Monday, October 16, 2023
HomeArthamulla Aanmeegamசிவலிங்கத்திற்கு விளக்கம் தெரியுமா?

சிவலிங்கத்திற்கு விளக்கம் தெரியுமா?

சிவலிங்கத்திற்கு விளக்கம் தெரியுமா?

லிங்கம் என்றால் ‘குறியீடு’ (SYMBOL), சிவலிங்கம் என்பது இறைவனின் குறியீடு!

இறைவனை பரப்பிரம்மம் என்று சொல்வதுண்டு…
எதையும் கடந்து நிற்பவன் பரம் (கடவுள்)!

உருவம், குணம் இவை அனைத்தையும் கடந்து நிற்கும் பொழுது இறைவன் நிர்க்-குணப்பிரம்மம்…

உருவமாய் கண்களுக்கு காட்சி தரும்பொழுது இறைவன் ச-குணப்பிரம்மம்!

இறைவன் கண்களுக்கு காட்சி தரும்பொழுது உருவம்…

உருவமே இல்லாத, குறியீடே இல்லாத ஒரு சக்தி நிலை என்பது அருவம்!

உருவமும் அல்லாது, அருவமும் அல்லாது, இருக்கும் பொழுது அருவுருவம்…

சிவலிங்கம் என்பது அருவுருவம்!!!

உருவமாக பார்த்தால் இறைவனும் மனிதர்களை போலவே அனைத்து உடலுறுப்புகளுடனும் கானப்படுவார்…

உருவம் என்பது வெறும் மனித உருவம் மட்டுமே அல்ல!
மரம், செடி, விலங்குகள், பறவை என அனைத்து உருவங்களிலும் இறைவனை காணலாம்…

குறிப்பு:- தண்டகாரண்யத்து மரமாய், மீனமாய், ஆமையாய், வராகமாய், நரசிம்மமாய், வாமன-ராம-கண்ணன்னு மனிதர்களாய் பல உருவத்தில் இறைவனை பார்த்துள்ளோம்!

இறைவன் உருவமுமாய், அருவமுமாய் இருக்கின்றார்…
இதில் உருவமே இல்லை என்பதை நம்புவதா? அருவம் என்பதை நம்புவதா? என்ற கேள்வி உங்களுக்கு எழுமேயானால் அதற்கான பதிலும் ஒரு கேள்விதான்.!

தண்ணீர் உருவமா? இல்லை அருவமா?

நீராவியாக இருக்கும் பொழுது தண்ணீர் அருவம் அது நம் கண்களுக்கு தெரியாது…
ஆனால், அதே தண்ணீரை ஒரு பாத்திரத்தில் நிரப்பி வைக்கும் பொழுது அதன் உருவம் நம் கண்களுக்கு தெரியும்!

தண்ணீர் எவ்வாறு நாம் பிடித்துவைக்கும் பாத்திரத்தின் உருவத்தை எடுத்துக்கொள்கின்றதோ…

அதே போல்தான் இறைவனும்!

இறைவன் நீராவியை போல அருவமாகவும் இருக்கின்றான்!
பிடித்து வைத்த பாத்திரத்தில் உருவமாகவும் இருக்கின்றான்!

இறைவன் உருவமாய் இருக்கலாம்… ஆனால் உருவம் மட்டுமே இறைவன் அல்ல!

இறைவன் அருவமாய் இருக்கலாம்… ஆனால் அருவம் மட்டுமே இறைவன் அல்ல!

இதனை நாம் உணர்ந்துகொள்ளவே உருவமும் இல்லாத, அருவமும் இல்லாத அருவுருவம் என்னும் ஒரு குறியீடு…

வைணவ ஆலயங்களில் தீர்த்தம் என்பது ஒரு அருவுருவம்!
அதே போல் சைவ ஆலயங்களில் லிங்கம் என்பது அருவுருவம்!

லிங்க உருவத்தைச் சற்று நேரம் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருங்கள்… மனம் குவியும். அதன் Geometry அப்படி! எவ்வாறு மேலைநாடுகளில் Crystal Gazing-இல் மனத்தை ஒருமைப்படுத்துகிறார்களோ, அதே போல் வழிபாடு/தியான முறைகளுக்குப் பயன்படுத்துவதற்கு என்றே சிவலிங்க உருவம் நம் பண்பாட்டில் அமையப்பெற்றது!

சிவபெருமான், யோகி மற்றும் குரு வடிவானவர்! எனவே, அவரைக் குறிக்கும் லிங்கமும் யோகம் மற்றும் தியான வடிவமாக உள்ளது!

லிங்கம்=லிங்+கம்

லிங்=லியதே=எல்லாப் பொருளும் அங்கு லயிப்பது, ஒன்றுபடுவது! (Merge)

கம்=கமயதே=எல்லாப் பொருளும் அங்கிருந்தே எழுவது! (Emerge)

இப்படி merge-emerge, ஒடுங்கி-எழுவது தான் சிவலிங்க சொரூபம்!

சிவலிங்கம் பற்றிய பல குறிப்புகள் லிங்க புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது…
சிவ புராணம், ஸ்கந்த புராணம் என எல்லாவற்றிலும் லிங்கத்தை பற்றிய வரலாறு உள்ளது!

