அனுமன் மகிமை

410

உலக உயிரினங்களில் மேலான சக்தி படைத்த ஒரே உயிரினம் மனித இனம் மட்டுமே! அதனால்தான் அளவில் பெரிய யானையைக்கூட மனிதனால் ஆட்டிவைக்க முடிகிறது. சீறிப் பாய்ந்துவரும் ஆற்றின் குறுக்கே அணை கட்டி, பஞ்சபூதங்களில் ஒரு பூதமான நீரையே அடக்கி ஆளவும் முடிகிறது.

பட்டியல் போடத் தொடங்கினால் அது நீண்டபடியே இருக்கும். என்னதான் மனிதன் பெரும் வல்லாளனாக இந்தப் பூவுலகில் திகழ்ந்தபோதிலும் அவனால் மரணத்தை வெல்லமுடியவில்லை. அதேபோல் நரை, திரை, மூப்பிடமும் அவனால் எதுவும் செய்ய முடிவதில்லை.

அதுமட்டுமா?

அவனால் பல விருப்பங்களைத் தெரிவிக்க முடிகிறது- ஆனால் அனைத்தையும் ஈடேற்றிக்கொள்ள முடிவதில்லை. ஒன்று கிடைத்தால் ஒன்று இல்லை என்றாகிறது. கூர்ந்து கவனித்தால் அவன் வாழ்வு முழுக்க இன்பம் மட்டுமே வாழ்வாக இருந்ததில்லை. துன்பமும் கூடவே வந்து, “இரண்டும் கலந்ததே வாழ்க்கை’ என்கிறது.

மொத்தத்தில் கூட்டிக்கழித்து வகுத்துப் பெருக்கினால், எதுவும் நிலையில்லை என்பது முதல் எதையும் எவரும் எடுத்துச்செல்ல முடியாது என்பது வரைதான், மேலான ஒப்பற்ற உயிரினத்தின் வாழ்க்கைப்பாடு அமைந்துள்ளது.

இதனால் ஏன் இப்படி? எதனால் இப்படி என்கிற கேள்விகள் முளைவிட, அவனும் தன் ஆறாவது அறிவாலே, தான் வாழ்வதற்காக வழிவகை செய்துகொள்வதற்கு நடுவில் ஒரு ஞானவேள்வியும் செய்ததில் பல சத்தியங்கள் புலனாகின்றன. அந்த சத்தியங்களின் ஒட்டுமொத்தமாக- தன்னைப் படைத்தது முதல் உலகைப் படைத்து அதில் பல்லாயிரம் உயிரினங்களை- தாவரங்களைப் படைத்து, பஞ்ச பூதங்களைப் படைத்தது வரை மேலான ஒரு சக்தி இருந்தாக வேண்டும் என்கிற பேருண்மையை நெருங்குகிறான்.

அந்த சக்திக்கு அவன் சூட்டிய பெயர்தான் கடவுள்! இந்தக் கடவுளை அவன் தன் புலனடக்கத்தால் தரிசனம் செய்து, புவனம் கடந்த பல பேருண்மைகளையும் அறிந்து, அதை அவன் உலகிற்குச் சொல்லும்போது அது ஆன்மிகப் பாடமாக, வேதங்களாக விளங்குகிறது.

இந்த ஆன்மிகமும் வேதமும் மானிடனை மகத்தானவனாக்கி- பிறப்பற்றவனாக்கி நித்திய இன்பத்தில் நிலைக்க வைக்கிறது. ஆனாலும் இந்த மகத்தான நிலையைஅடைவது எளிதல்ல!

கோடியில் ஒருவருக்கே அது வாய்க்கிறது.

அப்படி வாய்க்கப்பெற்ற ஒரு அற்புதமே அனுமன்! இத்தனைக்கும் அனுமன் மனிதாம்சத்தோடு விலங்கின் தன்மையும் கொண்ட ஒரு விசித்திரன்!

இந்த விசித்திரன் மானுட பக்திக்கு எளிதாக அகப்படும் ஒரு ஆச்சரியனும் கூட! இவனுடைய வரலாற்றை இதுகாறும் வாசித்ததில் இந்தப் பேருண்மையை நாம் உணர்ந்திருப்போம்.

வானர இனத்தில் பிறந்து, மானுட குணத்தில் வளர்ந்து, தேவதன்மையை அடைந்து, மனித இனத்துக்கு பெரும் உதாரணபுருஷனாக விளங்குகின்றவன் மாருதி என்கிற இந்தஅனுமன்!

