தென்னிந்தியாவின் வைகுண்டம்” என்று அழைக்கப்படும், #திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில், #கன்னியாகுமரி மாவட்டம்!
தெற்கே தலை வைத்து, வடக்கே கால் நீட்டி, மேற்கே பார்த்த நிலையில் 22 அடி நீளத்தில் யோக நித்திரையில் பெருமாள் காட்சி தரும் இக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் ஒன்று.
கோயில் இருக்கும் பகுதியைச் சுற்றி பரளியாறு வட்டமாக ஓடுவதால் திருவட்டாறு எனும் பெயர் பெற்றது.
கோயில் கட்டப்பட்ட காலம் குறித்து சரியான கருத்து இல்லையென்றாலும் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள்.
ஆனாலும் கி.பி 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த நம்மாழ்வார் இக்கோயிலுக்கு மங்களாசனம் பாடி “வாட்டாற்று கேசவன்” என்றழைப்பதன் மூலம் குறைந்த பட்சம் 1200 வருடங்களுக்கு முற்பட்டது இக்கோயில் என்பது தெளிவாகிறது.
தூண்களும், கதவுகளும், மேற்கூரைகளும் மரத்தால் செய்யப்பட்டிருக்க, செம்பு தகடால் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட 5 கலசங்கள் விமானத்தை அலங்கரிக்கின்றன.
22 அடி நீளப் பெருமாளை ஒரே வாசல் வழியே தரிசிக்க முடியாது என்பதால் திருத்தலை, திருக்கரம், திருப்பாதம் என மூன்று வாயில்கள் அமைக்கப் பட்டுள்ளன.
பெருமாளின் மேனி கடுசர்க்கரைப் பூச்சால் செய்யப்பட்டிருப்பதால் அபிசேகம் கிடையாது. அருகிலிருக்கும் உற்சவருக்குதான் அபிசேகம்.
சுற்றியோடும் ஆற்றின் நடுவே உள்ள இக்கோயிலில் பூசை செய்பவர்கள் பிராமணர்கள் இல்லை.
வருடத்தின் இரண்டு மாதங்களில் (புரட்டாசி & பங்குனி) 6 நாட்கள் மட்டும் சூரியக் கதிர்கள் கர்ப்பக்கிரகத்தின் உள்ளே விழும் வகையில் கோயில் கட்டப்பட்டுள்ளது.
பிற்காலத்தில் (கி.பி 1604 ல்) கட்டப்பட்ட ஒற்றைக்கல் மண்டபம் ஒரே கல்லில் உருவாக்கப்பட்டது.
மூலவர் : ஆதிகேசவ பெருமாள்.
தாயார் : மரகதவல்லி நாச்சியார்.
தீர்த்தம் : கடல் வாய் தீர்த்தம் வாட்டாறு.
பழமை : 2000-3000 வருடங்களுக்கு முன். ஊர் : திருவட்டாறு.
மங்களாசாசனம் – நம்மாழ்வார்
“வாட்டாற்றானடி வணங்கி மாஞலப் பிறப்பறுப்பான் கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானை பாட்டாய பலபாடி பழவினைகள் பற்றறுத்து நாட்டாரோடு இயல்வொழிந்து நாரணனை நண்ணினமே” – நம்மாழ்வார்.
திருவிழா :
ஓணம், ஐப்பசி பிரமோற்ஸவம், புரட்டாசி சனி, வைகுண்ட ஏகாதசி.
தல சிறப்பு :
இங்குள்ள பெருமாளின் திருமேனி கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால், 16008 சாளக்கிராம கற்களை (நாராயணனின் வடிவமான கல் வகை) இணைத்து உருவானது.
பெருமாளை மூன்று வாசல் வழியாகத்தான் தரிசிக்க முடியும். நடுவாசலில் உள்ள உற்சவர் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருளுகிறார்.பெருமாளின் நாபியில் தாமரையோ, பிரம்மனோ கிடையாது. இதனால் இவரை வணங்கினால், மறுபிறப்பு கிடையாது என்பது ஐதீகம்.
