ராதாஷ்டமி ஸ்பெஷல் ! 26.8.20 !

317

ஸ்ரீமதி ராதாராணியின் அவதாரத் திருநாள் !

ஸ்ரீராதாஷ்டமி என்றால் ஸ்ரீமதி ராதாராணி அவதரித்த அஷ்டமி திருநாளாகும். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாள் கோகுலாஷ்டமி என்றழைக்கப்படுவதை போல, ஸ்ரீமதி ராதாராணி அவதரித்த திருநாள் ஸ்ரீராதாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.

ஸ்ரீமதி ராதாராணி, பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நித்யமான துணைவியும், கிருஷ்ணரின் ஆனந்தமயமான அந்தரங்க சக்தியும், மிக மிகச் சிறந்த தூய பக்தையும் ஆவார். ஸ்ரீமதி ராதாராணி அதிர்ஷ்ட தேவதைகள் அனைவருக்கும் தலைமையானவரும், லக்ஷ்மி தேவியின் மூலம் ஆவார்.

ராதாராணி அவதார மகிமை:-

ராதாராணி அவதரித்த விதம் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இம் மண்ணுலகில் அவதரித்த பின் ஸ்ரீமதி ராதாராணியும் இம்மண்ணுலகில் அவதரிக்க விரும்பினார். அதன்படி ஒரு தெய்வீக லீலை அரங்கேறியது. அதாவது ஒருசமயம் இமயமலையின் மகளாக பார்வதி தேவி பிறந்தார். பிறகு பார்வதிதேவிக்கும், சிவபெருமானுக்கும் திருமணம் நடந்தது. இத்திருமணத்திற்கு தேவாதி தேவர்களும், முனிவர்களும் பங்கேற்றனர். இவர்களுடன் விந்தியமலையும் வந்திருந்தது. கோலாகலமாக நடந்த விழாவை கண்ணுற்ற விந்தியமலை மிகவும் ஆச்சர்யப்பட்டது. அத்துடன் மிகவும் போற்றுதற்குரிய சிவபெருமானே, இமயமலையின் மருமகனாக வந்திருக்கிறார் என்றும் வியந்தது. உடனே தனக்கும் அது போல் சிறந்த ஒரு மகாபுருஷர், மருமகனாக வர வேண்டும் என்று விந்தியமலைஆசைப்பட்டது.
இந்த ஆசை நிறைவேற பிரம்மதேவரை வேண்டி, 1000 வருடங்கள் கடுமையான தவம் புரிந்தது விந்தியமலை. இந்த தவத்தினால் திருப்தி அடைந்த பிரம்ம தேவர், முழுமுதற் கடவுளான பகவான் கிருஷ்ணரே, உனது மருமகனாக வருவார் என்று வரமளித்தார். அதன் பிறகு விந்தியமலைக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. இதை கொண்டாட பெரியவிழா ஒன்று நடந்தது. இதில் இமயமலைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதே தருணத்தில், கிருஷ்ணரும் மதுராவில் அவதரித்து, கோகுலத்தில் வளர்ந்து கொண்டிருந்தார். அப்போது கம்சனின் அணையின் பேரில், பிள்ளைக் கொல்லி அரக்கி பூதனா பிறந்த குழந்தைகளை எல்லாம், கொன்று இன்று கொண்டிருந்தாள்.

எனவே விந்திய மலைக்கும் குழந்தை பிறந்திருக்கிறது என்று தெரிந்ததும், அங்கும் இந்த பூதனா விரைந்தாள். விந்திய மலையின் இரண்டு அழகான பெண் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு வானத்தில் பறந்தாள்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த முனிவர்கள் பலர், சக்தி வாய்ந்த மந்திரங்களை ஓதி, பூதனாம் தடுத்தனர். மந்திரத்தின் சக்தியால், பூனாவில் உடல் நெருப்பு போன்று எரிந்தது. நேரம் செல்ல, செல்ல எரிச்சல் தாங்க முடியாமல் கையில் வைத்திருந்த இரண்டு பெண் குழந்தைகளையும் பூதனா கீழே போட்டு விட்டாள்.

