ஆதிசங்கரர் ஜெயந்தி ஸ்பெஷல் ! 28.4.20 !

385

ஸ்ரீ குரு க்ருபா:

ச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத்பாத சங்கரம் லோக சங்கரம்.!!!

ச்ருதி எனப்படும் வேதங்களுக்கும், ஸ்ம்ருதி எனப்படும் சாஸ்திரங்களுக்கும், புராணங்களுக்கும் இருப்பிடமானவரும், கருணா மூர்த்தியும், உலகம் முழுவதற்கும் மங்களத்தை அருளுபவருமான சங்கர பகவத் பாதரை நமஸ்கரிக்கிறேன்.

லோஹத்தை தர்மநெறிக்கு கொண்டு செல்லும் பொருட்டு அப் பரமேஸ்வரனே ஆதி சங்கரராக அவதாரம் செய்தார்!! சங்கரர் என்னும் பதத்தை சம்பு: + கரர் என்று பிரித்துச் சொல்லுவார்கள். சம்பு என்பது ஈசனைக் குறிப்பது, “சம்பு:” என்றால் மங்களம் என்றே பொருள, “கரர்” என்றால் கார்யம் செய்பவர். ஆக, சங்கரர் என்றால் மங்களத்தைச் செய்பவர். சர்வ லோகங்களுக்கும் மங்களத்தை அருளுபவன் சங்கரன். நமக்கெல்லாம் ஆசார்யராக, பரம பூஜ்யராக இருந்து வேத வேதாங்கங்களையும், பக்தியையும் புனரோத்தாரணம் செய்த பகவத் பாதருக்கு சங்கரர் என்ற பெயர் மிகச் சரிதான்.

ஏன் ஆதி சங்கரர் என்று சொல்கிறோம்?, அவர் காட்டிய வழியில் வந்து கொண்டிருக்கும் பல ஆசார்யர்களுக்கும் ‘சங்கர’ என்ற பதமே பெயரில் இருப்பதால், இந்த பரம்பரையின் முதலாவதானவர் என்று குறிக்க ஆதி சங்கரர் என்று குறிப்பிடுவதாகிறது. பகவத்பாத சங்கரரை ஈசனின் திரு அவதாரமாகவே சொல்கிறோம். அதை நமக்கு அவ்வப்போது நினைவுபடுத்தி, அதன் மூலமாக குருவும், தெய்வமும் ஒன்றே என்பதாகவும் கொள்ளலாம்.

ஆதிசங்கரரைப் பற்றிச் சொல்லுகையில், “அந்த: சாக்தோ, பஹி: சைவ:, வ்யாவஹாரே து வைஷ்ணவ:” என்பது வழக்கம். அதாவது, உள்ளுக்குள் சக்தியான அம்பிகை, வெளியுருவத்தில் சிவச் சின்னங்கள் அணிந்த சைவர், செயல்பாட்டில் மஹாவிஷ்ணு என்பது பொருள். ஈஸ்வரனுடைய க்ரியா சக்தியே அம்பிகைதான். இங்கே ஈச்வரனே அவதாரம் செய்திருக்கிறார் என்றாலும், அவதாரக் கோலமோ, சன்யாச கோலம். ஆகவே இந்த அவதாரத்தில் வெளியில் செய்யும் கார்யங்களை அம்பிகையின் புருஷ ரூபமான நாராயணனை முன்னிருத்தி நாராயணபரமாக எல்லாச் செயல்களையும் செய்திருக்கிறார். இதனால்தான் இன்றும், ஸ்ரீமடங்களின் பீடாதிபதிகள் எல்லாம் அனுக்ரஹ பாஷ்யத்தின் போது நாராயண ஸ்ம்ருதி செய்வதே வழக்கம். இவ்வாறு புறத்தே நாராயணனைச் சொல்லிய அவதாரமாக இருந்தாலும், தனது அவதாரத்தில் அவர் காட்டிய கருணை, அம்பிகையின் கருணைக்கு ஈடானது. மனதுள் அம்பிகையைக் கொண்டிருப்பதால் ஏற்பட்ட கருணை, ஆகவே தமது உள்மனத்தில் அம்பிகையைக் கொண்டிருக்கிறார் என்று சொல்லுகிறது இந்த ஸ்லோகம்.

பாரத தேசம் முழுவதும் யாத்ரை செய்து பல சாக்தக் கோவில்களிலும் உக்ரமான தெய்வங்களை சாந்த ஸ்வரூபமாக்கி, மக்களை ஆகர்ஷித்து அருளும் தெய்வங்களாகச் செய்தும், பாதாதி கேச, கேசாதி பாத ஸ்தோத்ரங்கள், விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் என இவர் ஸ்தோத்ரம் பண்ணாத தெய்வமில்லை.

எழுபத்தியிரண்டு மதங்களால், இறை நம்பிக்கையில் பல்வேறு த்வேஷங்களுடன் இந்து மதம் சிதறுண்டு இருந்த நேரத்தில், ஷண்மத ஸ்தாபனம் பண்ணி பக்தர்களையும்,
இறைவனையும் இணைத்தவர் நமது பகவத்பாதர்.

