அம்பாளுக்குரிய ஆடிப்பூரம் சிறப்புகள்!
ஆடிப்பூரம் என்னும் விஷேசம் ஆடி மாதத்திலே வரும் பூரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது. இது அம்பாளுக்குரிய திருநாளாகும். இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு ஆலயங்களில் மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடத்துவார்கள். மேலும் அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம்.
1. ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும். பூமா தேவியே ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள் என்கின்றன புராணங்கள்.
2. சித்தர்களும், முனிவர்களும் இந்த நாளில்தான் தங்களுடைய தவத்தை தொடங்குவதாகவும் புராணங்கள் எடுத்துரைக்கின்றன. எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள்.
3. மானிடத்தை இன்னல்களில் இருந்து மீட்பதற்கு உலகன்னை இவ்வுலகிலே தோன்றிய நாள் ஆடிப்பூரம் எனக் கருதுவர். இந்நாளில் தேவி உலகிற்கு விஜயம் செய்து மக்களுக்கு அருள் புரிவாள் என்று நம்பப்படுகிறது. வெள்ளிக்கிழமை அன்று வரும் ஆடிப்பூரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
4. அம்பிகையைக் கொண்டாடும் இந்த அற்புதமான ஆடி மாதத்தில், ஆடிப்பூர நன்னாளில், அம்பாளுக்கு வீட்டிலிருந்தே பல வழிபாடுகளை செய்யலாம். அம்பாள் ஆராதனையை குடும்பத்தில் உள்ள பெண்கள் எல்லோரும் சேர்ந்து செய்யலாம்.
5. வீட்டில் அம்பாள் படங்கள் இருந்தால், விக்கிரகம் இருந்தால், பூஜையறையைச் சுத்தமாக்கிவிட்டு, விக்கிரகத்துக்கு நீராலும் பாலாலும் அபிஷேகம் செய்யுங்கள். விக்கிரகம் இல்லையென்றாலும் பரவாயில்லை. அம்பாள் படம் இருந்தாலே போதும். எந்த அம்பாள் படமாக இருந்தாலும் அம்மன் படமாக இருந்தாலும் சரி… ஒரு மணைப்பலகையை நன்றாகக் கழுவி சுத்தம் செய்துவிட்டு, அதில் கோலமிடுங்கள். அதன் மீது அம்பாள் விக்கிரத்தை அல்லது படத்தை வையுங்கள். அம்பாளுக்கு சந்தனம் குங்குமமிடுங்கள்.
6. அம்பாளுக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. எனவே அரளிப்பூக்களாலும் ரோஜாப்பூக்களாலும் தாமரை மலர்களாலும் அம்பிகையை அலங்கரியுங்கள்.
அம்பாளுக்கு, ஆடிப்பூரம் நாளில், அனைத்து சிவாலயங்களிலும் வளைகாப்பு திருவிழா விமரிசையாக நடந்தேறும். எனவே அம்பாளுக்கு வளையல் சார்த்துங்கள். முடிந்தால், வளையல் மாலை கோர்த்து அணிவியுங்கள்.
7. அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்யுங்கள். அம்பாள் துதியைச் சொல்லி பாராயணம் செய்யுங்கள். சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம் என ஏதேனும் இனிப்பை நைவேத்தியமாகப் படைத்து பிரார்த்தனை செய்யுங்கள்.
பின்னர், வளையல் பிரசாதத்தை அக்கம்பக்கத்தில் உள்ள சுமங்கலிகளுக்கும் கன்யா பெண்களுக்கும் வழங்குங்கள். வளையலுடன் மஞ்சள், குங்குமம், ஜாக்கெட் பிட், வெற்றிலை பாக்கு என மங்கலப் பொருட்கள் வழங்குவது மாங்கல்ய பலத்தை வழங்கியருளுவாள் அம்பிகை. தடைப்பட்ட கன்னியருக்கு விரைவிலேயே கல்யாண வரம் தந்திடுவாள். வீட்டில் தரித்திர நிலையை மாற்றி, சுபிட்சத்தைத் தந்திடுவாள்.
8. அம்மன் நித்ய கன்னி என்பதால் அம்மனுக்கு பிள்ளைப்பேறு வளைகாப்பு கிடையாது என்பது ஐதீகம். அதற்காக ஆடிப்பூரம் அன்றைக்கு அம்மனுக்கு வளையல் அணிவித்து இன்று வளைகாப்பு தினமாக கொண்டாடப் படுகிறது.
9. கோயிலில் அம்மனுக்கு சாற்றப்பட்ட வளையல்களை வாங்கி அணியும் திரமணமாகாத பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும். அதேபோல் திருமணமாகியும் குழந்தைப் பேறு இல்லாத பெண்களுக்கு நல்ல மக்கட்பேறு கிட்டும். ஆடிப்பூரம் அன்று அருகிலுள்ள அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வாங்கி அளிப்பது மிகவும் புண்ணியம் என்றும் கூறப்படுகிறது
