வேதங்கள் பற்றி ஒரு தொகுப்பு – பகுதி 2!

99

வேதங்கள் பற்றி ஒரு தொகுப்பு – பகுதி 2!

ரிக் வேதம்:

ரிக் என்றால் போற்றுதல் என பொருள்படும். வேதங்களுக்கெல்லாம் வேதமாக ரிக்வேதம் போற்றப் படுகின்றது. இந்த வேதம் தான் இந்துதர்மத்தின் ஆணிவேர். ரிக் வேதத்தை அடிப்படையாகக் கொண்டே மற்ற மூன்று வேதங்களும் இந்து தர்ம நூல்களும் அமைக்கப்பட்டுள்ளன. ரிக்வேதத்தின் வானவியல் சார்ந்த குறிப்புகளைக் கொண்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்களும், இந்துதர்ம யோகிகளும் கி.மு 2200 முதல் கி.மு 1600 வரை இருக்கலாம் எனக் கூறியிருக்கின்றனர்.

ரிக் வேதம் எட்டு அஷ்டகங்கள், 64 அத்தியாயங்கள், 85 அனுவாகங்கள், 2024 வர்க்கங்கள், 10647 மந்திரங்கள் என பிரிக்கப்பட்டுள்ளது. வேதம் என்றாலே செய்யுள் என்று தான் பொருள். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு ரிஷியின் பெயரை கொண்டது. ரிக்வேதத்தின் ஒவ்வொரு எழுத்தும் மிகவும் சக்திவாய்ந்த முறையில், ஒலியியல் ஞானம் பொருந்திய வகையில் உள்ளன. ரிக்வேதத்தில் 33 தெய்வங்களை அதாவது 11 ருத்திரர்கள், 12 ஆதித்யர்கள், 8 வசுக்கள், 2 அஸ்வின்கள் போற்றி பாடல்கள் உள்ளன. இவர்களே 33 பிரம்மாண்டமான தெய்வங்கள் ஆகும்.

யஜுர் வேதம்:

“யஜ்” என்றால் “வழிபடுவது ” எனப் பொருள். யக்ஞம் (வேள்வி) தொடர்பாக வழிபாட்டு முறைகளை விவரிப்பதே யஜுர் வேதம். ரிக்வேதத்தில் உள்ள பல மந்திரங்கள் இதிலும் கூறப்படுகின்றன. அதோடு கூட, உரை நடையில் யக்ஞம் முதலான வேத கர்மாநுஷ்டானங்களைச் சொல்கிறது. வாயால் துதி செய்ய ரிக் வேதம் உபதேசித்துள்ளது. ரிக் வேதத்தில் உள்ள மந்திரங்களை வேள்வி என்ற யாகத்தில் பொருத்தி கொடுப்பதையே யஜுர் வேதம் செய்கிறது.

இது கி.மு 1500 க்கும், 500 க்கும் இடையில் எழுத்து வடிவில் உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. யஜூர் வேதத்தில் குறிப்பிடப்படும் தெய்வங்கள் ரிக்வேத தெய்வங்களே ஆகும். பல்வேறு வகையான வேள்விகளையும் அதன் செயல் முறைகளையும் யஜூர் வேதம் விளக்குகின்றது.

இவ்வேதம், பொது வழிபாடு, கிரியைகள், வேள்விகள் என்பவை பற்றியும் அவற்றை நிகழ்த்தும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறுகின்றது. வேள்விகள் செய்யப்படுவது தெய்வங்களுக்காக எனவும், வேள்விகளில் உயர்ந்தது ஆன்மவேள்வியே (ஆத்மயக்ஞம்) என்றும் கூறப்படுகின்றது. யஜூர் வேதம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை சுக்கில யஜூர் வேதம், கிருஷ்ண யஜூர் வேதம் எனப்படுகின்றன.

ஸாம வேதம்:

“ஸாமம்” என்றால் மனதைச் சாந்தப்படுத்துவது, சந்தோஷப்படுத்துவது எனப் பொருள்படும். ஸாம வேதத்தை கான வேதம் என்றே குறிப்பிடுகின்றனர். சடங்குகளின் போது இசைப்பதற்காகவே ஸாம வேதம் இயற்றப்பட்டதாகும். ரிக் வேதத்தில் ஸ்தோத்திரங்களாக இருக்கும் மந்திரங்களில் பலவற்றை கானமாக ஆக்கித் தருவதே ஸாம வேதம். ஸாம வேதம் ஆன்மீக அறிவையும் பக்தியின் வலிமையையும் பற்றி கூறுகிறது. ஸாம வேதத்தின் மறைபொருள் அதன் இனிமையான இசை வடிவில் ஒளிந்துள்ளது. ஸாம வேதத்திலிருந்தே இந்திய இசை தோற்றியதாகவும் கூறப்படுகின்றது.