அதில் ஒரு குழந்தை விருஷபானு மன்னரின் தோட்டத்தின் அருகே யமுனை நதியில் ஒரு தங்கத் தாமரையில் விழுந்தது. அவர்தான் ஸ்ரீமதி ராதாராணி. பொன்னிறத்தில் அவதரித்தவர், மற்றொரு குழந்தை விருஷபானுவின் சகோதரர் சந்திர பானுவின் தோட்டத்தில் விழுந்தது. இவர் சந்திராவளி ஆவார்

.யமுனை நதியில், தாமரை மலரில் அவதரித்தார்:-

யமுனை நதியில், தாமரை மலரில் தங்க ஒளி வீசுவது போன்று பிரகாசமான குழந்தை மிதந்து வருவதை கண்டார் மன்னர் விருஷபானு . அப்போது வானத்தில் தோன்றிய பிரம்ம தேவர், மன்னர் விருஷபானவே! நீ தரிசிக்கும் இந்த குழந்தை. சாதாரண குழந்தை அல்ல. லெஷ்மி தேவியின் மூலம் ஆவார். மிகக் கவனமாக இக்குழந்தையை வளர்த்து வா. நீயும் உனது மனைவி கீர்த்திதாவும் முந்தைய பிறவியில் பகவானே உங்களது மருமகனாக வர வேண்டும் என்று தவம் செய்தீர்கள். அதன் பலனாக இந்த தெய்வீக குழந்தையை பெற்றுள்ளீர்கள்” என்று கூறினார்.

பிறகு அக்குழந்தையை, மன்னர் விருஷபானு தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். பெளர்ணமி நிலவு போன்று பொன்னிறத்தில் பிரகாசித்த குழந்தையின் பேரழகை பார்த்தவுடன் ராணி கீர்த்திதா மிகவும் மகிழ்வுற்றாள். இப்படியாக ஸ்ரீமதி ராதாராணி, மன்னர் விருஷபானுவுக்கும், தாய் கீர்த்திதாவிற்கும் தெய்வப் புதல்வியாக அவதரித்தார். ராதாராணி பிறந்த பிறகு, யாரையும் பார்க்கவில்லை. அவரது தெய்வீக கண்கள் திறக்கவே இல்லை. திருவாய் மலர்ந்து பேசவும் இல்லை. இதனால் விருஷபானுவும், கீர்த்திதாவும் மிகவும் வருத்தப்பட்டனர். இந்நிலையில் மன்னரின் இல்லத்திற்கு மகாரிஷி நாரதர் வந்தார்.அவரை வணங்கி வரவேற்ற மன்னர், தனது கவலையை தெரிவித்தார். அதற்கு நாரதர், “கவலைப்பட வேண்டாம். இந்த தெய்வீக குழந்தையின் பிறப்பிற்கு ஒரு விழா நடத்துங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்று ஆசீர்வதித்தார்.

பிறகு மன்னர் ராதாராணி பிறந்த விழாவை மிகவும் விமரிசையுடன் கொண்டாட தனது நண்பர்கள், உறவினர்கள் உட்பட அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பில் அவரது நெருங்கிய நண்பரும், கிருஷ்ணரின் தந்தையுமான நந்தமகாராஜாவும் அழைக்கப்பட்டிருந்தார். அழைப்பை ஏற்ற நந்த மகாராஜா, குழந்தைகள் கிருஷ்ண பலராமருடனும் விழாவிற்கு சென்றார். உடன் கிருஷ்ணரின் தாய் யசோதை, பலராமரின் தாய் ரோஹிணி உட்பட விரஜவாசிகள் பலரும் சென்றனர்.

