வேதங்கள் பற்றி ஒரு தொகுப்பு பகுதி 1!
நம் சமயப் புனித நூல்களிலேயே மிகவும் சிறப்பானது வேதங்கள் ஆகும். வேதங்கள் நான்கு என்பது அனைவருக்கும் தெரிந்ததே, இந்த வேதங்கள் தோன்றிய விதம், அவைகளின் தொன்மை, மற்றும் அவை உலகிற்கு வழங்கும் சாரம் ஆகியவற்றை அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
வேதம் என்றால் என்ன:
உலகச் சமய இலக்கியங்கள் அனைத்திடமிருந்தும் தனித்து நிற்பவை வேதங்கள். வேதங்கள் மனிதராலோ, கடவுளாலோ எழுதப்படாதவை என்று இந்து மரபுகள் சொல்கின்றன. வேதங்கள் வேத மொழி என்னும் மொழியில் ஆக்கப்பட்டுள்ளது. இம்மொழி சமஸ்கிருத மொழியின் முன்னோடி ஆகும். வேதங்கள் வாய்வழியாகவே தலைமுறை தலைமுறையாக வந்துள்ளன. இவை சமய முக்கியத்துவம் தவிர, உலகின் மிகத் தொன்மையான நூல்களிலொன்று என்ற வகையிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு.
வேதங்களின் வகைகள்:
வேதம் என்றால் அறிவு, ஞானம் எனப் பொருள்படும். மற்ற எல்லா யுகங்களிலும் வேதங்கள் ஒரே நூலாக இருந்தாலும், கலியுகத்தில் மட்டும் வேதங்கள் நான்கு பகுதிகளாக உள்ளன. அவை ரிக், யஜூர், ஸாம, அதர்வண ஆகிய நான்கு வேதங்கள் ஆகும். வேதங்களை “மறை” என தமிழில் கூறுவர். இவை நான்மறை என்றும் கூறப்படுகிறது. இந்த நான்கு வேதங்களில் முதல் வேதமான ரிக் வேதத்தில் துதிப் பாடல்களும், யஜூர் வேதத்தில் யாகம் தொடர்பான செய்முறைகளும், ஸாம வேதத்தில் இசைப் பாடல்களும், அதர்வண வேதத்தில் பயனுள்ள துதிப் பாடல்களும் இருக்கின்றன.
வேதங்களின் பிரிவுகள்:
இதில் ரிக் வேதம் 21 பிரிவுகளாகவும், யஜூர் வேதம் 109 பிரிவுகளாகவும், ஸாம வேதம் 1000 பிரிவுகளாகவும், அதர்வண வேதம் 50 பிரிவுகளாகவும் ஆக மொத்தம் நான்கு வேதங்களும் 1180 பிரிவுகளாக உள்ளன. இது மட்டுமல்லாது ஒவ்வொரு வேதமும் தனித்தனியே நான்கு பிரிவுகளாக அதாவது மந்திரசம்ஹிதைகள், பிரம்மாணங்கள், ஆரண்யங்கள், உபநிஷதங்கள் என பிரிக்கப்பட்டுள்ளது. இந்த வேதங்கள் தனி மனித ஒழுக்கத்தை கடவுளின் இருப்பை விட அதிக முக்கியத்துவம் கொடுத்து பேசுகிறது. அபரிமிதமான அறிவையும், ஞானத்தையும், மந்திர சக்தியையும் தன்னுள் அடக்கியுள்ள இந்த வேதங்கள் நமது மனதையும், ஆன்மாவையும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள செய்கின்றன.
வேத காலம்:
வேத காலத்தை யாராலும் உறுதியாகக் கணிக்க முடியாது. இது இந்தியாவில், கி.மு. 1500விற்கு முன் உருவானதாக கருதப்படுகின்றது. அந்தk காலத்தில் நடந்த இயற்கை பேரிடரிலோ, போர்களாலோ, நோய்களாலோ, வேதத்தை மனப்பாடம் செய்து வைத்திருந்த ஒருவரோ, அல்லது ஒரு சமுதாயமோ அழிந்துவிட்டால், வேதத்தின் அந்தப் பகுதி முழுவதும் அழிந்துவிடும். பிறகு அது திரும்ப கிடைக்காது. இவ்வாறு வேதத்தின் பெரும்பகுதி அழிந்துவிட்டது. ஆகவே இதை சரிசெய்ய எழுத்துக்களை கண்டுபிடிக்க வேண்டியது அவசியமானது. அதன் பிறகு எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மரப்பட்டைகள், மர இலைகள், கல்வெட்டுகள் போன்றவற்றில் வேதங்களை எழுத ஆரம்பித்தார்கள். இவ்வாறு படிப்படியாக வளர்ச்சியடைந்தது. வேதத்தை மனப்பாடம் செய்வது குறைந்துபோனது. வேதங்கள் எழுதப்பட்ட பிறகு அவைகள் பலருக்கு பயனுள்ளதாக இருந்தது.
வேதவியாசர்:
வேதங்கள் நான்கு எனப் பிரித்து வகுத்தவரும் வியாசரே; எனவே இவரை “வேதவியாசர்” என்பர். வேதவியாசர் பல கோடி மக்களின் நன்மையை உத்தேசித்தும், வேதங்களைக் காத்து இரட்சிக்கவும், அவற்றை நான்கு பகுதிகளாகத் தொகுத்து முறைப்படுத்தினார். வேதங்கள் கடல் போன்றவை என்பதனால் அவற்றை ரிக், யஜுர், ஸாம, அதர்வணம் என்று நான்காகப் பிரித்து, அவற்றை இன்ன பிரிவினர் படிக்க வேண்டும் என்ற புதிய பாதையை வகுத்தார்.
சாதாரண மக்களுக்கு வேதம் புரியாது என்பதாலும், கலியுகத்தில் வேதம் அழியும் நிலைக்கு வந்துவிடும் என்பதாலும், அவற்றை மக்கள் மதிக்க மாட்டார்கள் என்பதாலும், வேதத்தின் சாரமான தர்மத்தின் பெருமையைப் பறைசாற்றும், மகாபாரதம் எனும் இதிகாசத்தைப் படைத்தார். இது தவிர, ஸ்கந்த புராணம், விஷ்ணு புராணம், பிரம்ம புராணம், நாரத புராணம், கருட புராணம் உள்ளிட்ட, பதினெட்டு புராணங்களையும் எழுதினார்.