குழந்தை பாக்கியம் அருளும் கோயில்!

43
sdr

குழந்தை பாக்கியம் அருளும் கோயில்!

திருச்சி மாவட்டம் ஈங்கோய்மலையில் அமைந்துள்ளது அருள்மிகு மரகதசாலேஸ்வரர் திருக்கோவில். இது தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரையில் 63வது தலமாக விளங்குகிறது.

ஆலயத்தின் சிறப்பு:
இத்தலத்தின் மூலவர் மரகதசாலேஸ்வரர், ஈங்கோய்நாதர் என்றும் அம்பிகை மரகதாம்பிகை என்றும் திருநாமம் கொண்டு அருள்பாளிக்கிறார். இத்தலத்தின் தல விருட்சம் புளியமரம் ஆகும். இத்தலத்தின் புராண பெயர் திருவிங்கநாதமலை, அளகரை என்பதாகும்.

தல சிறப்பு:
இத்தல இறைவன் மரகதத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இதனால் இவருக்கு மரகதாசலேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. மாசி சிவராத்திரியின்போது மூன்றுநாட்கள் சுவாமி மீது சூரியஒளி கதிர்கள் விழுகிறது. இந்நேரத்தில் லிங்கம் நிறம் மாறி காட்சியளிப்பது விசேஷம். சிவனின் பாடல் பெற்ற தலங்களில், மலை மீது இருப்பவை மிகக்குறைவு. அதில் ஒன்று திருச்சி மாவட்டம் ஈங்கோய்மலை.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 63 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சாயா சக்தி பீடம் ஆகும். மலைமேல் கோயில் 560 படிகள் காவேரி வடகரை கடைசித்தலம். இதற்கு நேர் எதிரே காவேரி அக்கரையில் காவேரி தெற்கு முதல் தலமாக திருவாட்போக்கி சிவஸ்தலம் உள்ளது.

புராணக் கதை:
அம்பாளுக்கு, சிவன் தன் இடப்பாகம் தர உறுதி தந்த மலை என்பதால் இம்மலையை “சக்திமலை’ என்கின்றனர். இதனை உணர்த்தும் விதமாக முன்மண்டபத்திலும், மலையிலும் அர்த்தநாரீஸ்வரர் வடிவங்கள் உள்ளன. மரகதாம்பிகை, நின்ற கோலத்தில் இருக்கிறாள்.

இவளது கருவறை விமானம், கோபுரம் போன்ற அமைப்பில் மூன்று கலசங்களுடன் இருக்கிறது. கருவறை கோஷ்டத்தில் மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கை காலுக்கு கீழே மகிஷனுடனும், மற்றொரு துர்க்கை சாந்த சொரூபியாகவும் உள்ளனர். அடிக்கிற கை தான் அணைக்கும் என்ற பழமொழிக்கேற்ற காட்சி இது. ஒரே இடத்தில் துர்க்கையின் இரண்டு வடிவங்களையும் காண்பது அரிதான ஒன்று.

தென்திசை வந்த அகத்தியர், சிவனை வழிபட இங்கு வந்தார். அப்போது நடை அடைக்கப்பட்டுவிட்டது. தனக்கு காட்சி தரும்படி சிவனை வேண்டினார். மலை அடிவாரத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடிவிட்டு வந்தால் தன்னை வணங்கலாம் என்று அசரீரி சொன்னது. அதன்படி அகத்தியர் தீர்த்தத்தில் நீராடியபோது, ஈ வடிவம் பெற்றார். பின் இம்மலை மீது பறந்து வந்து, சன்னதி கதவின் சாவித்துவாரம் வழியாக உள்ளே புகுந்து சுவாமியை தரிசனம் செய்தார். பின் மீண்டும் தன் பழைய வடிவம் பெற்று திரும்பினார்.