கிருஷ்ணரே முதல் தரிசனம்:-

விழாவில் ஒருவரையொருவர் பரஸ்பரம் விசாரித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். பசும் பால், சர்க்கரை கலந்து தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான இனிப்பு வகை பிரசாதங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. அப்போது தான் அது நடந்தது. சின்னஞ்சிறு குழந்தை கிருஷ்ணர் தவழ்ந்து தவழ்ந்து, ராதாராணியின் தொட்டில் அருகே சென்றார். கிருஷ்ணர் தன் முன் வந்ததும், ராதாராணி உடனே தன் கண்களை திறந்தார். முதன்முதலாக கிருஷ்ணரை தரிசித்து, மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார். அவரது பார்வையும், மகிழ்ச்சி சிரிப்பும் குழுமியிருந்த அனைவரையும் ஆரவாரப்படுத்தின.

கிருஷ்ணர் மீது ஸ்ரீமதி ராதாராணி கொண்டிருந்த அளப்பெரும் அன்பினாலும், தூய பக்தியினாலும் கிருஷ்ணரைத் தவிர, வேறு யாரையும் முதலில் தரிசிக்கக் கூடாது என்று ராதாராணி உறுதி எடுத்திருந்தார். எனவே இந்த தெய்வீக திருவிளையாடல் நடந்தேறியது.அத்துடன் கிருஷ்ணர் தன் பிஞ்சுகரங்களில் வைத்திருந்த புல்லாங்குழல், ராதாராணியின் புன்சிரிப்பில் வசீகரிக்கப்பட்டு ராதாராணியின் மேல் நழுவி விழுந்தது. இப்படியாக கிருஷ்ணரும், தன் அன்பை ராதாராணிக்கு தெரிவித்தார். இந்த தெய்வீக வைபவத்தை கண்ணுற்ற அனைவரும் மகிழ்ச்சி அடைந்து கிருஷ்ணரையும், ராதாராணியையும் போற்றி துதித்தனர்.குறிப்பாக ராதாராணியின் தந்தையான மன்னர் விருஷபானுவும், தாய் கீர்த்திதாவும் பெரு மகிழ்ச்சி அடைந்து மேலும் விழாவை சிறப்புற நடத்தினர்.

கிருஷ்ணரின் சேவையில் ராதாராணியே முதலிடம்:-

கிருஷ்ணருக்கு சேவை செய்வதில், ஸ்ரீமதி ராதாராணிக்கு இணையாக வேறு யாரையும் கூற இயலாது. ஸ்ரீமதி ராதா ராணி கிருஷ்ணர் மீது செலுத்திய பக்தி எத்தகையது என்பதை அறிவதற்காக தான், கிருஷ்ணரே, சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்தார் என்று சைதன்ய சரிதாம்ருதம் குறிப்பிடுகிறது. அந்த அளவிற்கு ஸ்ரீமதி ராதாராணி கிருஷ்ணர் மீது அன்பும் பக்தியும் செலுத்தியுள்ளார். ஆயிரக்கணக்கான வருடங்கள் தவங்கள் செய்தாலும் கிருஷ்ணர் ராதாராணியின் தெய்வீக அன்பை புரிந்து கொள்ள இயலாது. தூய பக்தர் ஒருவரின் கருணையால் மட்டுமே ஸ்ரீஸ்ரீராதா கிருஷ்ணரின் புகழை உணர இயலும்.

ராதராணியின் திருவருள் அவசியம்:-

ஒருவர் கிருஷ்ணரின் கருணையை பெறுவதற்கு, ஸ்ரீமதி ராதாராணியின் கருணையை நிச்சயம் பெற்றிருக்க வேண்டும்.
யார் ஒருவர் கிருஷ்ணருக்கும், கிருஷ்ண பக்தர்களுக்கும் சேவை செய்கிறாரோ அவர் ஸ்ரீமதி ராதாராணியின் கருணையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீராதாஷ்டமி திருநாளின் விசேஷம் என்னவென்றால்,
“ஸ்ரீமதி ராதாரணியின் திருப்பாத தரிசனம்” விசேஷம் ஆகும். பொதுவாக ஸ்ரீஸ்ரீராதா கிருஷ்ணர் கோயில்களில் வருடத்தின் எல்லா நாட்களிலும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருப்பாதங்கள் மட்டுமே தரிசிக்கும் வகையில் இருக்கும். ஆனால் ஸ்ரீராதாஷ்டமி அன்று ஒருநாள் மட்டும் ஸ்ரீமதி ராதாரணியின் திருப்பாதங்களை தரிசிக்க முடியும். எனவே ஏராளமான பக்தர்கள் இத்திருநாளில் விரதம் இருந்து திருப்பாத தரிசனம் பெறுவர்.

