பெண் வடிவில் தட்சிணாமூர்த்தியா?
சிவபெருமானுடன் நடன போட்டியில் ஈடுபட்ட பார்வதி தேவி கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை காளி கோயிலில் அருள் பாலிக்கிறாள். இந்தக் கோயிலில் தான் பெண் வடிவில் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். பொதுவாக எல்லா சிவன் கோயிலிலும் ஆண் வடிவ தட்சிணாமூர்த்தி தான் கோயில் பிரகாரத்தில் காட்சி தருவார். ஆனால், இங்கு சற்று வித்தியாசமாக பெண் வடிவ தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார்.
சிவன் மற்றும் சக்தி இடையில் யார் அதிக சக்தி கொண்டவர் என்ற வாதம் நடந்தது. இதில், பார்வதி தேவியோ நானே உயர்ந்தவள் என்று வாதிட சரி நீயே உயர்ந்தவளாக இரு என்று சிவன் பார்வதி தேவியை உக்கிர காளியாக மாற்றிவிட்டார். தாயுள்ளம் கொண்ட தனக்கு கோபம் வரும்படி ஆகிவிட்டதே என்று வருந்திய பார்வதி தேவி, சிவனிடம் விமோட்சனம் கேட்டாள்.
அதற்கு சிவன், பார்வதி தேவியே! நீ வருந்த வேண்டாம். உலக நன்மை கருதி நான் செய்த திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று. அரக்கர்களால் தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் துன்பம் ஏற்பட இருக்கிறது. நீ அவர்களை அழிக்க வேண்டும். அதன் பின் தில்லை (சிதம்பரம்) வந்து என்னை நோக்கி கடும் தவம் இரு. நான் அங்கு ஆனந்த நடனமாட, நடராஜர் என்ற பெயர் தாங்கி வருவேன்.
அப்போது சிவகாமி என்ற பெயருடன் என்னை வந்தடைவாய்,” என்றார். அவள் ‘தில்லை காளி’ என்ற பெயரில் சிதம்பரத்தில் அமர்ந்தாள். அவளை ‘எல்லைக்காளி’ என்றும் சொல்வர். சிவனுக்கும், அம்பாளுக்கும் நடந்த நடனப் போட்டியில், சிவன் ஊர்த்துவ தாண்டவர் என்ற பெயரில், உக்ர தாண்டவம் ஆடினார்.
ஒரு கட்டத்தில் தன் காலைத் தலையில் தூக்கி வைத்து ஆடிய சிவன், இவ்வாறே காளியால் செய்ய முடியுமா என கேட்டார். ஆனால், பெண்மைக்குரிய தன்மையால் அவளால் இயலவில்லை. இதனால் அவள் தோற்றாள்.
இதையடுத்து காளியின் கோபம் அதிகரித்தது. அவளை அமைதிப்படுத்த விரும்பிய பிரம்மா, ‘வேதநாயகி’ எனப் புகழ்ந்து பாடி, நான்கு வேதங்களைக் குறிக்கும் வகையில் உருவத்தை மாற்றும்படி வேண்டினார். அவளும் ‘பிரம்ம சாமுண்டீஸ்வரி’ என்ற பெயரில் நான்கு முகத்துடன் காட்சி தந்தாள். இவள் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி சாந்தசொரூபிணியாக அருள்கிறாள்.
தட்சிணாமூர்த்தி பெண் உருவத்தில் ‘கடம்பவன தக்ஷணரூபிணி’ என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். விரிந்த கூந்தலுடன் கல்லால மரத்தடியில் காட்சி தருகிறார். அருகில் சனகர், சனந்தனர், சனவாதனர், சனத்குமாரர் என்ற முனிவர்கள் வீற்றிருக்கின்றனர்.
கல்வியில் சிறப்பு பெற மாணவர்கள் வியாழனன்று நெய் தீபமேற்றி வழிபடுகின்றனர். பிரகாரத்தில், நின்ற கோலத்தில் உள்ள சரஸ்வதிக்கு ‘வீணை வித்யாம்பிகை’ என்று பெயர். கல்வி அபிவிருத்திக்காக இவளை வணங்கி வழிபாடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.