ஏகாதசி என்றால் பதினொன்று என்று பொருள். ஞானேந்திரியம் ஐந்து; கர்மேந்திரியம் ஐந்து; மனம் ஒன்று என்னும் பதினொன்றும் பகவானிடம் ஈடுபடுவதே ஏகாதசி விரதம். அந்நாளில் பகவானை மட்டுமே நினைத்து, அவன் புகழ் பாடி விரதமிருந்தால், மனக் கவலைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும்
ஏகாதசி’ மகத்துவம்!
*****************************
பாரதப் போருக்கு முன், பாண்டவ தூதுவராக அஸ்தினாபுரம் சென்றார் பகவான் கிருஷ்ணர். அங்கே, அரண்மனையில் தங்காமல் விதுரரின் வீட்டுக்குச் சென்று உணவருந்தி, இளைப்பாறினார். அவருக்காக காத்திருந்த துரியோதனன் முதலானோர், ”உனக்காக நாங்கள் காத்திருக்க… நீயோ, தகுதிக்குப் பொருந்தாத இடத்தில் தங்கி, உணவு உண்டிருக்கிறாயே…” என்று ஏளனம் செய்தார்களாம்.
அவர்களிடம், ”இறை நாமத்தை அனுதினமும் உச்சரிக்கிற, இறைவனின் அற்புதங்களையும் லீலைகளையும் உபந்யாசம் பண்ணுகிற பாகவதர்கள் சாப்பிட்டுவிட்டு மீதம் வைக்கும் உணவு தூய்மையானது. சகல பாவங்களையும் போக்கும் சக்தி அந்த உணவுக்கு உண்டு… சுத்தம் பாகவதஸ்யான்னம்!” என்று பதில் தந்த ஸ்ரீகிருஷ்ணர், விதுரர் வீட்டு உணவின் மேன்மையை அவர்களுக்கு உணர்த்திய துடன், மேலும் சில மேன்மைகளையும் பட்டியலிட்டார்.
”சுத்தம் பாகீரதி ஜலம்
சுத்தம் விஷ்ணு பதத்தியானம்
சுத்தம் ஏகாதசி விரதம்…”
அதாவது, பகவானின் திருவடியில் பட்ட ஒரு துளி தீர்த்தம்,கங்கைக்குச் சமமான புனிதம் வாய்ந்தது. பெருமாளின் திருவடியைத் தரிசிப்பது, வைகுண்ட தரிசனத்தைவிட பவித்திரமானது. இத்தனை நற்செயல்களுக்கும் ஈடானது ஏகாதசி விரதம் என்கிறார் பகவான் கிருஷ்ணர்.
காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரம் இல்லை ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை என்ற பழமொழியின் மூலம் இவ்விரதத்தின் சிறப்பினை அறியலாம்.
ருக்மாங்கதன், அம்பரீஷன் ஆகிய மன்னர்கள் இவ்விரத முறையினைக் கடைப்பிடித்து பெரும் பாக்கியம் பெற்றவர்கள் ஆவார்.
அமாவாசையை அடுத்து வரும் ஏகாதசி சுக்லபட்ச ஏகாதசி அல்லது வளர்பிறை ஏகாதசி என்றும், பௌர்ணமியை அடுத்து வரும் ஏகாதசி கிருஷ்ணபட்ச ஏகாதசி அல்லது தேய்பிறை ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.
ஏகாதசி அன்று விரதமுறையைப் பின்பற்றி வழிபாடு செய்யப்படுவதால் உடல் மற்றும் உள்ளம் தூய்மை அடைகிறது.
இவ்விரத முறையை ஆண், பெண், ஏழை, பணக்காரர் ஆகிய வேறுபாடுகள் ஏதும் இன்றி எல்லோரும் இவ்விரதத்தினைக் கடைப்பிடிக்கலாம்.
சித்திரை மாத பாபநாசினி விரதம் மேற்கொள்வதால் நாம் அறிந்தும், அறியாமலும் செய்த பாவச் செயல்களின் வினைப் பயன் போகும் என்பது ஐதீகம். மேலும் நம் வாழ்வில் துன்பங்கள் அதிகம் ஏற்படாமல் இருக்கவும், குல சாபங்கள், தெய்வ சாபங்கள் போன்றவை நீங்கி வாழ்க்கையில் சுபிட்சங்கள் பெருகவும் இந்த பாபநாசினி ஏகாதசி விரதம் துணைபுரிகின்றது.
நாமும் நாளை பாபமோசனி ஏகாதசி விரதம் மேற்கொண்டு வாழ்வின் உன்னத நிலையை அடைவோம்.
ஓம் நமோ நாராயணா !