அகத்தியர் ஈ வடிவில் வழிபட்ட தலம் என்பதால், “திருஈங்கோய்மலை’ என்றும், சிவனுக்கு “ஈங்கோய்நாதர்’ என்றும் பெயர் உண்டு. சிவனின் நண்பரான சுந்தரர், தான் விரும்பிய நேரங்களில் சிவனிடம் பொன் கேட்டுப் பெற்றுக் கொள்வார். அவர் இத்தலத்திற்கு வந்து சிவனிடம் பொன் வேண்டும் என கேட்டார். சுந்தரரிடம் விளையாட வேண்டும் என நினைத்த சிவன், இங்கிருந்த ஒரு புளியமரத்திற்குள் ஒளிந்து கொண்டார்.

சுந்தரர், சிவனை எவ்வளவோ அழைத்தும் அவருக்கு காட்சி தரவில்லை. ஒரு தங்க புளியங்காயை மட்டும் அவருக்கு கிடைக்கும்படி செய்தார். சுந்தரர் அதனை எடுத்தபோது, புளியங்காய் மறைந்து விட்டது. தன்னிடம் சிவன் விளையாடுவதை உணர்ந்து கொண்ட சுந்தரர், கோபத்தில் “எனக்கு கிடைக்காத புளி யாருக்கும் கிடைக்காமல் போகட்டும்,’ என சொல்லிவிட்டு திரும்பி விட்டார்.

இத்தலத்தின் விருட்சம் புளியமரம். ஆனால், சுந்தரர் புளி யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று சபித்துவிட்டதால் இங்கு புளியமரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலயத்தின் தனிச்சிறப்பு:

மாசி சிவராத்திரியின்போது மூன்றுநாட்கள் சுவாமி மீது சூரியஒளி கதிர்கள் விழுகிறது. இந்நேரத்தில் லிங்கம் நிறம் மாறி காட்சியளிப்பது விசேஷம். சுந்தரர் மட்டுமின்றி, நக்கீரர் ஈங்கோய் எழுபது என்ற பாமாலையை அருளியிருக்கிறார். சிவனுக்கு தீபாராதனை காட்டும்போது லிங்கத்தில் ஜோதி ஜொலிப்பதைக் காணலாம். தைப்பூசத்தன்று சுவாமி, அம்பாளுடன் காவிரிக்கரையில் எழுந்தருளுகிறார். ஆடிக்கிருத்திகை மற்றும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்கின்றனர்.

ஐநூறு படிகளுடன் அமைந்த மலைக்கோயில் இது. கோஷ்டத்தில் ஒரு தெட்சிணாமூர்த்தி, விமானத்தில் வீணை தெட்சிணாமூர்த்தி, கால்களை மாற்றி அமர்ந்த தெட்சிணாமூர்த்தி என குரு பகவானின் வித்தியாசமான வடிவங்களை காணலாம்.

மரகத லிங்கம்:
ஆதிசேஷன் மந்திர மலையை இறுக சுற்றிக்கொண்டார். அப்போது அம்மலையின் சிறு, சிறு பாகங்கள் பூமியில் தெறித்து விழுந்தன. அவ்வாறு விழுந்த பாகத்தின் ஒருபகுதி இம்மலை என்கிறார்கள். சிவபெருமான், அவர்களைச் சமாதானம் செய்து, மலையிலேயே மரகதலிங்கமாக எழுந்தருளினார். மரகத அசலத்தில் (மலையில்) எழுந்தருளியவர் என்பதால், “மரகதாசலேஸ்வரர்’ என்ற பெயர் பெற்றார். இவருக்கு “திரணத்ஜோதீஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு.

திருவிழா:
இத்தலத்தில் பங்குனியில் பிரம்மோற்ஸவம், மாசிமகம், தைப்பூசம், பவுர்ணமி பூஜைகள் சிறப்பு

பிரார்த்தனை:
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை வழிபாடு செய்யலாம்.

நேர்த்திக்கடன்:
சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.