ஸ்ரீ சாந்தானந்தா சுவாமிகளும் கந்தகுரு கவசமும்!

58

ஸ்ரீ சாந்தானந்தா சுவாமிகளும் கந்தகுரு கவசமும்!

மதுரை அருகே அழகாபுரி எனும் சிற்றூரில் ஒரு அந்தணக் குடும்பத்தில் 1921ம் ஆண்டு பிறந்தவர் சாந்தானந்தா சுவாமிகள். பெற்றோர்கள் இவருக்கு இட்ட பெயர் சுப்ரமணியம். பள்ளிப் பாடத்தில் விருப்பம் கொள்ளாததால், பாடசாலையில் சேர்ந்து வேதங்கள் பயின்றார். மதுரை திருப்பரங்குன்றத்தில் சமாதி கொண்ட சூட்டுக்கோல் மாயாண்டி சித்தரிடம் புவனேஸ்வரி மந்திர தீட்சை பெற்றவர். பல ஸ்தலங்களுக்கும் சென்று தவ ஆற்றலைப் பெற்றவர். வடக்கே ரிசிகேசத்தில் உள்ள சுவாமி சிவானந்த மகராஜ் ஆசிரமத்தில் சில காலம் தங்கியுள்ளார்.

சேலம் அருகே சேந்தமங்கலத்தில் சன்னியாசிக் காடு என்ற குன்றில் ஜட்ஜ் சுவாமிகளின் சீடரான ஸ்ரீமத் சுயம்பிரகாச ப்ரம்மேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆலயம் அமைத்து தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். அவரைத் தேடி வந்த சுப்ரமண்யம் அவரே தனக்கான குரு என உணர்ந்து சரணாகதி அடைந்தார். குருவால் உபதேசம் பெற்று சாந்தானந்தா என்ற திருநாமத்தையும் பெற்றார்.

சாந்தானந்தா ஸ்வாமிகள் நிறுவிய ஸ்ரீ கந்தாஸ்ரமம்:

1965 ஆம் ஆண்டு ஸ்ரீ கந்தாஸ்ரமத்தை நிறுவிய சாந்தானந்த சுவாமிகளின் கனவில் தோன்றிய முருகப்பெருமான் தன்னைக் குறிப்பிட்ட இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யும்படி கூறினார். கனவில் வந்த முருகப்பெருமான் சொன்ன இடத்தை தேடி அலைந்தவர் கடைசியாக இப்போது கந்தாஸ்ரமம் இருக்கும் இடத்தை அடைந்தவுடன், தான் கனவில் கண்ட இடம் இதுதான் என்று கூறி இங்கு முருகனை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினார்.

பின்னர் சுவாமிகளால் ஆசிரமத்தார் தங்குவதற்கு ஏதுவாக கூடங்கள் எல்லாம் கட்டப்பட்டு 1971ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அங்கு கோயில் கொண்டு அருள்பாலிக்கும் ஸ்கந்தனின் ஸ்கந்த குரு கவசம் சாந்தானந்த சுவாமிகள் அருளியதே ஆகும்.

தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் குரு சேவை, இறை சேவை, மக்கள் சேவை என்றே அர்ப்பணித்த ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் 27.5.2002ம் நாள் முக்தி அடைந்தார். அவரது விருப்பப்படி அவரது அதிர்ஷ்டானம் ஸ்ரீ கந்தாஸ்ரமத்தில் உள்ளது. கந்தனைப் பற்றி பால தேவராய சுவாமிகளால் பாடப்பட்ட கந்த சஷ்டி கவசம் எவ்வளவு சிறப்புகள் வாய்ந்ததோ, அதே போன்று ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய கந்த குரு கவசமும் பல்வேறு சிறப்புக்களைக் கொண்டது.