சிவசூரியநாராயண கோவிலின் அற்புதம்

142

சிவசூரியநாராயண கோவில், சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இக்கோவில் கி.பி 1100-ல், குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்டது. இதன் கோபுரம் மொத்தம் மூன்று நிலைகளையும், ஐந்து கலசங்களையும் கொண்டுள்ளது. சூரிய தீர்த்தம் என்னும் புனித நீர் நிலை இங்கு அமைந்துள்ளது.

இக்கோவிலின் தனி சிறப்பாக குரு பகவான் சூரிய பகவானை தரிசிப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. PJeganathan முதலில் சூரியனார் கோவிலுக்கு அருகில் உள்ள திருமங்கலக்குடி சென்று அங்கு பிராணநாதரையும், மங்கள நாயகியையும் வழிபட்ட பிறகே சூரிய நாராயணனையும் மற்ற நவக்கிரகங்களையும் வழிபட வேண்டும்.

சிவசூரியநாராயண கோவில் குறித்த ஒரு சுவையான புராணச் செய்தி உள்ளது. அதாவது காலவ முனிவர் , எதிர்காலத்தை கணிப்பதில் வல்லவராய் இருந்தார். தனக்கு தொழுநோய் வர போவதாய் முன் கூட்டியே அறிந்து, அக்கொடிய நோயில் இருந்து தன்னை காத்துக் கொள்ள நவக்கிரகங்களை நோக்கி கடுந்தவம் புரிந்தார். அவரது தவ வலிமையில் அகமகிழ்ந்த நவக்கிரகங்கள் அவருக்கு காட்சி புரிந்து வரம் அளித்தனர். தான் எழுதிய விதியை மாற்றியதால் கோபம் கொண்ட பிரம்மா காலவ முனிவர் அடைய வேண்டிய துன்பங்களை நீங்கள் அடைவீர்களாக என்று நவகிரகங்களை சபித்தார்.

அவரது சாபத்தால் தொழு நோயை அடைந்த நவக்கிரகங்கள் சாப விமோச்சனம் வேண்டி மன்றாடினார். திருமங்கலக்குடி பிராணநாதரை தரிசித்து அவரது அருளை பெறுமாறு பிரம்மா கூறினார். அதன் படி பிராணநாதரையும் மங்களாம்பிகையையும் வேண்டி நவக்கிரகங்கள் அங்கு ஒரு விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து தவம் புரிந்தனர். கடவுள் அவர்களுக்கு பாவ விமோச்சனம் அளித்தார் . நவக்கிரகங்களுக்கு நன்றி கூறும் விதமாக காலவ முனிவர் அவர்கள் தவம் புரிந்த இடத்தில் கோவில் எழுப்பினார். இக்கோவிலில் பிரதான கடவுளாக சூரியநாராயணன் தன்னுடைய மனைவிகள் பிரதியுஷா, உஷா உடன் ரதத்தில் இருப்பது போல் காட்சி அருள்கின்றார். பக்தர்கள் விஜயதசமி அன்றும் ரத சப்தமி அன்றும் சூரியனாரை தரிசித்து அவர் அருளை பெறுவர்  ஏனைய எட்டு நவக்கிரக தலங்களும் சூரியனார் கோவிலுக்கு அண்மையிலேயே அமையப்பெற்றுள்ளன. அவை திருநள்ளாறு (சனி ), கஞ்சனூர் (சுக்கிரன் ), ஆலங்குடி (குரு ), திருவெண்காடு (புதன் ), வைத்தீஸ்வரன் கோவில் (செவ்வாய்), திருநாகேஸ்வரம் (ராகு ), கீழ்பெரும்பள்ளம் (கேது ) , மற்றும் திங்களூர் (சந்திரன் ). சூரியனார் கோயிலை எப்படி அடைவது?

சூரியனார் கோவில் கும்பகோணத்தில் இருந்து 15 கிமீ தொலைவிலும் , சுவாமி மலையில் இருந்து 21 கிமீ தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து 20 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. அதோடு ஆடுதுறை ரயில் நிலையம் வெகு அருகாமையிலேயே அமைந்திருப்பதால் சூரியனார் கோயிலை அடைவது எளிதான காரியமே.