கருவறையில் கருடன், சூரியன், பஞ்சாயுத புருஷர்கள், மதுகைடபர் என்னும் அரக்கர்கள் உள்ளனர். சிரசின் அருகே ஹாதலேய மகரிஷி மண்டியிட்டு அமர்ந்துள்ளார்.
ஆண்டுதோறும் பங்குனி 3 முதல் 9 வரையிலும், புரட்டாசி 3 முதல் 9 வரையிலும் சூரியனின் அஸ்தமன கதிர்கள் மூலவரின் மீது பட்டு தரிசிப்பதைக் காணலாம்.
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 76 வது திவ்ய தேசம்.
108 திருப்பதிகளை தரிசனம் செய்பவர்கள் திருவனந்தபுரம் பத்மநாபரை தரிசிப்பதற்கு முன், ஆதிகேசவப்பெருமாளை தரிசிப்பது சிறப்பு. பிரார்த்தனையின் மூலம் கேட்டதையெல்லாம் கொடுக்கும் பெருமாள்.
நேர்த்திக்கடன் :
பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து வழிபடுதல்.
#தலபெருமை நீளமான சிலை:
பெருமாளின் 108 திருப்பதிகளில் இத்தல பெருமாள் தான் கிடந்த கோலத்தில் மிகப்பெரிய அளவில் அருள்பாலிக்கிறார்.
இவர் திருவனந்தபுரம் அனந்தபத்மநாபரை பார்த்த நிலையில் மேற்கு நோக்கி அருளுகிறார்.
மேற்கு பார்த்த பெருமாளை தரிசிப்பது மிகவும் சிறப்பு. இடது கையை தொங்கவிட்டு, வலது கையில் முத்திரை காட்டி, தெற்கே தலைவைத்தும், வடக்கே திருவடி காண்பித்தும் சயனத்தில் உள்ளார்.
இத்தகைய கோலத்தை காண்பது மிகவும் அரிது. தாயார் மரகதவல்லி நாச்சியார்.
தல வரலாறு :
பிரம்மா யாகம் நடத்திய போது ஏற்பட்ட தவறால், யாக குண்டத்தில் இருந்து கேசன், கேசி என்ற அரக்கர்கள் தோன்றினர். இவர்களால் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொந்தரவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட இவர்கள் திருமாலிடம் முறையிட்டனர்.
திருமால் கேசனை அழித்து, கேசியின் மேல் சயனம் கொண்டார். கேசியின் மனைவி பெருமாளை பழிவாங்கும் நோக்கத்துடன், கங்கையையும், தாமிரபரணியையும் துணைக்கு அழைக்க, அவர்கள் இருவரும் வேகமாக ஓடி வந்தனர்.
இதையறிந்த பூமாதேவி திருமால் சயனித்திருக்கும் பகுதியை மேடாக்கினாள். அவர்கள், திருமால் இருந்த இடத்தை சுற்றி வணங்கி இரண்டு மாலைகள் போல் வட்ட வடிவில் ஓட ஆரம்பித்தனர். இதனால் இத்தலம் “வட்டாறு’ என அழைக்கப்பட்டது.
இரு நதிகளும் பெருமாளுக்கு மாலை சூட்டியது போல் இருப்பதைக்கண்ட நம்மாழ்வார், “மாலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான்’, என பாடுகிறார். கேசனை அழித்ததால் இத்தல பெருமாள் கேசவப் பெருமாள் எனப்படுகிறார்.
#சிறப்பம்சம் அதிசயத்தின் அடிப்படையில்:
இங்குள்ள பெருமாளின் திருமேனி கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால், 16008 சாளக்கிராம கற்களை (நாராயணனின் வடிவமான கல் வகை) இணைத்து உருவானது. ஆண்டுதோறும் பங்குனி 3 முதல் 9 வரையிலும், புரட்டாசி 3 முதல் 9 வரையிலும் சூரியனின் அஸ்தமன கதிர்கள் மூலவரின் மீது பட்டு தரிசிப்பதைக் காணலாம்.
இருப்பிடம் :
நாகர்கோவிலில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் திருவட்டார் அமைந்துள்ளது.