பிருகு முனிவரின் சாபத்தினால் ஈசனுக்கு உருவம் இல்லாத லிங்க வழிபாடு, பிரம்மனும் விஷ்ணுவும் அடி முடி காணாத அளவுக்கு ஓங்கிய தீப்பிழம்பு தான் லிங்க உருவம் ஆனது என்று பல கதைகள் வழங்கினாலும், அனைத்திலுமே லிங்கம் என்பது மிக உயர்ந்த அருவுருவக் குறியீடு என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை…

பிரதானம் பிரகருதிர் யதாஹுர் லிங்கம் உத்தமம் கந்த, வர்ண, ரசாஹிர், சப்த, ஸ்பரிசதி வர்ஜிதம் வாசனை, நிறம், சுவை, ஓசை, தீண்டல் என்று எல்லாம் கடந்த குறியீடாகச் சிவலிங்கத்தைச் சொல்கிறது!

“திருமூலர்” லிங்க வடிவம் ஏன் என்பதைப் பல அழகிய தமிழ்ப் பாடல்களில் விளக்குகிறார்!

“இலிங்கம தாவது யாரும் அறியார்
இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்
இலிங்கம தாவது எண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்தது உலகே”

குறிப்பு:- தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம், கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே என்பது புகழ் பெற்ற திருமந்திரம்!

சிவலிங்கத்தில் சிவபெருமான் மட்டுமில்லை! மும்மூர்த்திகளும் இருக்கின்றனர்!

லிங்கத்தின் அடிப்பாகம் பிரம்ம பீடம் = வட்ட வடிவம்!
அதன் மத்திய பாகம் விஷ்ணு பீடம் = கூம்பு (cone) வடிவம்!

அலங்காரம் செய்யப்பட்டிருந்தால், சிவாலயங்களில் இவை இரண்டும் சட்டென்று நம் கண்ணுக்குத் தெரியாது. அதற்கு மேல் எல்லாரும் காண்பது தான் சிவ-சக்தி பீடம்! அது இரண்டு பாகமாக இருக்கிறது. மேலே உருளையான (cylinder) பாகமாக இருப்பது லிங்கம்! அது சிவ சொரூபம். அதன் கீழ் பரந்த வட்ட வடிவமான (round) பாகமாக இருப்பது ஆவுடையார்! அது சக்தி சொரூபம்…

பீடம் அம்பாயாம், சர்வம் சிவலிங்கஸ்ச சின்மயம் என்பது இதை விளக்கும் சிவ புராண மந்திரம்! திருமுழுக்கு (அபிஷேகம்) செய்யும் போது, வழிந்தோடும் நீர் ஆவுடையார் வழியாகவே கொள்ளப்படும்! ஆவுடையாருக்கு யோனி என்ற பெயரும் உண்டு. இந்தப் பெயரே, இன்று பல விபரீத பொருட்களைச் சிவலிங்க தத்துவத்துக்குக் கற்பிக்கவும், காரணமாகவும் அமைந்து விட்டது! யோனி என்பதற்கு வழி, இடம் என்பது பொருள்!

“ஆத்ம யோனி ஸ்வயம் ஜாதோ, வைகான சம காயனக தேவகீ நந்தன ஸ்ரஷ்டா”
என விஷ்ணு சகஸ்ரநாமத்தில் கூட “ஆத்ம யோனி” என்று வரும்! ஆத்ம யோனி” என்பது ஆத்மா செல்லும் பாதை. ஆக்கல்-அளித்தல்-அழித்தல்” என்னும் முத்தொழிலில், எல்லா உயிர்களும் ஆவுடையாரில்-சக்தியில் ஒடுங்கி (merge), லிங்கத்தில்-சிவத்தில் விரியும் (emerge)! இதுவே எளிமையான சொற்களில் சிவலிங்க தத்துவம்!

எல்லாச் சிவலிங்கத்திலும் ஆவுடையார் (யோனி) இருக்காது! மேல் பாகமான வெறும் லிங்கம் மட்டுமே கூட உண்டு. நர்மதை நதியில் இயற்கையாகக் கிடைக்கும் பாணலிங்க கற்கள் இந்த வகையைச் சேர்ந்தது தான்! அந்தக் கற்களுக்கு மேல் பாகம் மட்டும் தான் இருக்கும். பகுத்தறிவுப் பாணியில் சொல்ல வேண்டுமென்றால்,
இராவணன் வழிபட்ட ஆத்ம லிங்கம் கூட இந்த வகை தான்!

திருப்பெருந்துறையில் மணிவாசகர் ஆலயத்தில் வெறும் ஆவுடையார் மட்டும் தான். மேலே லிங்கமே இருக்காது. வைத்தியநாதத்தில் லிங்கம் மட்டும் தான். கீழே ஆவுடையாரே இருக்காது. “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கினால் அவன் அருளைப் பெறலாம். “சிவலிங்கம்” என்பது வெறும் காமம் அல்ல அருட்பெருஞ்ஜோதியாகும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 2 =

Most Popular