விஸ்வரூப தரிசனம் என்றால் என்ன?
மார்கழி மாதத்தில் ஒரு நாள் ஆண்டாள் கோயிலில் விஸ்வரூப தரிசனத்திற்கு பலரும் காத்திருந்தனர். அதில் ஒரு சிலருக்கு கண் பார்வை கிடையாது. விஸ்வரூப தரிசனம் என்பதற்கு அதிகாலை முதல் தரிசனம் என்பது பொருள். அதாவது, இறைவனை அவன் திருமஞ்சனத்திற்கு (நீராட்டுதல்) முன்னர் அவனது முந்தைய நாளின் அலங்காரத்தில் தரிசிப்பது. திரை விலக்கப்பட்டதும், பகவானையும் பிராட்டியாரையும் எப்படி பார்வையற்றவர்களால் பார்க்க முடியும்? பார்வை உள்ளவர்களை விட பார்வையற்றவர்களால் தான் பகவானை அதிகம் உணர முடியும்.
பொதுவாக சர்வ சாதாரணமாக கோயிலுக்கு சென்று இறைவனை காண்பதை தரிசனம் என்கிறோம். ஆனால், இறைவன் நம்மை பார்ப்பது விஸ்வரூப தரிசனம். காலை முதன் முறையாக தனக்கு முன் உள்ள திரை விலக்கப்பட்டதும் தன்னை காண யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்களென்று இறைவன் காண்பார். அப்போது அவரது அருள் பார்வை நம் மீது நேரடியாக விழும். அதுதான் விஸ்வரூப தரிசனத்திற்குரிய சிறப்பு.
இந்த விஸ்வரூப தரிசனத்தில் இறைவனை இவர்களால் பார்க்கமுடியாவிட்டாலும், இறைவன் அவர்களை பார்ப்பார் அல்லவா? இறைவனை நாம் பார்க்க முடியாவிட்டாலும், இறைவன் நம்மை பார்த்தால் போதும் என்று கண் பார்வையற்றவர்கள் கோயிலுக்கு வருகிறார்கள்.
காலங்காலமாக கோயிலுக்கு செல்பவர்களுக்கு கூட விஸ்வரூப தரிசனத்தின் பொருள் என்னவென்று தெரியாது. ஆனால், இப்படியொரு தரிசனத்தை காண்பதற்கு பார்வையற்றவர்கள் கோயிலுக்கு செல்கிறார்கள். இறைவன் பார்வை நம் மீது விழவில்லையே என்று நினைப்பவர்கள், அதிகாலை விஸ்வரூப தரிசனத்திற்கு சென்று வாருங்கள். இறைவனின் பார்வை தினந்தோறும் கூட உங்கள் மீது படும். அதன் பிறகு உங்களது மனம் தூய்மை பெறும்.
மார்கழி மாதம் கோயிலுக்கு சென்று வந்தால் வருடம் முழுவதும் கோயிலுக்கு சென்ற புண்ணியம் கிட்டும். அப்படி செல்வதென்றால் அதிகாலை விஸ்வரூப தரிசனத்திற்கு சென்று வந்தால் எப்படி இருக்கும்? ஆகையால் தான் வருடத்தில் மற்ற மாதங்களில் கோயிலுக்கு சென்று இறைவனை தரிசிக்க முடியாதவர்கள் மார்கழி மாதத்தை தவறவே விடக் கூடாது. மற்ற நாட்களில் கோயில்களில் விஸ்வரூப தரிசனம் உண்டு என்றாலும், மார்கழி மாதம் தினந்தோறும் காலை 5 மணி முதல் 5.30 மணிக்குள்ளாக விஸ்வரூப தரிசனம் கிட்டும்.
விஸ்வரூப தரிசனத்திற்கு ஆண்கள் தான் செல்ல வேண்டும், பெண்கள் தான் செல்ல வேண்டும் என்ற வேறுபாடு எல்லாம் கிடையாது. யார் வேண்டுமென்றாலும், இறைவனை காண்பதற்கும், இறைவன் நம்மை காண்பதற்கும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு கோயிலுக்கு செல்லலாம். அதிகாலை தரிசனம் உடலுக்கும், மனதிற்கும் அமைதி தரும். நோய் நொடியின்றி வாழ வைக்கும்.
