சீரக சாதம் வித் சத்தான பச்சை பயிறு குழம்பு செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
- பாஸ்மதி அரிசி – 1 கப்,
- வெங்காயம் – 1 (நறுக்கியது),
- சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்,
- கிராம்பு – 2,
- அன்னாசிப்பூ – 1,
- ப்ரிஞ்சி இலை – 1,
- இலவங்கப்பட்டை – 1,
- தண்ணீர் – 2 கப்,
- நெய் – தேவையான அளவு,
- உப்பு – தேவையான அளவு.
செய்முறை விளக்கம்:
முதலில் பாஸ்மதி அரிசியை நீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும். பின் அதில் உள்ள நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெயை ஊற்றி, கிராம்பு, அன்னாசிப்பூ, இலவங்கப்பட்டை, ப்ரிஞ்சி இலை சேர்த்து சிறிது நேரம் தாளிக்கவும். பின் அதில் சீரகத்தை போட்டு வதக்கவும்.
சீரகம் பொறிந்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதில் கழுவி வைத்துள்ள அரிசியைப் போட்டு சிறிது நேரம் வறுக்கவும். பின் அதில் 2 கப் தண்ணீர் விட்டு, உப்பை சேர்த்து, மூடி 2 விசில் விட்டு இறக்கவும். இப்போது சுவையான சீரகம் சாதம் ரெடி. இதற்கு ஏற்றாற்போல் சத்தான பச்சை பயிறு குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
சத்தான பச்சை பயிறு குழம்பு செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
- பச்சை பயறு – 1 கப்,
- வெங்காயம் – 1 (நறுக்கியது) ,
- தக்காளி – 2 (நறுக்கியது),
- பூண்டு – 6 பல்,
- பச்சை மிளகாய் – 5 ,
- மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் ,
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் ,
- கரம் மசாலா – 1 டீஸ்பூன் ,
- சீரகம் – 1 டீஸ்பூன் ,
- எண்ணெய் – தேவையான அளவு ,
- உப்பு – தேவையான அளவு ,
- கொத்தமல்லி – சிறிதளவு.
- தண்ணீர் – தேவையான அளவு.செய்முறை விளக்கம்:
முதலில் பச்சை பயிறை குக்கரில் போட்டு, பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி, மூன்று அல்லது நான்கு விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பின்பு அதில் சீரகத்தைப் போட்டு தாளித்து, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள பச்சை பருப்பையும் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால் சத்தான பச்சை பயறு குழம்பு ரெடி.
