பாவங்கள் நீங்க பரிகாரம்!

141

செய்த பாவங்கள் நீங்க பரிகாரம்!

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை என்ற ஊரில் உள்ள கோயில் அருள்மிகு சுவாமிநாத சுவாமி கோயில். இந்தக் கோயிலில் சுவாமிநாதர், சுப்பையா மூலவராக காட்சி தருகிறார். தாயார், வள்ளி, தெய்வானை பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். நெல்லி மரம் தல விருட்சமாக இருக்கிறது.

வஜ்ர தீர்த்தம், குமாரதாரை, சரவண தீர்த்தம், நேத்திர குளம், பிரம்ம தீர்த்தம் ஆகியவை. ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. சித்திரை பிரமோற்சவம் 10 நாட்கள் நடக்கிறது. வைகாசி விசாகம் 10 நாட்கள், நவராத்திரி விழா 10 நாட்கள், ஐப்பசி கந்த சஷ்டி விழா 10 நாட்கள், மார்கழி திருவாதிரை 10 நாட்கள், தை பூச திருநாள், பங்குனி வள்ளி திருக்கல்யாண விழா என்று திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஆங்கில வருடப்பிறப்பு நாளன்று திருப்படி விழா சிறப்பாக நடைபெறுகிறது. இவை தவிர, கிருத்திகை, அமாவாசை, கார்த்திகை, விசாகம், பௌர்ணமி, சஷ்டி, தமிழ் புத்தாண்டு, ஆங்கில வருடப்பிறப்பு, தீபாவளி, வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் சுவாமிமலை 4ஆவது படை வீடாகும். இந்தக் கோயிலில் முருகனுக்கு விபூதி அபிஷேகம் செய்யும் போது அருள் பழுத்த ஞானியாக பக்தர்களுக்கு காட்சி தருவார். சந்தன அபிஷேகம் செய்யும் போது பாலசுப்பிரமணியனாக கம்பீரமாக காட்சி தருகிறார்.

கோயில் கருவறையை உற்று நோக்கினால், சுவாமிநாத சுவாமி நின்றியிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், அதன்மேல் எழுந்தருளியிருக்கும் சுவாமிநாத மூர்த்தி பாண லிங்கமாகவும் காட்சி தருவது கண்களுக்கு தெரியும். இதன் மூலமாக சிவனும், முருகனும் வேறு வேறு இல்லை என்பது புலனாகும்.

இங்கு மூலவருக்கு எதிரில் மயிலுக்குப் பதிலாக யானை இருக்கிறது. இது ஹரிகேசன் என்ற அரக்கனை சுவாமிநாத சுவாமி வணங்கி வென்றதால், இந்திரன் தன் காணிக்கையாக இந்த ஐராவதம் யானையை தந்ததாக புராணம் கூறுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் மலைகள் கிடையாது. மலைகளே இல்லாத இந்தப் பகுதியில் தான் சுவாமிநாத சுவாமி கோயிலுள்ளது. பொதுவாக குன்று தோறும் முருகப் பெருமான் இருப்பது வழக்கம். அந்த வழக்கத்திற்கேற்ப, மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டத்திலுள்ள சுவாமிமலையில் முருகப் பெருமான் அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும்.

இந்தக் கோயிலின் மேல் தளத்தை அடைவதற்கு 60 படிக்கட்டுகள் உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் எப்படி 18 படிகள் என்பது புனிதமானதோ அதே போன்று சுவாமிநாதசுவாமி கோயிலில் உள்ள இந்த 60 படிகட்டுகளுமே புனிதமானதாக கருதப்படுகிறது. தமிழ் வருடங்கள் என்பது 60 ஆகும். அந்த தமிழ் வருடங்களின் தேவதைகள் சுவாமியை பிரார்த்தனை செய்து படிகளாக உள்ளதாக ஐதீகம். ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில வருடப்பிறப்பு மற்றும் தமிழ் வருடப்பிறப்பு ஆகிய நாட்களில் 60 படிகளுக்குமே வஸ்திரம் சாற்றி தேங்காய் பழம் வைத்து பாடல் பாடி பூஜைகள் செய்வார்கள். இதற்கு திருப்படி பூஜை என்று பெயர்.

