அணிகலன்களின் தத்துவங்கள் பகுதி 4!

36

அணிகலன்களின் தத்துவங்கள் பகுதி 4!

திருநீறு:

சரீரத்தின் பதினான்கு இடங்களில் திருநீறு அணிந்து கொள்ள வேண்டும், திருநீற்றை ஒருவருக்கு தரும்போதும், நாம் அணியும் போதும் சிவபொருமானுடைய ஐந்தெழுத்தை “நமசிவாய” என்னும் மந்திரத்தை ஓதுதல் வேண்டும். அதனால் திருநீற்றுக்கு பஞ்சாட்சரம் என்ற பெயரும் அமைந்தது.

சிவனின் உருவமான ஜோதியின் மறு உருவமே திருநீறு, திருநீற்றை நெற்றியில் இட்டால் விஞ்ஞான, அஞ்ஞான மருத்துவ ரீதியாகவும் பற்பல பலன்கள் கூறப்படுகின்றன. ” மனிதா உன் சரீரம் வாக்கு மனம் இம்மூன்றும் நிர்மலமாக , வெண்மையாக தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக திருநீறு அணிந்து கொள் என்கிறது திருநீற்றுத் தத்துவம்…

சந்தனம்:

சந்தனம் இயற்கையான தாவரத்திலிருந்து கிடைப்பது. அதன் நறுமனம் மிக ரம்மியமானது. சந்தனம் போல் நறுமணம் போன்று நற்குணங்களைக் கொண்டவனாக இரு என்பதை விளக்கிறது சந்தனத்தத்துவம்…

தோடு:

மாதர்கள் அணியும் ஆபரங்களுள் முக்கியமானது தோடு. ” தோடுடைய செவியன்” என்று 1ஆம் திருமுறையில் திரு ஞானசம்பந்தர் தோடு அணியும் சக்தியையும், சக்தியை இடப்பாகமாக கொண்ட சிவனையும் சேர்த்துப் பாடியுள்ளது தோடு மாந்தர்களின் கூற்றுக்கு உதாரணமாக தத்துவத்தை காட்டுகிறது.
” தேவா ரென்பர்தம் பாவையர்க் கன்று
காதோலைப் பாவித்த தயவாளர்” –

மதுரை கலம்பகம் 29ம் பாடல் சிவபொருமான் விஷத்தை உண்டு தேவமகளிரின் மாங்கல்யத்தை போன்ற காதோலையை காப்பாற்றிய தயாபரன் ஆனான் என்று குமரகுருபரர் கூறினார், பதிவிரதைகள் ஒருபோதும் தோடின்றி இருக்கக் கூடாது என்கிறது அருணா மோதினீ.எல்லா செல்வங்களைவிட சிறந்த செல்வம்செவிச் செல்வம் என்கிறார் வள்ளுவர், அந்த செவிச் செல்வத்தை உணரும் உறுப்பணியும் அணிகலமே தோடு என்பதாகும், குருநாதனின் ஞான மொழிகளுடன் ஸ்ரீ பகவானின் திரு நாமங்களும் ஒன்றிணைந்து நம் செவியில் என்றென்றும் ஒலிக்க வேண்டும் , அப்போது சாதாரண செவி திருமகள் வீற்றிருக்கும் செல்வச் செவி ஆகும்…

மூக்குத்தி:

மூக்குத்தியதிலும் கல்வாழை விசிறி போன்ற மூக்குத்தி விசேஷச் சக்தி வாய்ந்தது. காஞ்சி காமாட்சி காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி, திருச்சானூர் அலமேலு, கன்னியகுமரி வாலையம்மன் இவ்வாறு எந்தத் தேவியரைத் தரிசனம் செய்தாலும் மூக்குத்தி இல்லாத அன்னையாக பார்க்கவே முடியாது. காரணம் தெய்வீக சுமங்கல ஆபரணங்களில் மூக்குத்தியும் மங்கல பொருள்களில் ஒன்று.

சுவாசத்துடன் கலப்பது போல எல்லா நறுமணத்தையும் சுவாசம் செய்யும் போது ஸ்ரீபகவானுக்கு அர்ப்பணம் செய்வது போல நினைத்து விடு. இரு விழிப்பார்வைகளை நாசியில் செலுத்தி விடு. மனம் வாக்கு காயம் இம்மூன்றும் ஒருநிலைப்படுத்தி யோகம் செய் என்று மூக்குத்தி தத்துவம் கூறுகிறது. இக் கருத்தையே உட்கருத்துடன் கொண்டு செளந்தர்யலஹரி 61ஆம சுலோகத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் கூறியுள்ளார்.