தேங்காய் சுடும் பண்டிகை எப்படி உருவானது?
தேங்காய் சுடும் பண்டிகை எப்படி வந்தது?
இந்த தேங்காய் சுடும் பண்டிகை எப்படி வந்தது என்றால், அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1ந் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று, ‘ஆடி18 அன்னிக்கு முடிவுக்கு வந்தது. இந்த போரில் தர்மம் வெல்லனும்ன்னு யுத்தம் தொடங்கும் நாளன்று, பாண்டவர் படையை சேர்ந்தவர்கள், விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்து தர்மம் ஜெயிக்க வேண்டுமென வேண்டிக்கொண்டார்களாம்.
போர்க்களத்தில் பாத்திரம் கிடைக்குமா?! அல்லது காய்கள்தான் கிடைக்குமா?! அதனால் தேங்கய்க்குள் அரிசி, வெல்லம், எள், ஏலக்காய், உப்பு சேர்த்து சுட்டு படைச்சு, போரில் வென்றதால் அன்றிலிருந்து ஆடி 1 அன்னிக்கு இப்படி தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப் பட்டது.
தேங்காய் எவ்வாறு சுடுவது:
நன்கு முற்றிய தேங்காயினை எடுத்து, நன்கு மழுமழுன்னு தேய்த்து (சபரிமலைக்கு இருமுடி கட்டும்போது தேங்காயினை தேய்ப்பதுபோல்), முக்கண்ணில் ஒரு கண்ணினை தோண்டி, உள்ளிருக்கும் நீரினை வெளியேற்றி, பச்சரிசி, நாட்டு வெல்லம், வறுத்த எள், உடைத்த பச்சைப்பயிறினை முக்கால் பங்கும், தேங்காயிலிருந்து வெளியேற்றிய நீர் கால்பங்கும் சேர்த்து தேங்காய்க்குள் திணித்து, அழிஞ்சில் குச்சியை சீவி, திறந்த தேங்காய் கண்ணில் சொருகி, மஞ்சள் பூசி நெருப்பினில் சுடவேண்டும்.
அதன் பின்னர் சுட்ட தேங்காயை கோயிலுக்கு எடுத்துக்கொண்டு போய் உடைத்து , சாமிக்கு வைத்து வழிபட வேண்டும். தேங்காயில் நாட்டுச்சர்க்கரையின் ருசி ஏறி, எள், தேங்காய் வாசனையோடு மணமும் ருசியுமாய் அமர்க்களமாய் இருக்கும். இந்த தேங்காய் சுடுதல் பண்டிகை சேலம் மாவட்டத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டாலும் சேலத்தைச் சுற்றியுள்ள ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கரூர் போன்ற காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் ஆடி மாதம் முதல் நாளையொட்டி ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இப்பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படும் .
குறிப்பு:
இந்த ஆடி மாத முதல் நாள் தேங்காய் சுடும் பண்டிகையின் போது வீட்டில் கருவுற்ற பெண்கள் யாரேனும் இருந்தால், தேங்காய் சுடும் நிகழ்வை அந்த வீட்டில் உள்ளோர் செய்ய மாட்டார்கள்.
