முருங்கைக்காய் ஊறுகாய் செய்வது எப்படி?
பொதுவாக வீட்டில் ஊறுகாய் இருப்பது அவ்வளவு நல்லது என்பார்கள். நம் முன்னோர்கள் வாழ்ந்த காலங்களில் எல்லாம் வீடுகளில் ஊறுகாய் வைத்திருப்பார்கள். குபேரனுக்கு ஊறுகாய் என்றால் அவ்வளவு பிரியமாம். ஆனால், ஊறுகாய் என்றாலே நம்மில் சிலருக்கு பிடிக்காது. சிலருக்குத்தான் பிடிக்கும். மாங்காய், நெல்லிக்காய், தக்காளி, பூண்டு, எலுமிச்சை, கருவேப்பிலை என்று பல வகையான ஊறுகாய் இருக்கிறது.
அந்த வகையில், இன்றைய பதிவில் முருங்கைக்காய் கொண்டு ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. இந்த ஊறுகாயை நீங்கள் ஒருமுறை செய்து, சுமார் 2 முதல் 3 மாதங்கள் வரை வைத்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- புளி – 100 கிராம்
- முருங்கைக்காய் – 10
- கடுகு – 2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன்
- வினிகர் – சிறிதளவு
- நல்லெண்ணெய் – 150 மி.லி
- வெந்தயம் – 1 டீஸ்பூன்
செய்முறை:
முருங்கைக்காயை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை குக்கரில் வைத்து நன்கு வேக வைத்துக் கொள்ள வேண்டும். மற்றொருபுறம் 100 கிராம் புளியை தண்ணீரில் நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு வானொலியில் 100 மில்லி லிட்டர் நல்லெண்ணையை ஊற்றி கடுகு சேர்த்து முருங்கைக்காயின் சதைப் பகுதியை தனியாக கீறி எடுத்து அதில் சேர்த்து கிளற வேண்டும்.
அதன் பிறகு அந்த கலவையில் கரைத்து வைத்த புளியை சேர்த்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். அதன் பிறகு அதில் மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். இதையடுத்து மற்றொரு பாத்திரத்தில் கொஞ்சம் கடுகு வெந்தயம் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், அடுப்பை ஆஃப் செய்துவிட வேண்டும். ஏற்கனவே வறுத்து வைத்துள்ள கலவையுடன் ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து கிளற வேண்டும். பின்னர், அதனை மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து மற்றொரு பாத்திரம் கொண்டு 50 மிலி நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக காய்ந்த பிறகு மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள பொடியை அதில் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அதன் பிறகு முருங்கைக்காய் கலவையில் சேர்த்து நன்றாக கிளறி அதில் வினிகர் சேர்த்து இறக்கிவிட்டால் முருங்கைக்காய் ஊறுகாய் தயார்.