எது சக்தி என்பதற்கு உதாரணம் இவன்.

எது பக்தி என்பதற்கும் உதாரணம் இவனே!

பெரும் சகாயன், இணையில்லாத நண்பன், உத்தமகுரு என்று எல்லா நிலைப்பாடும் இவனுக்குப் பொருந்தும்.

நால்வகை யுகங்களில் ஒவ்வொரு யுகத்துக்கும் ஒரு தன்மை உண்டு. இப்போது நடக்கும் கலியுகத்துக்கு வினோதமான பல தன்மைகள் உண்டு. அதில் ஒன்று தர்மம் நசிவதும் அதர்மம் வளர்வதுமாகும். அதுமட்டுமல்ல; கலியுகத்தில் எதுவானாலும் கண்ணுக்கு முன்னே! விதைப்பது எதுவோ அதையே அறுப்பவராகவும் இருப்போம்.

இந்த யுகத்தில் மானிடப் பிறப்பெடுத்து, பிறப்பை அழகாக முடித்துக் கொள்வதுஅவ்வளவு சுலபமான விஷயமல்ல. இந்த உலகை தற்போது பெரும் மாயை சூழ்ந்துள்ளது. அது நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் காட்டவல்லது. தர்மத்துக்கு பெரும் சோதனைகள் சர்வசாதாரணமாக ஏற்படும். இறுதியில் தர்மமே வெல்லும். ஆனபோதிலும் இறுதிவரை பொறுமையாக இருக்கமுடியாதபடி வினைகள் ஆட்டிவைக்கப் பார்க்கும். பெரும் மனோதிடம் இருந்தாலன்றி மானிடப் பிறப்பை நல்லவிதமாக ஆக்க இயலாது.

இப்படி ஒரு காலகட்டம் வரும்; அப்போது மனித இனம் அல்லல்படும்போது அதை மீட்டெடுக்க நாம் ஏதாவது செய்தாகவேண்டும் என்று, வானரப் பிறப்பெடுத்து ராமபக்தனாகத் திகழ்ந்த அந்த நாளிலேயே அனுமன் முடிவு செய்துவிட்டான். அதனாலேயே “உனக்கு என்ன வேண்டும்?’ என்று ராமன் கேட்டபோது இறவா வரத்தையோ- இல்லை பிறவா வரத்தையோ- அதுவுமில்லை மோட்ச கதியையோ அனுமன் கேட்கவில்லை.

“ப்ரபோ! உன் பக்தனாக உன் நாமத்தைச் சொல்லிக்கொண்டு யுகம் கடந்தும் நான் சஞ்சரிக்கும் வல்லமை ஒன்றே போதும்’ என்று கேட்டான்.

அதாவது “ராமராம’ என்று நாமம் சொல்லிக்கொண்டு பெரும் பக்தனாக எந்த நாளும் திகழும் ஒரு வரத்தைக் கேட்டவன் அனுமன்.

நாம் நம்முன் கடவுள் தோன்றினால் இப்படியா கேட்போம். எவ்வளவோ பேர்முன் கடவுள் தோன்றத்தான் செய்திருக்கிறார்.

எவருமே அனுமன்போல் ஒரு வரத்தைக் கேட்டதே இல்லையே…?

என்றால் அனுமன் எத்தனை பெரியவன்?

எவ்வளவு கருணை மிக்கவன்?

நம் அறிவால் ஓரளவுக்குத்தான் அனுமன் குணத்தை வியக்க இயலும். அவன் அளவுகள் கடந்தவன். அப்படிப் பெற்ற வரம் காரணமாக, இன்றும் அவன் தன்னை வேண்டுவோர்க்கு வழிகாட்டி பெரும் துணையாகவும் இருக்கிறான்.

பரந்த இந்த உலகில் அவனுக்கு மிகப் பிடித்தமான இடம் இமயமலைச் சாரல்! அங்கேஅவனது ராமநாம வேள்வி இன்றும் தொடர்ந்தபடியே உள்ளது. அதேசமயம் அவனது ஸ்தூலம் கடந்த ஒளியுடல் ஒன்றுக்குப் பலவாகி, பக்தர்கள் அழைக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று அவர்களுக்கு கை கொடுத்து உதவியபடி இருக்கிறது…..

ஸ்ரீ ராம ஜெயம் !