷ்ணரை தேடிச் சென்று அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுகிறார். ‘பரமாத்மா, என்னால் அமைதியாக இருக்க முடியவில்லையே. எனக்கு மன அமைதி கிடைக்க நீதான் ஒரு வழியைக் கூற வேண்டும். உன்னை விட்டால் எனக்கு வேறு நாதியே இல்லையே கண்ணா….எனக்கு மன அமைதியைத் தர ஒரு வழியைக் கூறு’ என்று துக்கம் தாங்காமல் அழுதார்.
அதைக் கேட்ட கிருஷ்ண பரமாத்மா யுதிஷ்டரிடம் கூறினார் ‘ யுதிஷ்டிரா, நீ படும் அவஸ்தையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இதற்கு என்னால் விடை தர முடியாது. ஆகவே நினைத்த நேரத்தில் தன் உடலைத் துறந்து விட்டு மேலுலகம் செல்லக் கூடிய சக்தி பெற்றவரான பீஷ்மரிடம் சென்று அவரிடம் ஏதாவது உபாயம் உள்ளதா என்று கேட்போம்.
அவரே இதற்கான விடையைக் கொடுக்க முடியும் என்பதின் காரணம் அனைத்து தர்ம சூத்திரங்களையும் அறிந்துள்ள அவர் இதற்கான வழி முறையையும் அறிந்துள்ளார். ஆகவே மரணப் படுக்கையில் உத்திராயண காலத்தை எதிர்பார்த்து தனது ஆத்மாவை வெளியில் எடுத்துச் செல்லக் காத்திருக்கும் அவர் அதை செய்யும் முன்னர் அவரிடம் செல்லலாம் வா…’ என யுதிஷ்டரை அழைத்தார்.
அதை ஏற்றுக் கொண்ட யுதிஷ்டரும் கண்ணனுடன் மரணப் படுக்கையில் படுத்திருந்த பீஷ்மரிடம் சென்றார். கிருஷ்ணருடன் கிளம்பியவர்களில் வியாச முனிவரும் இருந்தார். அவர்கள் அனைவரும் ஒரு சேர தன்னிடம் வந்ததும், அவர்கள் வந்தக் காரணத்தை கேட்ட பீஷ்மர் விரக்தியால் சிரித்தார். ‘சரி யுதிஷ்டிரா என்ன சந்தேகம், கேள்’ என்று யுதிஷ்டரிடம் பீஷ்மர் கேட்க யுதிஷ்டரும் ‘ பிதா மகனே, நடந்தது நடந்து முடிந்து விட்டது.
ஆனாலும் நான் மன அமைதி இன்றி தவிக்கிறேன். நான் எனக்கு மன அமைதி கிடைக்க வழி தேடி வந்துள்ளேன். ஆகவே எனக்குள்ள சில சந்தேகங்களை நீங்கள் விளக்க வேண்டும். தெய்வங்களிலேயே உயர்வான தெய்வம் எது? எந்த தெய்வத்தை வேண்டுவதின் மூலம் வாழ்வில் மன அமைதி கிடைத்து மனிதர் மகிழ்ச்சியோடு இருக்க முடியும்? பிறப்பு எனும் இந்த பிறவிக் கடலை விட்டு விலக நான் யாரை வணங்கித் துதிக்க வேண்டும்? ஒவ்வொருவருடைய பிரார்த்தனையும் சென்றடையும் முடிவான இடம்தான் எது என்பது தெரிந்தால் நானும் அதை செய்ய விரும்புகிறேன். இவையே என் சந்தேகங்கள். தயவு செய்து இவற்றை நீங்கள் விளக்க முடியுமா? ‘ என்று கேட்டார்.
பீஷ்மரோ கண்ணனைப் பார்த்துக் கூறினார் ‘ என்ன கண்ணா, இன்னமும் உன் திருவிளையாடல் ஓயவில்லையா? உன்னை சாரதியாக்கிக் கொண்டு மகாபாரத யுத்தத்தை நடத்தி முடித்து விட்டாய். எவை எல்லாம் நடக்க வேண்டுமோ அவை அனைத்தையும் சப்தம் இன்றி திறமையாக செய்து காட்டி விட்டாய். நீயே தெய்வம் என்பதை நிரூபித்தப் பின்னரும் அதை அறிந்து கொள்ளாத பாண்டவ சகோதரர்களை இந்த சாமான்யனிடம் ஏன் அழைத்து வந்தாய்? உன்னால் முடியாத காரியமும் உள்ளதா? ஆனாலும் நீ எதோ ஒரு காரணத்துக்காக என்னிடம் இவர்களை அழைத்து வந்துள்ளாய். அப்படி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி நீயும் எனக்கு மோட்ஷத்துக்கு வழிகாட்ட வந்துள்ளதற்கு நான் உனக்கு நன்றி கூறியே ஆக வேண்டும்’ என்று கூறிய பின் யுதிஷ்டரைப் பார்த்துக் கூறலானார்.
‘யுதிஷ்டிரா இந்த பிரபஞ்சத்தில் பராசக்தியினால் படைக்கப்பட்ட மகா விஷ்ணுவே கடவுட்களுக்கு எல்லாம் கடவுளாக விளங்குகிறார். அவருக்கு ஆயிரம் நாமகரணங்கள் உண்டு . அந்த நாமத்தை எவன் உச்சரித்து அவரை வணங்குவானோ அவனுக்கே மன நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும். ஆத்மாவில் ஏற்படும் துக்கங்கள் அனைத்தும் விலகி ஓடும். இந்த உலகத்தை முற்றிலும் அறிந்தவர் முதலும் முடிவுமாக உள்ள அவரே. அவரே அனைத்து துக்கங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர்.
அவருடைய நாமத்தை எவன் ஒருவன் தொடர்ந்து நிலையான மனதுடன் பூஜிப்பானோ அவன் அனைத்து விசனங்களில் இருந்தும் விடுபடுவான். இந்த உலகுக்கு ஒளி கொடுக்கும் சூரியனைப் போல அவரை பூஜிப்பவர்களின் மனதிற்கும் இதயத்திற்கும் அமைதி எனும் ஒளியைக் கொடுப்பார். புனிதம் என்றாலே விஷ்ணு என்று அர்த்தம் தரும் வகையில் உள்ள புனிதமானக் கடவுள் அவர். ஆகவே முதன்மைக் கடவுளான விஷ்ணுவை ஆயிரம் நாமங்களைக் கொண்டு பூஜிப்பதின் மூலமே மன பயத்தில் இருந்தும் இதய பயத்தில் இருந்தும் விடுதலைக் கிடைக்கும்’
இப்படிக் கூறியபின் பீஷ்மர் விஷ்ணு சஹாஸ்ரனாமாவளியில் வரும் ஆயிரம் நாமாக்களையும் மற்றும் அவற்றின் அர்த்தங்களையும், அவற்றின் பலன்களையும் யுதிஷ்டருக்குக் போதித்தார். அப்படி பீஷ்மர் வாய் வழியே உபதேசித்த விஷ்ணு சஹாஸ்ரனாமத்தையே மகாபாரதத்தை வெகு காலத்துக்குப் பின்னர் படைத்த வேத வியாசர் எழுத்து வடிவில் தந்தார் என்பது நம்பிக்கை.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 − 7 =

Most Popular