ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் !

381

பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரமும், சுக்லபட்ச நவமி திதியும் கூடிய திருநாள் – ஸ்ரீ ராமனின் பிறந்த நாள். இந்தத் தினத்தையே, புண்ணியம் தரும் ஸ்ரீ ராம நவமியாகக் கொண்டாடுகின்றோம்.

அரக்கன் இராவணனின் கொடுமைகளால் துன்பமுற்ற தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் பிரார்த்தித்தார்கள். மகாவிஷ்ணு அவர்களிடம், ” கவலை வேண்டாம். திரேதா யுகத்தில் அயோத்தி மன்னன் தசரதன் பெற்ற வரப்பயன் காரணமாக அவனுக்கு மைந்தனாக நாம் அவதரிக்கப் போகிறோம். அச் சமயம், இராவணனை அழித்து, உங்கள் துன்பம் துடைப்போம் ” என்று அபயம் அளித்தருளினார்.

அயோத்தி மன்னனாகிய தசரதனுக்குப் பிள்ளைகள் இல்லை. அதனால், ரிஷ்யசிருங்க முனிவர் தலைமையில் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். அந்த யாகத்தின் பயனாக, தசரதச் சக்கரவர்த்தி நான்கு மைந்தர்களைப் பெற்றெடுத்தார். அவர்களுள் முதல்வன் ஸ்ரீ ராமன். ( மற்றவர்கள் லக்ஷ்மணன், பரதன், சத்துருக்கன் ஆகியோர்.) ஸ்ரீ ராமன் அவதரித்த நன்னாளே ‘ ஸ்ரீ ராம நவமித் திருநாள்.

ராம நவமியை வட இந்தியாவில் தொடர்ந்து எட்டு நாட்கள் விழாவாகக் கொண்டாடுகின்றார்கள். நாமும், ஸ்ரீ ராம நவமிக்கு முன் ஒன்பது நாட்கள் வீட்டில் பூஜை செய்து, பெரியவர்கள் மூலமாக இராமாயணம் படித்து, கடைசி ஸ்ரீ ராம நவமி நாளான பத்தாம் நாளன்று இராமாயண பாராயணத்தை நிறைவு செய்வதால் நம் பாவங்கள் அகன்று, மோட்சப் பேறு கிடைக்கும் என்பது நிச்சயம். இராமாயணம் ஒரு சரித்திர நூல் மட்டுமல்ல, தலை சிறந்த பக்திக் காவியமாகவும் திகழ்கிறது. ஆகவே, இராமாயணத்தைப் படிக்கப் படிக்க நம் உள்ளம் தூய்மையடைகின்றது.

மகிமை தரும் ராம நவமி அன்று அதிகாலை எழுந்து நீராடி, பூஜை அறையைச் சுத்தம் செய்து, அலங்கரித்து, பட்டாபிஷேக ராமர் படத்துக்குப் பூச் சூடி, நைவேத்தியங்களைப் படைத்து, ஸ்ரீ ராம நாமம் சொல்லிப் பூஜிக்க வேண்டும்.

இராம நாமம் சொல்லுங்க.

“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சன்மமும் மரணமு மின்றித் தீருமே
இன்மையே ராமவென் றிரன் டெழுத்தினால்”

என்பது கம்பரின் வாக்கு. ஆம், ராம நவமியில் மகிமைமிகு ராம நாமத்தை இடைவிடாது உச்சரிப்பதால் இல்லத்தில் நற்காரியங்களும், செல்வ வளமும் வளர்ந்தோங்கும். நாம் செய்த பாவங்கள் கரைந்து புண்ணியங்கள் கூடும்.

ராம நவமியில் ராமனுக்கு நைவேத்தியமாக நீர்மோர் படைப்பது மிக முக்கியமாகும். ராஜரிஷி விசுவாமித்திரருடன் இருந்தபோதும், அதன்பின், பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தின்போதும், தசரத ராமன் நீர்மோரையும், பானகத்தையும் தாக சாந்திக்காக அருந்தினார். அதன் நினைவாகவே, நீர்மோரும், பானகமும் ஸ்ரீ ராமனின் அவதார தினமான ஸ்ரீ ராம நவமி அன்று நிவேதனப் பொருட்களாகப் படைக்கப் படுகின்றன.

