Saturday, October 14, 2023
HomeAanmeega Thagavalgalமன விலக்கு இல்லாவிட்டால் மண விலக்கு ஏது?

மன விலக்கு இல்லாவிட்டால் மண விலக்கு ஏது?

மன விலக்கு இல்லாவிட்டால் மண விலக்கு ஏது?

காம உணர்ச்சியைப் புறக்கணிக்க வேண்டும் என்று நம் ஆன்மிகம் சொன்னதில்லை. அதை ஒழுங்கு செய்து கொள்ள வேண்டும் என்றே சொல்கிறது.

காமத்தை வென்றவர்களே ஞானிகள். காமத்தை அனுபவித்தும் வெல்லலாம். அனுபவியாமலும் வெல்லலாம். ஆதிசங்கரர், விவேகானந்தர் போன்றோர் அந்த உணர்ச்சியை அனுபவியாமலே, அது தம் வாழ்வில் தேவையில்லை என திடசித்தத்தால் வென்றவர்கள். ராகவேந்திரர், புத்தர் போன்றோர் இல்லறத்தில் ஈடுபட்டு காம சுகத்தை அனுபவித்து மக்கட்பேற்றை அடைந்து, பின் காமத்தை முற்றிலுமாய்த் துறந்து துறவியானவர்கள்.

உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரன் என்னும் வைப்பிற்கோர் வித்து!’ – என்கிறது வள்ளுவம். ஞான வலிமை என்னும் அங்குசத்தைக் கொண்டு ஐம்புல உணர்வுகளாகிய யானையை அடக்கி வெல்பவன் போற்றத்தக்கவன். அத்தகு ஞானம் வாய்க்கப் பெறும் வரை, உணர்ச்சிகளை அனுபவித்து ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து இது இவ்வளவுதான் என மெய்யறிவு பெற்று ஞானியாதல் என்பது இயல்பான ஒரு நெறி.

அருணகிரிநாதர் போல, காமத்தில் அளவற்றுத் திகட்டத் திகட்டத் தோய்ந்து, பின் வெறுத்து ஞானியானவர்களும் உண்டு என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். காம உணர்வு இல்லாத பருவம் என வாழ்வில் ஒரு பருவமும் இல்லை என்கிறார் சிவானந்தர். இளமைப் பருவத்தில் அது ஓங்கியிருக்கிறது. முதுமையில் அது அடங்கியிருக்கிறது.

இயல்பான இல்வாழ்வில் ஈடுபட்டு, ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்து, மக்கட்பேற்றை அடைந்து, வாழ்வின் இன்ப துன்பங்களை இணைந்து அனுபவித்து, பின் ஞானியாக மலர்ச்சி அடைதல் என்பது மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அறம். அதனால்தான் ஒருவனுக்கு ஒருத்தி என வாழும் வாழ்வில் உள்ள காதல் நயங்களை வள்ளுவம் மனம் தித்திக்கும் வகையில் பேசுகிறது.

காதல் வாழ்வில் உள்ள நயங்களில் மேலான நயம் என்பது தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே நேரும் ஊடல். ஒருவகையில் ஊடல் என்றால் சண்டைதான். வேண்டுமானால் செல்லச் சண்டை என வைத்துக் கொள்ளலாம். கணவன்-மனைவி இருவரும் சுதந்திரமாகவும் உரிமையுடனும் ஒருவருக்கொருவர் ஆனந்தமாகச் சண்டை போட்டுக் கொண்டு வாழவேண்டும்! அதுவே நல்ல இல்லறம்.

சண்டை போடுகிறபோது மன அழுத்தம் மறைகிறது. நாம் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டோம் என்ற நிம்மதி கிடைக்கிறது. ஆனால், நல்ல இல்லறத்தில் அந்தச் சண்டை நீடிக்கலாகாது. கோட்பாட்டுக்காக, ஒரு விஷயத்திற்காகத் தான் சண்டை போட்டுக் கொண்டோமே தவிர மற்றபடி வேறு பேதம் ஏதும் தம்மிடம் இல்லை என்பதை தம்பதியர் உணர வேண்டும்.