ஸ்ரீராதாஷ்டமி அன்று செய்ய வேண்டியது:.
அன்று மதியம் வரை விரதம் இருக்க வேண்டும்.
ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தைஅதிகபட்சம் உச்சரிக்க வேண்டும். ஸ்ரீமதி ராதாராணியின் திருப்பாத தரிசனம் செய்ய வேண்டும்.

ராதாராணியின் வசீகரம்

மன்மதனின் அழகு அளவிட முடியாததாகக் கூறப்படுகிறது. அனைவரை யும் வசீகரிக்கும் தன்மை மன்மதனுக்கு உண்டு. அவனை வென்றவர்கள் மிகவும் அரிது. இப்படிப்பட்ட கோடி மன்மதர்களை வசீகரிக்கும் தன்மை பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு உண்டு. ஆகையால் தான் பகவான் கிருஷ்ணர், ’மதனமோஹனர் (மன்மதனையும் மயக்கக் கூடியவர்) என்று அழைக்கப்படுகிறார். ஆனால் அந்த மதனமோஹனரையே வசீகரிப்பவள்தான் ராதாராணி. ஆகவே, ராதாராணி ‘மதன மோஹன மோஹினி’ என்று அழைக்கப்படுகிறாள்.

ஸ்ரீமதி ராதாராணியின் கருணை

ஸ்ரீமதி ராதாராணி கருணையே வடிவானவள். உலக உயிர்வாழிகளிடம் மிகவும் கருணையும், பேரன்பும் உடையவள். கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவளாக இருப்பினும், துளியும் கர்வம் இல்லாதவள். விருந்தாவனத்தில் கோபியர்கள் கிருஷ்ணருடன் லீலைகளைப் புரிவதற்கான சந்தர்பத்தை ராதாராணியே ஏற்படுத்திக் கொடுப்பாள். இதர கோபியர்கள், கிருஷ்ணருடன் மாதுர்ய பாவத்தைப் (தெய்வீக காதல் உணர்வுகளைப்) பகிர்ந்துகொள்ளும்போது, தான் கிருஷ்ணருடன் இருக்கும் போது அடையும் மகிழ்ச்சியைவிட பல்லாயிரம் மடங்கு மகிழ்ச்சியடைவாள் ஸ்ரீமதி ராதாராணி. அவ்வளவு கருணை உடையவள் ராதாராணி, நாம் ராதாராணியின் அருளைப் பெற்றோமானால், கிருஷ்ணரின் அருள் தானாகவே கிடைக்கும். இதனால் கிருஷ்ணரை விட்டுவிடலாம் என்று நாம் நினைத்துவிடக் கூடாது. கிருஷ்ணரை விட்டுவிட்டால் ராதை தனது கருணையை நமக்கு வழங்க மாட்டாள்.

ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தில் ராதாராணி

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே

என்னும் மஹா மந்திரத்தில் ‘ஹரே’ என்னும் சொல் 8 முறை வருகிறது. ‘ஹரா’ என்றால் ‘ராதா’ என்று பொருள். ‘ராதா’ என்னும் சொல், விளிச்சொல்லாக வரும்போது ‘ராதே’ என்று மாறுவதைப் போலவே, ‘ஹரா’ என்னும் சொல் ‘ஹரே’ என்று மாறி வருவதாக ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார்.