சரி, ஞான குருவான தக்ஷிணா மூர்த்தியே மனித ரூபத்தில் சங்கரராக அவதாரம் செய்துவிட்டார். சரி, மனித ரூபம் என்று எடுத்துக் கொண்ட பிறகு வாழ்ந்து காட்டுவது தானே முறை. ஆகவே நற்காரியங்களை பெரியவர்கள் செய்து காட்டினால்தானே சிறியவர்கள் செய்வார்க்ள் என்பதை புரிய வைக்க குருவின் மூலம் ஞானம் பெறுவதுதே முறை என்று தனக்காகவே நர்மதா நதி தீரத்தில் காத்திருக்கும் கோவிந்த பகவத் பாதரை அணுகுகிறார் நமது ஆதி-பரமாசார்யார். கோவிந்த பகவத் பாதர் யார் என்று பார்த்தால் அவரே பதஞ்சலி. பூர்வீகத்தில் சிதம்பரத்தில், திரைக்குப் பின்னால் வியாக்ரண பாடம் நடத்தி, அந்த நிகழ்வில் குரு வாக்யம் மீறப்பட்டதால், அங்கு பாடம் நடத்திய குருவான பதஞ்சலியே வேறு பிறவியெடுத்து சந்திர சர்மாவாக வந்தவர். பதஞ்சலி யார்?, என்றால் அவர் ஆதிசேஷனின் அவதாரம். ஆக, இந்த சனாதனத்தையும், அத்வைதத்தையும் நமது ஆசார்யாளிடம் அளிக்க பல ரூபங்களில் ஆதிசேஷனே வந்திருக்கிறான்.

கோவிந்த பகவத் பாதரும், நமது ஆசார்யாளுக்காகவே காத்திருக்கிறார். ஏனப்படிக் காத்திருக்க வேண்டும்?, வேறு சிஷ்யர்கள் யாருக்காவது உபதேசத்தைப் பண்ணியிருக்கலாமே?. பத்ரிகாச்ரமத்தில் வியாசரின் தரிசனம் கிட்டிய போது, வியாசர் கூறியபடி நமது ஆசார்யாளின் வருகைக்காகக் காத்திருக்கிறார். சரி, கோவிந்த பகவத் பாதரை சந்தித்தாயிற்று, ஆனால் கோவிந்த பகவத் பாதருக்கோ வந்திருப்பவர்தான் வியாச பகவான் கூறிய சங்கரர் தானா? என்ற கேள்வி எழுகிறது. யார் நீ? என்று தனது குகையிலிருந்து வெளியில் வராமலே கேள்வியெழுப்புகிறார். அப்போது நமது ஆசார்யாள் பத்து ஸ்லோகங்களால் தன்னை தெரிவிக்கிறார். இந்த பத்து ஸ்லோகங்களும் “தஸ ச்லோகி” என்று அழைக்கப்படுகிறது.

இறைவன் மனிதப் பிறவி என்று எடுத்தாலும் சில நேரங்களில் தனது ஸ்வய ரூபத்தை பூடகமாக வெளிக்காண்பிப்பது உண்டு. அதைப் போன்றே நமது ஆசார்ய ரூபத்தில் வந்த ஈசவரனும், “தானே சிவம் வந்திருக்கிறேன்” எனும்படியாக முடியுமாறு பத்து ஸ்லோகங்களில் சொல்கிறார். அஹம் பிரம்மாஸ்மி, சிவோஹம் என்று சொல்வது போல, இந்த பத்து ஸ்லோகங்கள் ஒவ்வொன்றின் முடிவிலும், நானே சிவம் என்று முடிக்கிறார் சங்கரர். இந்த குறிப்பை உணர்ந்த கோவிந்த பகவத்பாதர் நமது ஆசார்யாரை சிஷ்யராக ஏற்கிறார். இதே முறையில் தான் பிற்காலத்தில் நமது ஆசார்யர், ஹஸ்தாமலகரைப் பார்த்து ‘நீ யார்’ என்று கேட்ட சமயத்தில், பத்து ஸ்லோகங்களைச் சொல்லி தன்னை பிரம்ம ஞானி என்று அறிமுகம் செய்து கொள்கிறார். இந்த பத்து ஸ்லோகங்களுமே ஹஸ்தாமலகீயம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. சாதாரணமாக குருவின் படைப்புக்களுக்கு சிஷ்யர்கள் வார்த்திகம்/விளக்க நூல் எழுதுவார்கள். ஹஸ்தாமலகீயத்திற்கு ஆதிசங்கரரே வார்த்திகம் செய்ததாகச் சொல்லுகிறார்கள். அந்த பத்து ஸ்லோகங்களத்தனையும் அத்வைத தத்துவங்களால் நிரம்பப் பெற்றது என்பதால் அதற்கு விளக்கம் பரம-தயாளுவான நமது ஆசார்யாரே எழுதினார்!!!

ஆதிசங்கர பகவத் பாதாளின் ஜயந்தியையொட்டி அவரது பெருமைகளை தொடர்ந்து சிந்தப்போமாக!!!

ஹர ஹர சங்கர!!!ஜய ஜய சங்கர!!!