புராண ரத்னம் என்று போற்றப்படும் ஸ்ரீ விஷ்ணுபுராணத்தில் பிரகலாத சரித்திரத்தை விளக்கிய பராசர மகரிஷி, தன் தந்தை இரணியன் திருந்த வேண்டும் என்று பிரகலாதன் திருமாலிடம் பிரார்த்தனை செய்ததாகவும், அவனைத் திருப்தி செய்ய விழைந்த திருமால், தானே இரணியனைப் போல அவதாரம் செய்து, பிரகலாதனுடன் இணைந்து நாம சங்கீர்த்தனம், விஷ்ணு பூஜை உள்ளிட்டவற்றைச் செய்ததாகவும் கூறியுள்ளார்.
அதே சமயம், உண்மையான இரணியன் தனது கொடுஞ்செயல்களைத் தொடர்ந்து செய்து வந்ததாகவும், அவனது கொடுஞ்செயல்கள் அதிகரித்தவாறே, தூணைப் பிளந்து நரசிம்மர் தோன்றிக் கொடியவனான இரணியனை வதம் செய்ததாகவும் பராசர மகரிஷி கூறியுள்ளார்.
இரணியனின் தம்பியான இரணியாட்சனைத் திருமால் வராக அவதாரம் எடுத்து வதம் செய்த செய்தியை அறிந்த இரணியன், திருமாலைப் பழிவாங்க எண்ணி அனைத்துலகங்களிலும் தேடினான். எங்கு தேடியும் திருமாலை அவனால் கண்டுபிடிக்க இயலவில்லை. ஏனெனில், இரணியனால் தேட முடியாத ஓர் இடத்தில் திருமால் ஒளிந்து கொண்டு விட்டாராம். அந்த இடம் எது இரணியனின் இதயம் தான் அங்கு தான் திருமால் ஒளிந்திருந்து மாயம் செய்தார்.
முன்னொரு சமயம் வியாசரும் மற்ற முனிவர்களும் நைமிசாரண்யத்தில் அமர்ந்து விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது சில முனிவர்கள், “நரசிம்மர் தனது கூரிய நகங்களால் இரணியன் போன்ற அசுரர்களின் உடல்களைக் கிழித்து அவர்களை இம்சிப்பதால், ‘ஹிம்ஸன்’ (இம்சை செய்பவர்) என்று அவரை அழைக்க வேண்டும்!” என்று கூறினார்கள்.
அதற்கு வியாசர், “முனிவர்களே! நம் பார்வைக்கு நரசிம்மர் தன் நகத்தால் அசுரர் உடலைக் கிழிப்பது இம்சை போலத் தோன்றும். ஆனால் அது இம்சை அல்ல. ஏனெனில், அந்த அசுரர்கள் தமது பாபங்களுக்கான தண்டனையை அனுபவிக்க வேண்டுமென்றால், அவர்கள் பல ஊழிக் காலங்கள் நரகத்தில் வாட வேண்டியிருக்கும். அவ்வளவு நீண்ட காலம் நரகத்தில் அவர்கள் துன்பப்படுவதற்குப் பதிலாக, நரசிம்மர் தனது கூரிய நகங்களால் அவர்கள் உடலைக் கிழித்து, ஒரு நொடியில் ஆழ்ந்த துயரத்தைக் கொடுத்து, அவர்களது பாபங்களைப் போக்கி அவர்களைத் தூய்மையாக்குகிறார்.
மேலோட்டமாகப் பார்க்கையில் இது ஹிம்ஸை போலத் தெரிந்தாலும், உண்மையில் தீயவர்களான அசுரர்கள் மீதும் கூட கருணை கொண்டு, அவர்களைத் தூய்மைப் படுத்தும் நோக்கில் அவர்களைத் துயரத்துக்கு உள்ளாக்கும் நரசிம்மர், ஹிம்ஸைக்கு நேர்மாறான அனுக்கிரகத்தைத் தான்செய்கிறார். எனவே ஹிம்ஸன் என்று நீங்கள் சொன்ன பெயரை நேர்மாறாக மாற்றிவிடுங்கள்!” என்றார் வியாசர். ஹிம்ஸன் என்ற சொல்லை நேர்மாறாக மாற்றி எழுதுகையில் ‘ஸிம்ஹன்’ என்று வருமல்லவா? எனவே அன்று முதல் நரசிம்மர் ‘ஸிம்ஹன்’ என்றழைக்கப்பட்டார். அந்த ஸிம்ஹனைப் போன்ற முகத்தோடு இருப்பதால் தான் சிங்கமும் ‘ஸிம்ஹம்’ என்றழைக்கப்படுகிறது.
நரசிம்மரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் ராமாநுஜர். ஈசாண்டான் என்னும் குருவிடம் நரசிம்ம மந்திர உபதேசம் பெற்றார் ராமாநுஜர். தமக்குப் பின் எழுபத்து நான்கு சீடர்களை வைணவ குருமார்களாக அமர்த்திய ராமாநுஜர், அந்த எழுபத்து நால்வருக்கும் நரசிம்மருடைய விக்ரஹத்தைப் பூஜைக்காக வழங்கி, அவர்கள் அனைவருக்கும் நரசிம்ம மந்திரத்தை உபதேசம் செய்தார்.
நரசிம்மரின் பெருமையை விளக்க ஒரு சுவையான கதையைப் பராசர பட்டர் கூறுவார். ஒரு தந்தை தன் மகனுக்குச் சர்க்கரை போடாத வெறும் பாலை மட்டும் கொடுத்தார். “இதன் சுவை எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். “இனிப்பு குறைவாக உள்ளது!” என்றான் மகன். அடுத்து, சர்க்கரையை மட்டும் தன் மகனுக்குக் கொடுத்து, “இது எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். “இது பாலை விட இனிப்பாக உள்ளது!” என்றான் மகன். அடுத்து, பாலில் சர்க்கரையைக் கலந்து கொடுத்து, “இது எப்படி இருக்கிறது!” என்று கேட்டார் தந்தை. “தந்தையே! வெறும் பாலை விடவும், வெறும் சர்க்கைரையை விடவும், சர்க்கரை கலந்த பால் தான் இனிப்பாக உள்ளது. இனி எனக்கு சர்க்கரை கலந்த பாலை மட்டும் தாருங்கள்!” என்றான் மகன்.
திருமால் மிருக வடிவத்துடன் எடுத்த மத்ஸ்யம், கூர்மம் போன்ற அவதாரங்கள் வெறும் பால் போன்றவை. மனித வடிவத்துடன் எடுத்த ராமன், கண்ணன் போன்ற அவதாரங்கள் வெறும் சர்க்கரை போன்றவை. ஆனால், மனிதன்-மிருகம் இரண்டும் கலந்த கலவையாக எடுத்த நரசிம்ம அவதாரம் சர்க்கரை கலந்த பால் போன்றதாகும். எப்படிச் சர்க்கரை கலந்த பாலைக் குடித்த சிறுவன், வெறும் பாலையும் வெறும் சர்க்கரையையும் விரும்புவதில்லையோ, அவ்வாறே நரசிம்ம அவதாரத்தில் ஈடுபட்ட ஒரு பக்தனின் மனது, திருமாலின் மற்ற அவதாரங்களில் ஈடுபடுவதில்லை என்கிறார் பராசர பட்டர்.
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் !