இதைத்தவிர, பொங்கல், பருப்பு வடை போன்றவற்றையும் நிவேதனம் செய்து, பகிர்ந்து உண்பார்கள். ஸ்ரீ ராமன் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டதால், அவருடைய பிறந்த நாளில் எளிய பானங்களான நீர்மோர், பானகம் வழங்குவதையும், விசிறி தானம் செய்வதையும் வழக்கமாக அமைத்தனர்.

ராம நவமியில் இப்படிப்பட்ட சிறப்பு நைவேத்தியங்கள் படைத்து இறை பூஜை செய்ய இயலாதவர்கள் வருந்தத்தேவையில்லை. எச்சில் கனியையும் உண்டு, சபரிக்கு அருள் செய்தவர் அல்லவா, நம் இராமன்? எனவே, வாழைப்பழம், பால் போன்ற எளிய பொருட்களை அர்ப்பணித்தும், ஸ்ரீ ராம நாமம் சொல்லியும் ஸ்ரீ ராமனை வணங்கி அருள் பெறலாம்.

ஆலயத்திலும் சரி, இல்லத்திலும் சரி, பூஜையின்போது, ராமபிரானை வணங்கியபிறகு, பூஜையில் கலந்துகொள்ளும் பெரியோர்களையும், ராம பக்தர்களையும்கூட வணங்கி அவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற வேண்டும். ஏன் தெரியுமா?

ராம நவமியன்று, ராம நாமம் உச்சரிக்கப்படும் இடங்களிலும், இராமாயணம் படிக்கப்படும் இடங்களிலும் அங்குள்ள அடியவர்கள் மீது ஸ்ரீ ஆஞ்சநேயர் எழுந்தருள் செய்து ஆனந்திப்பாராம். எனவே, அடியவர்களை வணங்குவதன்மூலம் அனுமனின் அருளையும் பெறலாம்.

இது மட்டுமா? ஒருமுறை விசுவாமித்திர முனிவருக்கு அளித்த வாக்கின்படி, ஸ்ரீ ராமன் அனுமனோடு போரிட நேர்ந்தது. அச்சமயம், அனுமன் ராமநாமத்தை உச்சரித்து அதையே தனக்குக் கவசமாகக் கொண்டாராம். மேலும், பாவங்களைப் போக்கும் அக்கினி பீஜமாகிய ‘ர’, ஞானம் தரும் சூரிய பீஜமாகிய ‘அ’, செல்வத்தை அள்ளித்தரும் சந்திர பீஜமாகிய ‘ம’ – ஆகிய மூன்றெழுத்துகள் கொண்ட ஸ்ரீ ராம நாம மந்திரத்தை தினமும் ஓதுவதால், நம் பாவங்கள் யாவும் நீங்கி, கல்வி, செல்வம், வீரம் ஆகிய யாவும் பெற்றுச் சிறப்படையலாம். அது மட்டுமா ?

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே

என, எந்நாட்டவர்க்கும் இறைவனாம் ஈசனே, ஸ்ரீ ராமரைப் போற்றிப் புகழ்ந்து, உமையாளுக்கு உபதேசம் செய்து மகிழ்ந்த மந்திரம் ராம நாம மந்திரமாகும். அதாவது, ” அழகிய முகத்தவளே, ஸ்ரீ ராம ராம ராம என்று, மனதுக்கு இனியவனாகிய ராமனிடத்தில் நான் ஆனந்தம் அனுபவிக்கிறேன். அந்த ராம நாமம், சஹஸ்ர நாமத்துக்கு சமமானது ” என்று பார்வதிதேவியிடம் இராம நாமத்தின் மகிமையைச் சிவபெருமான் கூறி மகிழ்ந்தாராம்.

ஆகவே, நாமும் ஸ்ரீ ராம நாமம் கூறி உயர்வடைவோமாக.

ஸ்ரீ ராம சீதா ஜெயம் !!!!

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !