நாரதருக்குக் கிடைத்த குட்டு

241

வைகுண்டத்தில் பகவான் நாராயணர் ஒரு சுவடியில் சில குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தார். விஷ்ணுபக்தியில் சிறந்த நாரதர் அப்போது அங்கு
“நாராயணா! நாராயணா!” என்று கூறிக்கொண்டு வைகுண்டத்திற்குச் சென்றார்.
“வாரும் நாரதரே! நலமா? அமருங்கள். நான் இந்தக் குறிப்பினை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன்” என்றார் நாராயணர்.

நாரதர் ஆவல் மிகுந்தவராக, “”என்ன குறிப்பு நாராயணா! நான் அதைத் தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார் நாரதர்!”தாராளமாக! என்னிடம் யார் மிகவும் பக்தியுடன் உள்ளனர் என்பதை வரிசைப்படி எழுதி இருக்கிறேன்”

நாரதருக்கு ஆர்வம் அதிகரித்தது!

“நாராயணா! அதை நான் பார்க்கலாமா?”

“தங்களுக்கில்லாமலா? பாருங்களேன்” என்று குறிப்பெடுத்த சுவடியை நாரதரிடம் காட்டினார் நாராயணர்.

அதில் பக்தியில் சிறந்தவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டிருந்தார் நாராயணர். அதில் முதல் பெயரே “நாரதர்’ என்று எழுதியிருந்தது!

நாரதருக்கு மிகவும் மகிழ்ச்சி! கொஞ்சம் கர்வம் கூட வந்து விட்டது. பின்னே? சும்மாவா? நாராயணரே பக்தியில் சிறந்தவர் நாரதர் என்று முதலிடம் தந்து விட்டாரே!

அத்துடன் வேறு ஒரு ஆவலும் அவருக்கு ஏற்பட்டது! யார் வரிசையில் கடைசியாக உள்ளார் என்பதுதான் அது! சுவடியைப் பார்த்தார்! அவருக்கு மிகவும் ஆச்சரியமாகப் போய்விட்டது!

கடைசி பெயர், “அனுமன்!’

“ப்பூ இவ்வளவுதானா அனுமனின் பக்தி! இதை நாம் சென்று பூலோகத்தில் இருக்கும் அனுமனிடம் கூறி அவரைக் கேலி செய்ய வேண்டும்!”

மிகவும் மகிழ்ச்சியுடனும், கர்வத்துடனும் பூலோகத்திற்குத் திரும்பினார் நாரதர்!
அடர்ந்த வனத்தில் ஒரு மரத்தடியில் “”ராம்…ராம்…ராம்…ராம்…”என்று கூறியபடி அனுமன் அமர்ந்திருந்ததைப் பார்த்தார் நாரதர்!

நாரதருக்குச் சிரிப்பு தாங்கவில்லை! அவர் அனுமனிடம் சென்று, “”நீங்கள் இங்கு இப்படி ஜபம் செய்து கொண்டிருக்கிறீர்கள்…ஆனால் தங்கள் பக்தியைப் பற்றி ராமாவதாரம் எடுத்த நாராயணின் கருத்தே வேறு! பக்திமான்களில் உங்கள் பெயர் மிகக் கடைசியாக உள்ளது…ஆனால் என் பெயரோ முதலில்! ” என்று வைகுண்டத்தில் நடந்ததைப் பற்றி அனுமனிடம் பெருமையுடன் கூறினார் நாரதர்!
” வணக்கம் அமருங்கள். ராம்…ராம்…அவன் சித்தம் அதுவானால் அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். நாம் என்ன செய்ய முடியும்? பழங்கள் கொண்டு வருகிறேன் சாப்பிடுங்கள்…ராம்…ராம்…” என்றார் அனுமன்!

“நானே பக்திப்பழம்! எனக்கெதற்குப் பழம்?…முடிந்தால் உங்கள் பக்தியில் என்ன குறை என்பதைக் கண்டறியுங்கள்…பிறகு பார்க்கலாம்” என்று கர்வமாகக் கூறிவிட்டுச் சென்றார் நாரதர்!
சில நாட்கள் சென்றன.

மறுபடியும் வைகுண்டத்திற்கு விஜயம் செய்தார் நாரதர்!
அங்கு நாராயணர் முன்பு போலவே ஒரு ஓலைச்சுவடியில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்.

நாரதருக்கு ஓலைச்சுவடியில் இப்போது என்ன எழுதப்படுகிறது என்பதை அறிய ஆவல்!

“நாராயண! நாராயண! தற்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர் பரந்தாமரே…,அடியேன் தெரிந்து கொள்ளலாமா?”

“வாருங்கள் நாரதரே……. இதுவா? இது வேறொன்றுமில்லை…,நான் எந்த பக்தனை சதா நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதை வரிசைப்படி எழுதியிருக்கிறேன்! அவ்வளவுதான் ….குறிப்பைச் சரியாக முடித்துவிட்டேன்…, தங்களுக்கில்லாததா? பாருங்களேன்”

ஆர்வத்துடன் குறிப்பை நாராயணரிடம் வாங்கிப் பார்த்தார் நாரதர்!

அதில்….., இறைவன் எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்கும் பக்தர்களில் முதலிடம் அனுமனுக்குத் தரப்பட்டிருந்தது! சிலகாலங்கள் கர்வத்துடன் சஞ்சாரம் செய்து கொண்டிருந்ததால் நாரதருக்குக் கடைசி இடம் அதில் இருந்தது!
அனுமனின் பக்தியில் நாரதரின் கர்வம் கரைந்தது!

அனுமன் மீது இப்போது நாரதருக்கு பக்தி ஏற்பட்டது! கண்களில் நீருடன்!