குழந்தைகள் விரும்பும் பன்னீர் பர்கர் செய்யலாம் வாங்க!

116

குழந்தைகள் விரும்பும் பன்னீர் பர்கர் செய்யலாம் வாங்க!

தேவையான பொருட்கள்:

•பர்கர் பன் – 4
•வெண்ணை – 4 தேக்கரண்டி
•சீஸ் துண்டுகள் – 4
•மெலிதாக நறுக்கிய வெங்காயம் – தேவையான அளவு
•மெலிதாக சீவிய தக்காளி – தேவையான அளவு
•லெட்யூஸ் – தேவையான அளவு

•பன்னீர் – 200g
•மைதா – ½ கப் – 70g
•இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
•காஷ்மீர் மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
•மிளகு தூள் – ½ தேக்கரண்டி
•கரம் மசாலா – ½ தேக்கரண்டி
•உப்பு – தேவையான அளவு
•எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
•பிரெட் கிரம்ஸ் – தேவையான அளவு

பர்கர் சாஸ் செய்ய தேவையான பொருட்கள்:

•மயோனைஸ் – 4 தேக்கரண்டி
•சில்லி சாஸ் – 2 தேக்கரண்டி
•டொமேட்டோ கெட்சப் – 2 தேக்கரண்டி.

செய்முறை விளக்கம்:

முதலில் 200 கிராம் பன்னீரை உள்ளங்கை அளவிற்கு ½ inch தடிமனுக்கு வெட்டிக்கொள்ளவும். பின்பு ஒரு பவுலில் ½ கப் மைதா மாவு, 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் 1 தேக்கரண்டி காஷ்மீர் மிளகாய்த்தூள், ½ தேக்கரண்டி மிளகு தூள், ½ தேக்கரண்டி கரம் மசாலா, தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

இப்பொழுது பன்னீர் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து தயார் செய்துள்ள மாவில் முக்கி எடுக்கவும். பின்னர் பிரெட் கிரம்ஸில் புரட்டி எடுத்துக்கொள்ளவும். இப்பொழுது எண்ணையில் இட்டு பொரிக்கவும். மிதமான தீயில் வைத்து லேசான பொன்னிறம் வரும் வரை அவ்வப்போது திருப்பி போட்டு பொரித்துக் கொள்ளவும். பன்னீர் கட்லெட் தயாரானதும், சூடாக இருக்கும் பொழுது அதன் மீது 1 துண்டு சீஸ் வைக்கவும். பர்கர் சாஸ் செய்வதற்கு, ஒரு பௌலில் 4 தேக்கரண்டி மயோனைஸ் எடுத்துக் கொள்ளவும்.

அதனுடன் 2 தேக்கரண்டி சில்லி சாஸ் மற்றும் 2 தேக்கரண்டி கெட்சப் சேர்த்துக்கொள்ளவும். அதனை நன்றாக கலந்து தனியே எடுத்து வைக்கவும். தோசை தவாவில் 1 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும், சூடானதும் பர்கர் பன்னை பாதியாக வெட்டி இரு துண்டுகளையும் வைக்கவும்.

லேசாக பொன்னிறம் வந்ததும் தனியே எடுத்து வைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியை மெலிதாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். பர்கர் செய்வதற்கு பண் துண்டுகளில் பர்கர் சாஸ் தடவி கொள்ளவும். அதன்மீது தயார் செய்து வைத்துள்ள பன்னீர் கட்லெட் மற்றும் சீஸ் வைக்கவும். லெட்யூஸ், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வைக்கவும். மற்றொரு துண்டு பண்ணை வைத்து மூடி வைத்தால் குழந்தைகளுக்கு பிடித்தமான பன்னீர் பர்கர் சுவைக்க தயார்.