டார்வின் தத்துவத்தை முன்னமே உரைத்த மாணிக்கவாசகர்

314

எப்படிப்பட்ட விஞ்ஞான அறிவையும், கண்டுபிடிப்பையும் மேலைநாட்டாருக்கே தத்தம்செய்வதுதான் நம்முடைய தியாக உணர்வுக்குச் சான்றாக இருந்துவருகிறது. சில நூற்றாண்டுகள் ஆங்கிலேயரின் ஆட்சிக்குப் பின்னர் அவர்கள் சொல்லும் எதையும் நாம் வேதவாக்காக அல்ல, அதற்கும் மேலாகவே எடுத்துக்கொள்கிறோம். ஆராய்ந்து நோக்கினால் உண்மை அதுவல்ல என்று உணரலாம். பள்ளிகளில் கற்பிக்கப்படும் ‘பரிணாம வளர்ச்சிக் கொள்கை [The theory of evolution]’ சார்லஸ் டார்வினால் உருவாக்கப்பட்டது என்றே மாணவருக்குச் சொல்லித்தரப்படுகிறது. இக்கொள்கை டார்வினுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகரால் சிவபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தால் நமக்கு வியப்பாகத்தான் இருக்கும்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகி

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்தி ளைத்தேன் எம்பெருமான்[6] – சிவபுராணம்– 26-31

Image result for டார்வின்

உயிரினங்கள் மனிதராவதுவரைக்கும்தான் தனது பரிணாம வளர்ச்சிக் கொள்கையை டார்வின் எடுத்துரைக்கிறார். ஆயினும், மாணிக்கவாசகரோ, மனித வளர்ச்சியையும் தாண்டி, ஆவியுலகத்து உயிர்களையும், விண்ணுலக, பாதாள உலக — மண், விண் இரண்டிலும் வசிக்கக்கூடிய, கண்ணுக்குப் புலப்படாத தேவர்களையும் பரிணாம வளர்ச்சியில் சேர்த்துவிடுகிறார். அவர் வரிசைப்படுத்தியிருப்பதும் மனித இனம்வரை டார்வினை ஒத்ததாகவே அமைந்துள்ளது. இந்த அறிவு அவருக்கு இல்லாதிருந்தால் எப்படிக் கோர்வையாக எடுத்தெழுதியிருக்க இயலும்?

மேலும், உலகம் உருண்டை என்பதைக் கலீலியோ கலிலி [Galileo Galilei] என்ற இத்தாலிய விஞ்ஞானிதான் கண்டுபிடித்தார் என்றும், அதுவரை உலகமக்கள் உலகம் தட்டையாக இருந்தது என்றும் நினைத்தனர் என்றும் நமக்குச் சொல்லித்தரப்படுகிறது. இது உண்மையல்ல, சைவத் தமிழ் குரவரான மாணிக்கவாசகர் அதை எழுதிவைத்துவிட்டார் என்றும் திருவாசகத்திலுள்ள திருவண்டப்பகுதியில் காணலாம்:

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்ப ரும்தன்மை வளப்பெரும் காட்சி

ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்

நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன

இல்நுழை கதிரின் துன்அணுப் புரையச்

சிறியவாகப் பெரியோன்; — 1-6

இந்த அண்டமானது உருண்டைகளான உலகங்களால் ஆனது, அவை அளவிடமுடியாதவை, மிகவும் அழகாகத் தோன்றுபவை, அவற்றின் அழகினை ஒவ்வொன்றாக ஒப்பிட்டு விவரித்தால், அவை நூறுகோடிக்கும் மேலாக [எண்ணவியலாத அளவுக்கு அதிகமானவை] விரிந்து பரந்திருக்கின்றன, கூரையிலுள்ள சிறு ஓட்டை மூலம் வீட்டுக்குள்ளே நுழையும் சூரிய ஒளிக்கற்றையில் தெரியும் துகள்களுடன் அவற்றை ஒப்பிடலாம். பரம்பொருளான சிவனோ இவை அனைத்தையும்விடப் பெரியவன் என்று சிவபெருமானின் பெருமையை நமக்கு எடுத்து இயம்பும்போது தனது வானவியல் அறிவையும் அழகாக எடுத்துணர்த்துகிறார்.