நாம் இந்த மஹா மந்திரத்தை பகவத் சிந்தனையுடன் வாயினால் உச்சரித்து காதால் நன்கு கேட்க வேண்டும். ‘ஹரே’ என்று சொல்லும்போது அச்சொல்லின் அலைகள் பரவ, ஸ்ரீமதி ராதாராணியின் பெயர் உச்சரிக்கப்படுவதை எண்ணி பகவான் கிருஷ்ணர் மகிழ்கிறார். அதே சமயம் ‘கிருஷ்ண’ என்று சொல்லும்போது, பகவான் கிருஷ்ணரின் பெயர் உச்சரிக்கப்படுவதைக் கேட்டு ராதாராணி மகிழ்ச்சியடைகிறாள். இந்த உணர்வை மனத்தில் நிறுத்தி நாம் ஜெபம் செய்ய வேண்டும். ராதாராணியானவள் நம்மீது கருணை வைத்து கோலோக விருந்தாவனத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்வாளேயானால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அதனைக் நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு
ஸ்ரீமதி ராதாராணி கிருஷ்ணரின் மீது வைத்துள்ள உயர்ந்த அன்பினை கிருஷ்ணரால்கூட உணர முடியவில்லை. அந்த அன்பினை உணர விரும்பிய அவர், ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபுவாக, சுமார் 500 வருடங்களுக்கு முன்பு மேற்கு வங்காளத்திலுள்ள மாயாப்பூரில் தோன்றினார். ஸ்ரீமதி ராதாராணியின் மனோபாவத்தையும் திருமேனி நிறத்தையும் தாங்கி, ஜடவுலகின் கட்டுண்ட ஆத்மாக்களாகிய நம்மையெல்லாம் விடுவிப்பதற்காக பரம கருணா மூர்த்தியாக சைதன்ய மஹாபிரபு தோன்றினார். ஸ்ரீமதி ராதாராணி கருணையே உருவானவள் என்பதால், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் கருணையின் பெருங்கடலாக காட்சியளித்தார். பகவானின் எல்லா அவதாரங்களிலும் அவரே மிகவும் கருணை வாய்ந்தவராகக் கருதப்படுகிறார்.

விருந்தாவனமும், ராதாராணியும்

தப்த காஞ்சன கௌராங்கி
ராதே வ்ருந்தாவனேஸ்வரி
வ்ருஷபானு ஸுதேதேவி
ப்ரணமாமி ஹரி-ப்ரியே

“பொன்னிற மேனியுடையவரும், விருஷபானு மஹாராஜாவின் புதல்வி யுமான ராதாராணியே, விருந்தா வனத்தின் ஈஸ்வரியே, உம்மை நான் வணங்கு கின்றேன்.”

ராதாராணி, விருந்தாவனத்தின் ஈஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். விருந்தாவனத்தில் ராதாராணிக்கு சிறப்பான மதிப்பு உண்டு. நாட்டையே கட்டுப்படுத்தும் பிரதமரின் இல்லத்தை அவரது துணைவி கட்டுப்படுத்துவதுபோல, எல்லா உலகையும் கட்டுப்படுத்தும் கிருஷ்ணரின் இல்லத்தை (விருந்தாவனத்தை) ஸ்ரீமதி ராதாராணி கட்டுப்படுத்துகிறாள். விருந்தாவனத்தில் கிருஷ்ணரைக்காட்டிலும் ராதைக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. விருந்தாவனத்தின் சுவர்களிலெல்லாம் ‘ராதே’ என்ற பெயர் எழுதப்பட்டிருக்கும். விருந்தாவனத்தில் ரிக்ஷா ஓட்டுபவர்கள் ‘நகருங்கள்’ என்று சொல்வதற்கு பதில் ‘ராதே, ராதே’ என்றுதான் சொல்வார்கள்.

விருந்தாவனத்திலுள்ள ராதாகுண்டத்திற்கும் தனிமதிப்பு உண்டு. ராதாகுண்டத்தின் மீதுள்ள பெரும் மதிப்பினால், பொதுவாக இஸ்கான் பக்தர்கள் அதில் நீராடுவதில்லை. ராதாகுண்டத்தின் தீர்த்தத்தை தெளித்துக் கொண்டாலே ராதாதேவியின் கருணை நமக்குக் கிடைக்கும்.

