வெந்தயக்கீரை கொண்டு சப்பாத்தி செய்வது எப்படி?
காசு பணம் செலவில்லாமல் சமையல் செய்ய வேண்டும் என்றால் அது இயற்கையாகவே கிடைக்கும் கீரைகளைக் கொண்டு சமையல் செய்து சாப்பிடலாம். அதில், ஏராளமான நன்மைகளும் உண்டு. கீரைகளில் பல வகைகள் உண்டு. பசலைக்கீரை, மணத்தக்காளி கீரை, கானாவாழை கீரை, வெள்ளை பொன்னாங்கன்னி கீரை, முள்ளங்கி கீரை, முளைக்கீரை, முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை, பருப்பு கீரை, பாலக்கீரை என்று பல வகைகள் உண்டு.
வீட்டில் சிறிய தொட்டிகளில் போட்டு வளரக் கூடிய ஒன்று தான் வெந்தயக்கீரை. நீரிழிவு நோயை குணப்படுத்தும் தன்மை இந்த வெந்தயக்கீரைக்கு உண்டு. இந்த வெந்தயக்கீரையில் சுண்ணாம்பு சத்து, நார்ச்சத்து, இரும்பு சத்து ஆகியவை அடங்கியுள்ளது. இந்தக் கீரை உடல் சூட்டை தணிக்க உதவும். வெந்தயக்கீரை கொண்டு சப்பாத்தி எப்படி செய்வது என்று பார்க்கலா வாங்க.
தேவையான பொருட்கள்:
- கோதுமை மாவு – 2 கப்
- நறுக்கிய வெந்தயக்கீரை – 1 கப்
- கரம் மசாலா – 1 டீஸ்பூன்
- மிளகாய்பொடி – 1டீஸ்பூன்
- நறுக்கிய பச்சை மிளகாய் – 1
- உப்பு – தேவையான அளவு
சப்பாத்தி மாவுடன் இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து சப்பாத்திக்களாக திரட்டி தேவைப்படுபவர்கள் நெய் அல்லது எண்ணைய் சிறிது மேலே தடவி சுடலாம். இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி தொக்கு, வெங்காய தொக்கு போன்றவைகள் செய்து சாப்பிடலாம். இதில் சப்ஜி செய்ய முடியாதா? என்று கேட்டால் அதெல்லாம் ஒன்றும் இல்லை. சப்ஜி செய்து சாப்பிடலாமா!
வெந்தயக்கீரை சப்ஜி ரெசிபி:
தேவையான பொருட்கள்:
- வெந்தயக்கீரை – 1 கட்டு
- பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)
- தக்காளி – 2 (விழுதாக அரைத்துக் கொண்டது)
- இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
- தனியா பொடி – 1 டேபிள் ஸ்பூன்
- சீரக பொடி – 1/2 டீஸ்பூன்
- வெள்ளை பட்டாணி – 25 கிராம் (வேக வைத்துக் கொள்ள வேண்டும்)
- கரம் மசாலா தூள்- 1/2 டீஸ்பூன்
- சிவப்பு மிளகாய் தூள் – தேக்கரண்டி அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கீரையை நன்றாக ஆய்ந்து அதனை கழுவி சுத்தம் செய்து நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடான பிறகு சீரகம், வெங்காயம் போட்டு வதக்கி அதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். அது பொன்னிறமாக மாறியதும், அதனுடன் தனியா தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
அதனுடன் நறுக்கிய வெந்தயக்கீரையை போட்டு வதக்க வேண்டும். அதோடு, அரைத்து வைத்துள்ள தக்காளி, வெள்ளை பட்டாணியை சேர்க்க வேண்டும். எண்ணெய் தனியாக பிரித்து வரும் வரை மிதமான தீயில் வைத்து கிளறி விட வேண்டும். அவ்வளவு தான், வெந்தயக்கீரை சப்ஜி ரெடி. இதனை சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.
