எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை ஓர் உருவில் அடக்காமல், ஒளி வடிவில் வழிபட்டுப் பலன் பெற தீபங்கள் உதவும். பரஞ்ஜோதியாய் திகழும் பரம்பொருளுடன் ஜீவ ஜோதியாகிய ஆன்மாக்கள் இரண்டறக் கலக்க வேண்டும். இதுவே, தீபங்கள் உணர்த்தும் வழிபாட்டுத் தத்துவம்.
தீபத்தைப் பெருமைப்படுத்தும் விதத்தில் முருகப்பெருமானை, அருணகிரிநாதர்””தீபமங்கள ஜோதீ நமோ நம” என்று திருப்புகழில் பாடுகிறார்.
மேலும் இறையருள் கைகூட தண்ணீரால் விளக்கெரித்த நமிநந்தியடிகள்,தன் உதிரத்தையே எண்ணெயாய் ஊற்றி தீபமேற்ற முயன்ற கலியநாயனார், தலைமுடியை விளக்குத் திரியாக்கிய கணம்புல்லர், அறியாமல் தீபத்தைத் தூண்டிவிட்ட காரணத்துக்காகவே மறு பிறவியில் சக்ரவர்த்தியாய் பிறந்த மகாபலி ஆகியோரின் புண்ணிய கதைகள் தீப வழிபாட்டின் மகத்துவத்தை உணர்த்துவதை நாம் பார்க்க முடியும் …
தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம்.
எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம்.
திருக்கார்த்திகை தினத்தன்று, கிளியஞ்சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள்.
அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகி நமக்கு மகிழ்வை தருகிறது .மேலும் நம் குல தேவிகள் நாம் வீட்டில் ஏற்றும் விளக்கில் வாசம் செய்து குலத்தை காப்பதாக நூல்கள் சொல்கிறது .
ஆலயங்களில் பூசகர் தீபாரதனையின்போது பலவிதங்களில் தீப ஒளியைஇறைவனின் திருவுருவத்துக்கு முன்னர் காட்டுவார்.
தீபாராதனைக்கு உரிய தீபங்கள் பெரும்பாலும்
பித்தளை போன்ற உலோகங்களினால் செய்யப்படுகின்றன.
பூசையின்போது பெரிதும் பயன்படும் தீபங்களுள் பின்வருவன அடங்கும்:
ஒரு முக தீபம் அல்லது ஒற்றைத் தீபம்
அடுக்குத் தீபம்
பஞ்சமுக தீபம்
வில்வ தீபம்
இடப தீபம்
கும்ப தீபம்
ஈசனாதி தீபங்கள்
கற்பூர தீபம்
பஞ்சராத்திரிகைத் தீபம்
இவையன்றி பதினாறு வகைத் தீபங்களும் பூஜைக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
1)தூபம்
2)மஹாதீபம் –
3)அலங்கார தீபம்
4)நாக தீபம்
5)விருட்சப தீபம் – விருஷ தீபம்
6)புருஷா மிருக தீபம்
7)ஓல தீபம்
8)கமடதி தீபம் – கமபதி தீபம்
9)கனு தீபம் – கஜ தீபம்
10)வியாண்யர தீபம் – வியாக்ர தீபம்
11)இம்ம தீபம் – சிம்ஹ தீபம்
12)துவஜ தீபம்
13)மயூர தீபம்
14)ஐந்தட்டு தீபம் – பூரண தீபம்
15)நட்சத்திர தீபம்
16)மேரு தீபம்.
பூஜையின்போது காட்டப்படும் இந்த தீபாராதனை ஆனது …
மனதிற்கு நிம்மதியும் இறைவனின் பேரருளையும் வழங்கக் கூடியதாகும்.
எனவே திருக்கோவிலில் தீபாராதனை முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
திருக்கோயில்களில் நடைபெறும் இந்த தீப உபசாரத்தைத் தரிசிக்க, 16 பேறுகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