ஸ்ரீமத் பாகவதமும் ஸ்ரீமதி ராதாராணியும்

இவ்வளவு சிறப்புமிக்க ஸ்ரீமதி ராதாராணியின் பெயர் ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்படவில்லையே என்று சிலர் வினவுவது வழக்கம். ஸ்ரீமத் பாகவதம் சுகதேவ கோஸ்வாமியால் மன்னர் பரீக்ஷித்திற்கு உபதேசிக்கப்பட்டதாகும், இது பகவான் கிருஷ்ணரைப் பற்றிய மிகவுயர்ந்த புராணம். கிருஷ்ணரைப் பற்றிப் பேசும்போது அங்கு ராதையும் இடம் பெறுதல் மிகவும் அவசியம். ஆனால், பாகவதத்தில் ஓர் இடத்தில்கூட ராதாராணி பிரத்யேகமாகக் கூறப்படவில்லை. ஒரே ஓர் இடத்தில் மட்டும் அவளது பெயர் மறைமுகமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்னவெனில், ‘ஸ்ரீராதே’ என்று ஒருமுறை சுகதேவர் கூறினாலும், அவர் தன்னை மறந்த பக்திப் பரவசத்தில் ஆழ்ந்து விடுவார். பின்னர், ஏழு நாட்களுக்குள் ஸ்ரீமத் பாகவதத்தை பரீக்ஷித்து மஹாராஜாவுக்கு உபதேசம் செய்ய முடியாது. ஆகவேதான், சுகதேவர் ஒருமுறைகூட ராதிகா தேவியைப் பற்றி நேரடியாக பேசவில்லை,

ஸ்ரீல பிரபுபாதரும் ராதாகுண்டமும்

இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதரின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிகழ்ச்சி ராதா குண்டத்தின் கரையில் நிகழ்ந்தது. ஸ்ரீல பிரபுபாதரின் குருவாகிய ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர், “உனக்குப் பணம் கிடைத்தால் புத்தகங்கள் அச்சடித்து விநியோகம் செய்வாயாக,” என்று ஸ்ரீல பிரபுபாதரிடம் கூறினார். ராதா குண்டத்தின் கரையில் அமைந்திருந்த கௌடீய மடத்தில் வழங்கப்பட்ட இந்த முக்கிய உபதேசம், இஸ்கான் அமைவதற்கும் வளர்ச்சி பெறுவதற்கும் மிக முக்கிய பங்காற்றி யுள்ளதை எவராலும் மறுக்க முடியாது..

நம் கடமை

விருந்தாவனம் மனிதகுலத்திற்கு மிகவும் முக்கியமான இடமாகும். ஒவ்வொருவரும், வாழ்க்கையில் ஒருமுறையாவது விருந்தாவனத்திற்குச் சென்று வர வேண்டும். அதுவே மனிதப் பிறப்பின் பயனாகும். விருந்தாவனத்திற்குச் செல்பவர்கள் விருந்தாவனத்தின் ஈஸ்வரியான ராதிகாதேவியின் அருளைப் பெறுவது உறுதி, “விருந்தாவனத்தின் ஈஸ்வரியே, ஸ்ரீமதி ராதாராணியே, உங்களை வணங்குகின்றேன்; ஆன்மீக குருவிற்கும், உங்களுக்கும், பகவான் கிருஷ்ணருக்கும் சேவை செய்யும் பாக்கியத்தை எப்பொழுதும் எங்களுக்கு அருள்வீர்களாக,” என்னும் பிரார்த்தனையுடன் நம் மனோநிலையை அமைத்து, பகவத் சேவையிலும் குருவின் சேவையிலும் நாம் ஈடுபட்டால், ஜடவுலகின் தீராத துயரங்களான பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகிய துன்பங்களிலிருந்து விடுபட்டு, ஆன்மீக உலகமான கோலோக விருந்தாவனத்திற்கு பகவான் நம்மை அழைத்துச் செல்வார் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.

https://swasthiktv.com/madhura-gaanam-registration/

ராதே ! ராதே ! ராதே கோவிந்தா !