சத்தான பனங்கிழங்கில் குருமா செய்வது எப்படி?

241

சத்தான பனங்கிழங்கில் குருமா செய்வது எப்படி?

பனங்கிழங்கில் உள்ள அதிகப்படியான இரும்பு சத்து இரத்த சோகை நோயை எளிதில் குணப்படுத்துகிறது. எனவே இரத்த சோகை உள்ளவர்கள் இந்த பனங்கிழங்கை தொடர்ந்து சாப்பிடுங்கள் நல்ல பலன் கிடைக்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

பொதுவாக சர்க்கரை நோயாளிகள் பூமிக்கு அடியில் விளையக்கூடிய எந்த பொருட்களையும் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன. ஆனால் இந்த பனங்கிழங்கில் உள்ள சில வகையான வேதிப்பொருட்கள் உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கின்றது. இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக்கொள்ளும். எனவே இந்த பனங்கிழங்கை எந்தவித பயம் இல்லாமல் சாப்பிடலாம்.

பனங்கிழங்கில் நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தாது உப்பு, புரதம், சர்க்கரை, ஒமேகா-3, பொட்டாசியம், வைட்டமின் பி, பி1, வைட்டமின் சி மற்றும் தொகுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. பனங்கிழங்கு உடலுக்குப் பொலிவைத்தந்து, அழகைக் கூட்டுகிறது.

பனங்கிழங்கில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால், மலச்சிக்கல் வராது தடுக்கிறது. இதனால், பெருங்குடலில் உண்டாகிற புற்றுநோய் கட்டுப்படுத்தப்படுகிறது. இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் உடல் வலிமை, மூளை வளர்ச்சி, எலும்புகளை பலம் பெறச் செய்தல் ஆகியவற்றிற்கு துணை செய்கிறது.

நமது உடல் ஆரோக்கியத்தில் பெரும்பங்கு வகிப்பது பனங்கிழங்குன்னு சொல்லலாம். இந்த கிழங்கை நன்றாக வேகவைத்து, மேல் தோலையும் நடுவிலிருக்கும் சற்று கடினமான குச்சி போன்ற பகுதியையும் நீக்கி விட்டு சாப்பிட வேண்டும். இப்போது இப்பதிவில் நாம் சத்தான பனங்கிழங்கை வைத்து ருசியான குருமா எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

பனங்கிழங்கு குருமா செய்ய தேவையான பொருட்கள்:

  1. இளசான பனங்கிழங்கு – 2,
  2. உருளைக்கிழங்கு – 1,
  3. பெரிய வெங்காயம் – 1,
  4. எலுமிச்சம்பழச்சாறு – கால் டீஸ்பூன்,
  5. தக்காளி – 1,
  6. மல்லித்தழை – சிறிது.

விழுதாக அரைக்க:

  1. பச்சை மிளகாய் – 12,
  2. தேங்காய் – 1 மூடி,
  3. பொட்டுக்கடலை – 4 டீஸ்பூன்,
  4. சீரகம் – கால் டீஸ்பூன்,
  5. உப்பு – தேவைக்கேற்ப.
  6. சோம்பு – கால் டீஸ்பூன்.

தாளிக்க:

  1. எண்ணெய் – தேவையான அளவு,
  2. மிளகு – கால் டீஸ்பூன்,
  3. சோம்பு – கால் டீஸ்பூன்,
  4. பட்டை, கிராம்பு, ஏலக்காய் பொடித்தது – 1 சிட்டிகை.

செய்முறை விளக்கம்:

பனங்கிழங்கை நன்றாக வேகவைத்து, தோல் உரித்து, நார் எடுத்து, பின் சிறு சதுரங்களாக (சுண்டைக்காய் அளவு) நறுக்கவும். விழுதாக அரைக்க வேண்டியவற்றை அரைத்தெடுக்கவும்.

வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கை சிறு சதுரங்களாக நறுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெயைச் சுட வைத்து, தாளிப்பவற்றை போட்டு தாளித்து, அதில் வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும் (அடுப்பை குறைந்த தணலில் வைத்துக் கொள்ளவும்).

அத்துடன் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து, சிறிது உப்பும் சேர்த்து 10 நிமிடத்தில் பனங்கிழங்கை சேர்க்கவும். குருமா சற்று கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிட்டு மல்லித்தழை தூவி இறக்கி கால் டீஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறை ஊற்றி கலந்து பரிமாறவும். சுவையான பனங்கிழங்கு குருமா தயார்.