அதர்வண வேதம்:

அதர்வா என்ற ரிஷியின் மூலம் பிரசித்திப் பெற்றது அதர்வண வேதம். அதர்வண வேதம் பிரம்மவேதம் எனப்படுகிறது. இதுவே நான்காவது வேதமாகும். ரிக் வேத மந்திரங்களில் பலவற்றை அதர்வண வேதம் கொண்டுள்ளது. இது உரைநடையாகவும், செய்யுள்களாகவும் மந்திரங்கள் இதில் இருக்கிறன. ஏனைய மூன்று வேதங்களிலும் இல்லாத அநேக தேவதைகள், பலவிதமான கோரமான ஆவிகளைப் பற்றிய மந்திரங்களும் உள்ளன. இதில் பலவிதமான ஆபத்துக்களைப் போக்கிக் கொள்வதற்கும், சத்ருக்களை அழிப்பதற்கும் மந்திரங்கள் இருக்கின்றன. மாந்திரீகம் என்று இப்போது சொல்கிற பல விஷயங்கள் அதர்வண வேதத்திலிருந்து வந்தவை.

படைப்பின் விசித்ரத்தை பற்றிய ப்ருத்வீ ஸூக்தம்’ இந்த வேதத்தில் வருகிறது. அதர்வண வேதத்தில் அடங்கியிருக்கும் மந்திரங்களை முந்தைய முனிவர்கள் பின்பற்றி பல நன்மைகளைச் செய்துள்ளனர். இது 731 பாடல்களைக் கொண்டு 20 பகுதிகளாக உள்ளது. சில்ப வேதம் அதர்வண வேதத்தின் உபவேதமாகும். இது கட்டடக் கலை பற்றியது ஆகும். அதர்வண வேதத்தில் அடங்கியிருக்கும் சில சடங்குகளை தவறான நோக்கத்தில் உபயோகிக்க கூடாது.

வேதத்தின் நான்கு பிரிவுகள்:

ஒவ்வொரு வேதமும் நான்கு பிரிவுகளை உடையது. அவை:- சம்ஹிதை, பிரமாணம், ஆரண்யகம், உபநிடதம் ஆகும். சம்ஹிதை என்பது தெய்வங்களுக்கென்று அமைக்கப்பட்ட துதிப் பாடல்கள் (சூக்தங்கள்), இம்மையிலும், மறுமையிலும் சுபிட்சம் பெறுவதற்கென்று தெய்வங்களிடம் செய்யப்படும் பிரார்த்தனைகள் இதில் உள்ளன.

பிரம்மாணம் என்பது யாக யக்ஞங்கள் பற்றி அனுஷ்டிக்கப்பட வேண்டிய மந்திரங்கள் இவற்றில் உள்ளன. ஆரண்யகம் என்பது தியானம், தவம் போன்றவற்றின் மேற்கோளாகவும் வழிகாட்டியாகவும், இறைவனைப் பற்றிய மேலான ஆராய்ச்சிகள், சிந்தனைகள், வெளியுலகம் அறியாத சில ரகசிய மந்திர தந்திர முறைமைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.

உபநிஷதம் வேதத்தின் இறுதிப் பகுதியாகும். இவை ‘வேதாந்தம்’ என்றும் அழைக்கப்படுகின்றது. வேதத்தின் முடிவு (அந்தம்) தான் வேதாந்தம். இவை மிகவும் புகழ்ப்பெற்றவையாகவும், இந்து தர்மத்தின் மிக உயரிய உண்மைகளின் உறைவிடமாகவும் விளங்குகின்றன. இதில் தத்துவ ஆராய்ச்சிகளை உள்ளடக்கியிருக்கும் பகுதிகள் உள்ளன.

கம்பர் இராமாயணத்தில் வேதம்:

கம்பர் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பல இடங்களில் நான்கு வேதங்களின் உயர்வு பற்றி எழுதியுள்ளார். இவர் பாடல்களில் இருந்து வேதம் பற்றித் தமிழர்கள் என்ன கருதினர் என்பதை அறிய முடிகிறது. அதில் ஒரு எடுத்துக்காட்டு

“புண்ணியம் செய்தால் சொர்க்கம் கிடைக்கும்
புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்
என்னும் ஈது அருமறைப் பொருளே
மண்ணிடை யாவர் இராகவன் அன்றி
மாதவம் அறத்தொடு வளர்த்தார்
எண் அருங் குணத்தின் அவன் இனிது இருந்து இவ்
ஏழ் உலகு ஆள் இடம் என்றால்
ஒண்ணுமோ இதனின் வேறு ஒரு பாகம்
உறைவு இடம் உண்டு என உரைத்தல்.” — பால காண்டம்.