வெளிப்படையாகச் சண்டை போட்டுக் கொண்ட நம் முன்னோர்கள், வாழ்வின் கடைசிக் காலம் வரை ஆனந்தமான தம்பதிகளாக வாழ்ந்தார்கள். கணவன்-மனைவிக்குள் சண்டை போட்டுக் கொள்ளும் உரிமை உண்டு என அந்த உரிமையை மகிழ்ச்சியுடன் அனுபவித்தவர்கள் அவர்கள். இன்றைய தம்பதியரில் பெரும்பாலோர் தங்கள் வாழ்க்கைத் துணை பற்றிய எண்ணங்களை வெளிப்படையாகக் கேள்வி கேட்டுத் தீர்த்துக் கொள்ளாமல் உள்ளத்தில் வைத்துக் கொண்டு புழுங்குகிறார்கள். அதனால் தான் தொட்டதற்கெல்லாம் (அல்லது தொடாததற்கெல்லாம்!) மணவிலக்கு நேர்ந்துவிடுகிறது. மன விலக்கு நேராமல் பார்த்துக் கொண்டால் எந்தச் சண்டையும் மண விலக்கிற்கு வழிகோலாது.

சண்டையும் சச்சரவும் சாப்பாட்டில் உப்பைப் போல் வாழ்வை இனிமையாக்கும். உப்பு அளவோடு இருப்பதுதான் சுவை. அண்ணன்-தம்பியுடனும், அக்கா-தங்கையுடனும் சண்டை போடுகிறோம். பின் சிரித்துக் கொண்டே பேசவும் செய்கிறோம். அண்ணனையோ தங்கையையோ யாரும் உறவு ரத்து செய்து விடுவதில்லை. இந்த வகையான மனப்போக்கை இல்லறத்தாரும் பழகிக் கொண்டால் விவாக ரத்து என்ற விஷயமே ஒழிந்துவிடும்.

சண்டையே இல்லாத இல்லறத்தில் எந்த சுவாரஸ்யமும் இல்லை என்பதை உணர்ந்து நாம் அமைதி காண்பது நல்லது. அப்பாவையோ அம்மாவையே அண்ணனை யோ தம்பியையோ அக்காவையோ தங்கையையோ இதுபோன்ற எந்த உறவையும் நாம் தேர்வு செய்வதில்லை. எல்லாம் தானாக அமைவதுதான். அதுபோலவே கணவன் மனைவி உறவும் இறையருளால் நமக்கு வந்து அமைவதுதான் என்பதை உணர்ந்து விட்டால் இல்லறம் நிரந்தரமாக இனிக்கத் தொடங்கும்.

இன்னாருக்கு இன்னவர் என்பது இறைவன் விதித்த தீர்ப்பு. கணவன்-மனைவி பந்தம் ஜென்ம ஜென்மங்களாகத் தொடரும் உறவு என்பதையும் நம் வாழ்க்கைத் துணை நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய பரிசு என்பதையும் உணரத் தொடங்கும்போது வாழ்வில் ஆனந்தத்தைத் தவிர வேறு ஏதும் இராது. உயர்ந்த இல்லறத்தின் பண்பு என்ன என்பதைக் கண்ணதாசன் அழகாக விளக்குகிறார். ‘கேள்வி வரும்போது பதில் ஒன்று வேண்டும், கேட்க நினைக்காத மனம் ஒன்று வேண்டும்!’ என்கிறார் அவர்.

எந்தக் கேள்விக்கும் வாழ்க்கைத் துணையிடம் ஒரு நேரடியான, வெளிப்படையான பதில் இருக்க வேண்டும். ஆனால், கேள்வி கேட்க வேண்டிய தேவையே இல்லாத அளவு வாழ்க்கைத் துணையிடம் பூரண நம்பிக்கையும் இருக்க வேண்டும். தலைவன் தலைவி சண்டையை ஊடல் எனக் கூறி இலக்கிய நயத்தோடு கொண்டாடுகிறது வள்ளுவம். புலவி, புலவி நுணுக்கம், ஊடலுவகை ஆகிய திருக்குறளின் கடைசி மூன்று அதிகாரங்கள் ஊடலின் நயத்தை நாம் நினைத்து நினைத்து மகிழுமாறு பேசுகின்றன.

ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம்  கூடி முயங்கப் பெறின்!’ – என்பது திருக்குறளின் கடைசிக் குறள். இல்லறத்தில் ஊடுதலாகிய சண்டையே இன்பம். அந்தச் சண்டைக்குப் பின் ஏற்படும் சமாதானத்தின் போது விளையும் கூடல் அந்த இன்பத்தை மிகுதிப் படுத்துகிறது.  காதலியுடன் இருக்கும்போது தும்மல் வந்தது.

