அட்சய திருதியை அன்று அன்னதானம் செய்யுங்கள்!

391

அட்சயதிரிதியை நாளில் தானம் செய்வது சிறந்தது. ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தால் செல்வவளம் பெருகும். பழவகைகளை அளித்தால் உயர்பதவி கிடைக்கும். வெயில் வெம்மை தீர குடை, விசிறி, காலணி வழங்கினால் இன்பவாழ்வு உண்டாகும். ஆடை தானம் செய்ய ஆரோக்கியம் கூடும்.

தாகம் தனிக்க தண்ணீர், மோர் வழங்கினால் கல்வி வளர்ச்சி பெருகும். தயிர் தானம் அளித்தால் பாவவிமோசனம் உண்டாகும். தானியங்களை வழங்கிட விபத்து, அகாலமரணம் நேராது. அன்று, பசுவிற்கு உணவளித்தால் சகலபாவமும் நீங்கி நல்வாழ்வு உண்டாகும். அட்சய திரிதியையன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளைப் போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தைக் கொண்டு வரும் அம்சமாகும். இது சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும். சாபம் பெற்று தேய்ந்துபோன சந்திரன், அட்சய திரிதியை தினத்தன்று அட்சய வரம் பெற்று மீண்டும் அட்சய திரிதியை தினத்திலிருந்து வளரத் தொடங்கினான்.

பகீரதனின் கடுந்தவத்தால் ஆகாயத்திலிருந்து இறங்கிய கங்கை, அட்சய திரிதியை நாளில்தான் பூமியைத் தொட்டது. பாண்டவர்கள் வனவாசத்தின்போது அட்சய பாத்திரம் பெற்றதும், மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றதும் அட்சய திரிதியை நாளில்தான். திருமால் மார்பில் என்றும் நீங்காமலிருப்பதற்கான வரத்தை அட்சய திரிதியை தினத்தன்று தான் மகாலட்சுமி பெற்றாள். அட்சய திரிதியை தினத்தன்றுதான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.

கும்பகோணம் பட்டீஸ்வரம் அருகிலுள்ள முழையூர் பரசுநாதர் ஆலயத்தில், அட்சய திரிதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அச்சமயம் சிவனை தரிசித்தால் செல்வம் பெருகுமென்பது நம்பிக்கை. அட்சய திரிதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய்ச் சேருமென்பது ஐதீகம். எனவே அன்றைய தினம் செய்யப்படும் பித்ருக் கடன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பராசக்தியின் அம்சமான #சாகம்பரிதேவி இவ்வுலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. ஒரு அட்சய திரிதியை தினத்தன்றுதான் அவர் இவற்றை உருவாக்கினாராம். அட்சய திரிதியை அன்று ஆல இலையில் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜெபித்து கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும். அட்சய திரிதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும். அன்றைய தினம் மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும். அட்சய திரிதியை தினத்தன்று சிவனே அன்னபூணியிடம் உணவு பெற்றதால், நமசிவாய மந்திரத்தை அன்று முதல் சொல்லத் தொடங்கலாம். பிறகு நாள்தோறும் 108 முறை சொல்லிவந்தால் பார்வதி பரமேஸ்வரரின் பூரண அருள் கிட்டும்.

தானம்

அட்சய திருதியை அன்று தானம், தர்மம் செய்வதால் மிகவும் புண்ணியம் கிட்டும், மேலும் அன்று பொன், பொருள், நிலம் வாங்க மிகவும் உகந்த நாளாகும்.
தானம் தர்மம் அட்சய திருதியை அன்று காலையில் துவரம் பருப்பு, மொச்சை, அரிசி ஆகிய தானியங்கள், சிவப்பு புடவை, வெள்ளை வேஷ்டி ஆகிய துணிகள் ஆகியவற்றை ஆதரவற்றோர், ஏழை விவசாயிகள், நடைபாதை வாசிகளுக்கு தானம் செய்வது மிகவும் பலன் தரும்.

கோபூஜை:

அன்று காலை பசுவிற்கு கோதுமை தவிடு அல்லது அரிசி தவிடு, வெல்லம், வாழைப்பழம் கலந்து தானம் செய்வதால் லக்ஷ்மி அருள் கிடைக்கும்.

வட இந்தியாவில் இந்நாளை அகஜித் என்பர். ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள். அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான். எனவே, அட்சய திரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும். நம் இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும்.

அன்று செய்யும் தானதர்மத்தால் மரண பயம் நீங்கி உடல் நலம் உண்டாகும்.
அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும். தானதர்மங்கள் செய்தால் எம வேதனை கிடையாது. நலிந்தவர்களுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும். ஆடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும்; பழங்கள் தானம் செய்தால் உயர் பதவிகள் கிடைக்கும். மோர், பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும்; தானியங்கள் தானம் கொடுத்தால் அகால மரணம் ஏற்படாது. தயிர் சாதம் தானம் அளித்தால் பாவ விமோசனம் ஏற்படும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும்.

அட்சய திரிதியை நாளில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது சிறப்பு. குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கவும், புதிதாக தொழில் தொடங்கவும், புது முயற்சிகளில் ஈடுபடவும், கட்டடப்பணி துவங்கவும் இந்நாள் உகந்ததாகும்.

ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ !