Sunday, October 15, 2023
HomeArthamulla Aanmeegamஆதிரை பதிகம்

ஆதிரை பதிகம்

திருப்புகலூரில் திருஞானசம்பந்தரை முருக நாயனார் மண்டபத்தில் அப்பர் பெருமான் சந்தித்தார். அப்போது திருவாரூரிலிருந்து வந்த அப்பரை நோக்கி “ஆருத்ரா தரிசனம் ஆயிற்றோ!” என ஞானசம்பந்தர் வினவினார். உடனே தான் கண்ட ஆருத்ரா விழாப் பெருமையை ஒரு பதிகம் பாடி அப்பர் விவரித்து அருளினார். அந்தப் பதிகம் திருவாதிரைப் பதிகம் என்ற சிறப்புப் பெயரால் புகழ் பெற்று இன்று வரை அனைவராலும் ஓதப்பட்டு வருகிறது.
மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று தான் சிவபிரான் பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதருக்கும் தன் திரு நடனத்தை ஆடிக் காண்பித்தார். எல்லையற்ற விண்வெளியைக் குறிக்கும் சிதம்பரத்தில் இந்நாள் பெரும் விழாவாக இன்றும் கொண்டாடப்படுகிறது.
இந்தத் திருநடனம் உலகின் இயக்கத்தைச் சுட்டிக் காட்டும் அற்புத நடனம். சிவபிரானுக்கே ஆதிரையன் என்ற பெயர் உண்டு.
“ஆதியன் ஆதிரையன் அனலாடிய ஆரழகன்
பாதியொர் மாதினொடும் பயிலும் பரமா பரமன்
போது இயலும் முடிமேல் புனலோடு அரவும் புனைந்த
வேதியன் மாதிமையால் விரும்பும் இடம் வெண்டுறையே”
என இப்படி திருஞானசம்பந்தர் ஆதிரையன் புகழ் பாடிப் பரவுகிறார்.
தேவாரத்தில் அப்பர் அருளிய முக்கியமான பத்துப் பாடல்களைக் கொண்ட திருவாதிரைப் பதிகம் ஆருத்ரா தரிசன ஆனந்தத்தால் விளைந்த ஒன்று. இந்தப் பதிகம் எழக் காரணமாக அமைந்ததோ இரு பெரும் மகான்களின் சந்திப்பு!
இதைப் பாடினால் பெண்கள் சுமங்கலிகளாய் தங்கள் கணவனுடன் ஒற்றுமையாய் நோய் நொடியின்றி புத்திர பாக்கியத்துடன் நெடிது சௌபாக்கியத்துடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
பாடல் எண் : 01
முத்து விதானம் மணிப் பொன் கவரி முறையாலே
பத்தர்களோடு பாவையர் சூழப் பலிப் பின்னே
வித்தகக் கோல வெண்தலை மாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.
பாடல் விளக்கம்:
மேற்புறத்தில் முத்துக்கள் மற்றும் மணிகள் பதிக்கப்பட்ட பந்தலின் கீழே மிகுந்த பொலிவுடன் அமர்ந்து இருக்கும் பெருமானுக்கு பொன்னால் செய்யப்பட்ட பிடியினை உடைய கவரி வீசப்படுகின்றது. திருவீதி உலா வரும் சிவபெருமானை, சிறப்பான பத்து குணங்களை உடைய அடியார்களும், பாவையர்களும் சூழ்ந்து கொண்டு சிவபெருமானுடன் திருவீதிவலம் வந்தனர். மேலும் இறைவனுக்கு நிவேதனமாக அளிக்கப்பட்ட பொருட்கள் எடுத்துவரப் பட்ட ஊர்வலத்தில், எலும்பு மாலைகள் மற்றும் தலை மாலைகள் அணிந்து வித்தியாசமான கோலத்துடன் உலவும் மாவிரதிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு சிவபிரான், திருவாரூர் நகரத்தில் மார்கழி ஆதிரைத் திருநாளில் சிறந்த பொலிவுடன் உலா வந்த கோலம், அமைந்தது: அதனைக் கண்ட அடியார்களின் மனதினில் நிலைத்து நின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six − three =

Most Popular