திருமண பாக்கியம் அருளும் சவுந்தரராஜ பெருமாள்!
திண்டுக்கல்லில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள வடமதுரை பேரூராட்சியில் அமைந்துள்ளது சவுந்தரராஜ பெருமாள் கோயில். சவுந்தரவல்லி தாயார் உடனுறை சவுந்தரராஜ பெருமாள் இங்கு காட்சி தருகிறார். 15 அடி உயரத்தில் பழங்கால சுற்றுச்சுவர்கள் கொண்ட சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில் இதுவாகும்.
இங்கு சவுந்தரராஜ பெருமாள், சவுந்தரவல்லி தாயார், கருடாழ்வார், விஷ்ணு, துர்க்கை, விஸ்வக்சேனர், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், ஆஞ்சநேயர், ஆண்டாள் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. கோவிலில் வாகன மண்டபம், யாகசாலை, மடப்பள்ளி, கொடிக்கம்பம் ஆகியவை தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.
கோவிலின் நுழைவு வாயிலின் உட்புறத்தில் ஆஞ்சநேயர் சன்னதியும் தீபம் போடும் கம்பமும் அமைந்துள்ளது. இது, தென்கலை கோவிலாகும். பாஞ்சராத்ர ஆகம முறைப்படி வழிபாடு நடைபெறுகிறது. தினமும் 3 கால பூஜை நடைபெற்று வருகிறது. கோவிலுக்கு சொந்தமான கிணற்றில், கோடைக்காலத்தில் கூட தண்ணீர் வற்றாமல் இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு.
ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் பெருமாள் கிணற்றுக்கு சென்று மண்டூக மகரிஷிக்கு வரம் கொடுத்து வருகிறார். ஆடி மாதம் இக்கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா கொண்டாடப்படுகிறது. 13 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் கொடியேற்றம் செய்யப்பட்டு ஒவ்வொரு நாளும் அனுமார், அன்னம், சிம்மம், கருடன், சேஷம், யானை உள்ளிட்ட வாகனங்களில் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. 7-ம் நாளில் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும்.
ஆடி பவுர்ணமி நாளில் திருத்தேரோட்ட உற்சவம் உண்டு. குதிரை வாகனத்தில் மின் அலங்காரத்துடன் வீதி உலா மற்றும் முத்து பல்லக்கில் பெருமாள் உற்சவம் நடைபெறும் நாட்களில் சுற்று வட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டு செல்வர். வேண்டுவோருக்கு வேண்டிய வரம் அருள்பவராக பெருமாள் வீற்றிருக்கிறார்.
ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தன்று பெருமாளுக்கு பால் அபிஷேகம் செய்து, பொங்கல் வைத்து வழிபட்டால் கடன் நிவர்த்தி மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். துளசி மாலை அணிவித்து வேண்டினால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் கை கூடிய பக்தர்கள் தம்பதியர்களாக வந்து வழிபாடு செய்து செல்வதாக சொல்லப்படுகிறது.
