ஆடி செவ்வாய் விரதம் இருக்கும் முறை !

200

ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு.

குறிப்பிட்ட நாளில் இரவு சுமார் 10.30 மணிக்கு மேலே அல்லது ஆண்களும் குழந்தைகளும் உறங்கிய பின்னரோ விரதம் இருக்கும் பெண்கள் ஒன்று கூடுவர்.மூத்த சுமங்கலிகள் வழிகாட்ட, இளைய பெண்கள் விரதத்தை தொடங்குவர். பச்சரிசிமாவில் வெல்லம் சேர்த்து கொழுக்கட்டை தயாரிப்பர். அந்த கொழுக்கட்டையின் வடிவம் வித்தியாசமானதாக இருக்கும். அன்றைய நிவேதனங்கள் எதிலும் உப்பு போட மாட்டார்கள்.

அனைத்தும் தயாரானதும் ஒளவையார் அம்மனை நினைத்து விளக்கேற்றி பூஜைகள் செய்வார்கள். பிறகு ஒளவையாரம்மன் கதையினை ஒருவர் சொல்ல மற்றவர்கள் பக்தியோடும் கேட்பர். இறுதியாக விரத நிவேதனங்கள் அனைத்தையும் அந்த பெண்களே உண்பார்கள். இந்த விரதத்தில் ஆண் குழந்தைகள் உள்பட ஆண்கள் யாரும் கலந்து கொள்ளவோ பார்வையிடவோ அனுமதிப்பதில்லை. பூஜை முடிந்த உடனேயே வழிபாடு நடந்த இடத்தை தூய்மைப்படுத்தி விடுவார்கள்.

இந்த விரதம் ஒவ்வொரு செவ்வாயில் ஒவ்வொருவர் வீட்டில் நடத்துவர். இப்படி விரதம் அனுசரித்தால், குடும்ப ஒற்றுமை நிலைக்கும், திருமணம் கைக்கூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள். வசதியுள்ளவர்கள், கடைசி செவ்வாய்க்கிழமை அன்று குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து அவர்களை தெய்வமாக வழிபட்டு விருந்தளிப்பார்கள்.

ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கௌரி விரதம் கடைப்பிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும். ஆடி செவ்வாய்கிழமைகளில் அன்னதானம் செய்தால், பிற நாட்களில் செய்வதைவிட 48 மடங்கு அதிக பலன் கிடைக்கும் என்பது ஒருவித நம்பிக்கை. இந்த தானத்தில் அனைத்துவித காய்கறிகளையும் ஒன்றாக சேர்த்து சமைத்த சோறு கொடுப்பது மிக மிக நன்று.

ஆடி மாத செவ்வாய்க் கிழமைகளை திருநாளாக கொண்டாடுவது தனிச்சிறப்பு. அன்று கன்னிப் பெண்கள் கூடி ஊர்வலமாய் நதிக்கோ, வாய்க்காலுக்கோ, குளத்திற்கோ சென்று தெய்வ வழிபாடு செய்வது கண்கொள்ளாக் காட்சி! ‘கண் நிறைந்த கணவனைப் பெறுவதற்குச் செய்யப்படும் நோன்பு இது’ என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

கடைசி ஆடிச்செவ்வாய் அன்று வருடத்திற் கொருமுறை கிராமத்தில் உள்ள வசதி படைத்த வீட்டார்கள் முறைப்படி ஒவ்வொருவராக எல்லாக் குழந்தைகளையும் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர்களைத் தெய்வமாக வழிபட்டு வடை, பாயாசத்துடன் விருந்தளிப்பர். சிலர் புதிய பாவாடை, சட்டைகள் வாங்கிக் கொடுப்பதுடன் அதனுடன் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், மஞ்சள், காசு வைத்துக் கொடுப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.

காலத்தின் மாற்றங்களினால் இத்திருவிழா அநேக இடங்களில் கொண்டாடப்படாமல் நின்று விட்டது சில கிராமங்களில் மட்டும் இதை மறைய விடாமல் பெரியோர்கள் நடத்தி வருகிறார்கள்.

ஓம் சக்தி பராசக்தி !