திருமண வரம், குழந்தை பாக்கியம், குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள், கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம், உயர் படிப்பு, வேலை வாய்ப்பு, உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றிற்காக பக்தர்கள் பெருமளவில் வருகை தருகின்றனர். சுவாமிநாதனை வழிபட நமக்கு வரும் இடையூறுகள், நோய்கள், பிராணிகள், பூதம், தீ, நீர், வெள்ளம், செய்த பாவம் ஆகியவற்றால் விளையும் தீமைகள் விலகுகிறது.

வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், மொட்டை போடுதல், சந்தனக்காப்பு, பஞ்சாமிர்த அபிஷேகம், பால் அபிஷேகம், அன்னதானம் வழங்குவது, நெய் விளக்கு ஏற்றுதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அபிஷேக ஆராதனைகள் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

அப்பனுக்கே பாடம் சொல்லிக் கொடுத்த சுப்பையா அருள் பாலிக்கும் கோயில் இது. ஆறு அடி உயரம் கொண்ட முருகப் பெருமான் கையில் தண்டத்துடன் தலையில் உச்சிக்குடுமியுடனும், மார்பில் பூணுலுடனும் காணப்படுகிறார். முருகப் பெருமான் சுவாமிநாதனாக வலது கையில் தண்டாயுதத்துடனும், இடது கையை தொடையில் வைத்தபடியும் யோகநிலையிலுள்ள குருவாக நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய மூன்று சக்திகளும் ஒன்றாக அமையப்பெற்ற வஜ்ர வேலுடன் காணப்படுகிறார். கையில் தாங்கிய வேல் தான் ஆலயத்தின் கீழ் வீதியிலுள்ள நேத்திர தீர்த்தத்தை உண்டாக்கியது. பூமாதேவி, பார்வதியின் சாபத்திற்கு ஆட்பட்டு இந்தக் கோயிலுக்கு வந்து தங்கி சுவாமிநாதப் பெருமானை வழிபட்டு தனது சாபம் நீங்கப் பெற்றாள். அதன் பிறகு இந்தக் கோயிலிலிருந்து செல்ல முடியாமல், நெல்லி மரமாக இத்தலத்திலேயே இருக்கிறாள்.

நான்முகம், பூமகள், இந்திரன் ஆகியோர் இந்தக் கோயிலில் வழிபட்டுள்ளனர். குருவாக இருந்து அருள் புரிந்தமையால், குருமலை, குருகிரி என்றும் சுவாமி மலைக்கு வேறு பெயர்கள் உள்ளன.

படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மதேவன் முருகப் பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மனிடம் படைப்புத் தொழில் செய்யும் உனக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா? என்று முருகப் பெருமான் கேட்கிறார். ஆனால், இந்தக் கேள்விக்கு பிரம்மனால், பதில் சொல்ல முடியவில்லை. இதனால், அவரது 4 தலைகளிலும் முருகப் பெருமான் குட்டினார். மேலும், கீழே விழுமாறு தம் திருவடி கொண்டு உதைத்து பிரம்மனை சிறையில் அடைத்தார்.

இதையடுத்து படைப்புத் தொழிலை முருகப் பெருமான் செய்தார். பிரம்ம தேவன் சிறையில் இருப்பதை நினைத்து மனம் வருந்திய திருமால் சிவபெருமானிடம் சொல்லி விடுதலை கிடைக்க வேண்டுகிறார். தொடர்ந்து, சிவபெருமான், முருகப் பெருமானிடம் பிரம்ம தேவரை விடுதலை செய்யும்படி கூறவே தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்று முருகன், பிரம்மதேவரை விடுதலை செய்தார்.

இதைப் பார்த்து உள்ளம் மகிழ்ந்த சிவபெருமான் முருகனை தனது மடியில் தூக்கி வைத்துக் கொண்டு பிரம்மனுக்கு தெரியாத பிரணவ மந்திரத்தை நீ எனக்கு சொல்ல வேண்டும் என்று கேட்டார். இதை யாரும் அறிந்திடக் கூடாது என்பதற்காக சிவபெருமான் காதருகில் சென்று பிரணவ மந்திரத்தின் பொருளை உரைத்தார். இந்த நிகழ்ச்சி நடந்த தலம் தான் சுவாமிமலை தலம் என்று வரலாறு கூறுகிறது.