அடக்கத் தெரியாமல் தும்மித் தொலைத்துவிட்டான் தலைவன். விடுவாளா அவள்? தும்மியவுடன் சொல்கிற மரபுப்படி ‘நீடு வாழ்க!’ என அவனை வாழ்த்தியவள் உடனே அதை மாற்றிக் கொண்டாள். கடும் கோபத்தோடு, ‘யாராவது நினைத்தால் தானே நினைக்கப்பட்டவர்க்குத் தும்மல் வரும்? நீங்கள் தும்மினீர்களே? நான் தான் உங்களுடன் இருக்கிறேனே? என்னைத் தவிர வேறு எந்தச் சிறுக்கி உங்களை நினைத்தாள் இப்போது?’ என்று கேட்டு அழுதாளாம் அவள்!

நமது மரபில், ஊடல் தோன்றிவிட்டால், தலைவியை சமாதானம் செய்வதற்காக அவள் காலிலும் தலைவன் விழுந்து வணங்கலாம் என்று சொல்கின்றன நம் இலக்கியங்கள்!

சிவனுக்கும் பார்வதிக்கும் இடையே ஊடல். பார்வதியை எவ்விதமேனும் சமாதானம் செய்ய வேண்டுமே? ‘நான் செய்ததெல்லாம் தவறுதான், மன்னித்துக்கொள்!’ எனப் பார்வதிதேவியின் பாதங்களில் தலைவைத்து வணங்கி இறைஞ்சுகிறான் இறைவன். பார்வதி அளவற்ற மகிழ்ச்சி அடைகிறாள். எதற்கு? தன் கணவன் தன் காலில் விழுந்தான் என்பதற்காக அல்ல. அப்படி அவன் விழுந்தபோது அவன் தலையில் உள்ளவளும் பார்வதியின் சக்களத்தியுமான கங்கையும் அவள் காலில் விழுந்தாள் இல்லையா? அதனால்தான் பார்வதிக்கு அளவற்ற மகிழ்ச்சி என விளக்கம் தருகிறார் சிவப்பிரகாசர்!

ராமனுக்கும் சீதைக்கும் இடையே நடைபெற்ற ஊடல் ஒன்றை ராமாயணம் விவரிக்கிறது. ஏதோ சண்டை ஒன்று தோன்றிவிட்டது. ஆனால், சண்டை நீடிப்பதை ராமனும் விரும்பவில்லை.

சீதையும் விரும்பவில்லை. மறுபடி சகஜமாகப் பேசிக் கொள்ளவேண்டும். அதற்கு என்ன வழி என ஆராய்கிறது ராமனின் மனம். அவன் தன் விரலில் உள்ள மோதிரத்தை வேண்டுமென்றே கீழே போடுகிறான். பிறகு, ‘எனக்கு சீதை என்ற பேரழகியை மணம் செய்துகொடுத்த போது என் மாமனார் ஒரு மோதிரத்தை என் விரலில் அணிவித்தாரே, அந்த மோதிரத்தைக் காணோமே?’ என்று வெளிப்படையாகச் சொல்லியவாறே தேடுகிறான்.

தன் அழகைக் கணவன் புகழ்ந்ததில் சீதைக்கு வெட்கம் கலந்த மகிழ்ச்சி. ‘இதோ அந்த மோதிரம் இங்குதானே இருக்கிறது பிராணநாதா!’ என்று, ராமனின் கண்ணுக்கு எதிரேயே தென்பட்ட மோதிரத்தை சீதை எடுத்துக் கொடுக்க அவர்கள் சண்டை தீர்ந்து சமாதானம் ஆனார்களாம்!

கண்ணனைப் பற்றி என்ன சொல்ல! அவன் காதலுக்கென்றே படைக்கப்பட்ட கடவுள். திருட்டு அவன் தொழில். பொய் அவன் பொழுதுபோக்கு! எல்லாப் பெண்களின் இதயங்களையும் ஒருசேர அள்ளித் திருடுவான் அவன். ஒருத்தியைத் தேடிப் போகும்போது இன்னொருத்தியை ஏங்கித் தவிக்க வைப்பான். ‘சொன்னபடி நேற்று நீ ஏன் என் வீட்டிற்கு வரவில்லை?’ என்று ஒரு கோபிகை கேட்டால் அதற்கு பதிலாக அளப்பதற்குக் கண்ணனிடம் ஆயிரம் பொய்கள் தயாராக இருக்கும்.

வள்ளுவர் சொல்லும் நெறிப்படி இல்லறம் நடத்தினால் விவாகரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + five =

Most Popular