ஆலயத்தின் படிகளின் மூலம் தத்துவத்தை உணர்த்தும் புண்டரீகாட்சன் பெருமாள் கோயில்!

57

ஆலயத்தின் படிகளின் மூலம் தத்துவத்தை உணர்த்தும் புண்டரீகாட்சன் பெருமாள் கோயில்!

திருச்சி மாவட்டத்தில் , மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில், உள்ள திருவெள்ளறை என்ற இடத்தில் அமைந்த புண்டரீகாட்ச பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது.

ஆலயத்தின் சிறப்பு:

இவ்வாலயத்தில் அருள்பாளிக்கும் மூலவர் புண்டரீகாட்சன் என்றும் (செந்தாமரைக் கண்ணன்) தாயார் செண்பகவல்லி என்றும் காட்சியளிக்கிறார். இத்தலத்தில் உற்சவர் பங்கஜவல்லி தாயார் ஆவார். இங்கு தல விருட்சம் வில்வம் மரம் ஆகும். ஆலயத்தின் தீர்த்தம் மணிகர்ணிகா, சக்ர தீர்த்தம், புஷ்கல தீர்த்தம், வராக தீர்த்தம், கந்த தீர்த்தம், பத்ம தீர்த்தம் ஆகும்.

புண்டரீகாட்சன் பெருமாள்:

கருவறையில் பெருமாளின் மேற்புறம் வலது பக்கம் சூரியனும், இடது பக்கம் சந்திரனும் இருந்து சாமரம் வீசுகின்றனர். மேலும், பெருமாளின் இரு பக்கமும் கருடனும், ஆதிசேஷனும் மனித வடிவில் நின்றபடி இருக்கிறார்கள். நடுநாயகமாக மூலவர் பெரிய உருவத்துடன் காட்சியளிக்கிறார். மூலவருக்கு முன்பாக ஒரே சிம்மாசனத்தில் உற்சவரான செந்தாமரைக் கண்ணனும், பங்கஜவல்லி தாயாரும் உள்ளனர் .பெருமாளின் காலடியில் இடது பக்கம் பூமாதேவியும், வலது பக்கம் மார்க்கண்டேயரும் அமர்ந்து தவம் புரிகின்றனர்.

ஆலய படிகளில் உள்ள தத்துவம்:

இத்தல பெருமாளை தரிசிக்க முதலில் 18 படிகளை கடக்க வேண்டும். அது பகவத் கீதையின் 18 அத்தியாயங்களை குறிக்கிறது..அதன்பிறகு 4 படிகள் வரும். அது நான்கு வேதங்களை குறிக்கிறதாம். அதைத் தொடர்ந்து 5 படிகள் வரும். அது பஞ்சபூதங்களை குறிப்பதாகும். பின்வரும் 8 படிகள், ‘ஓம் நமோ நாராயணா’ என்ற அஷ்டாட்சர மந்திரத்தை குறிக்கும். அதன்பிறகான 24 படிகள், காயத்ரி மந்திரத்தில் உள்ள 24 எழுத்துக்களை குறிப்பதாகும். மேற்கண்ட படிகளைக் கடந்த பிறகே பெருமாளை தரிசிக்க முடியும்.

மங்களாசாசனம் பெற்ற திவ்ய தேசம்:

திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை மங்களாசாசனம் செய்துள்ளனர். மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில், இது 4-வது தலம். 50 அடி உயரத்தில் வெண்மையான பாறைகளால் ஆன குன்றின் மீது இத்தலம் அமைந்துள்ளது. எனவே இதற்கு ‘வெள்ளறை’ என்று பெயர்.

தாயாருக்கே முதல் மரியாதை:

இந்த ஆலயத்தில் தாயாருக்கே முதல் மரியாதை. விழாக்காலங்களில் கூட தாயார் முன் செல்ல, பெருமாள் அவரைப் பின்தொடர்வார். மூலவருக்கு செய்யப்படும் அனைத்து பூஜைகளும், பங்கஜவல்லி தாயாருக்கும் உண்டு. தனிச் சன்னிதியில் செங்கமலவல்லி தாயார் அருள்பாலிக்கிறார். வருடத்தில் ஒரு நாள், அதாவது பங்குனி மாதம் அவிட்ட நட்சத்திரம் அன்று செங்கமலவல்லி தாயார், பெருமாள், பங்கஜவல்லி தாயார் மூவரும் ஒரே சிம்மாசனத்தில் எழுந்தருள்வார்கள்.

புண்டரீகாட்சன் பெருமாள் பெயர் காரணம்:

திருவெள்ளறையில் வாழ்ந்த புண்டரீகன் என்ற யோகி, தான் வைத்த நந்தவனத்தில் வளர்ந்த துளசியைக் கொண்டு பெருமாளையும் தாயாரையும் பூஜித்து வந்தார். அவருக்கு காட்சி கொடுத்த இறைவன் என்பதால் இத்தல இறைவனுக்கு ‘புண்டரீகாட்ச பெருமாள்’ என்று பெயர்.

பலிபீடத் திருமஞ்ஜனம்:

இங்குள்ள பலிபீடம் சிறப்புக்குரியதாக உள்ளது. இந்த பலிபீடத்தின் முன் பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் பலிபீட திருமஞ்சனம் செய்து, பொங்கல் படைத்து வழிபடுகிறார்கள்.

இரண்டு வாசல்கள்:

இந்த ஆலயத்தில் ‘உத்தராயன வாசல்’, ‘தட்சிணாயன வாசல்’ என்று இரண்டு வாசல்கள் உள்ளன. தை முதல் ஆனி மாதம் வரை உத்தராயன வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன வாசல் வழியாகவும் பெருமாளை பக்தர்கள் தரிசிக்கலாம்.