கிருஷ்ணர் குழலூதுவது எதற்காக தெரியுமா ?

333

ஒரு நாள் ராதையின் தோழிகள் கிருஷ்ணனின் புல்லாங்குழலை பார்த்து கேட்டனர், ‘மாதவன் உதடுகளில் எப்போதும் அமர்ந்திருக்க நீ என்ன புண்ணியம் செய்தாயோ? கிருஷ்ணரின் தேனூரும் உதட்டின் ருசியை எப்போதும் பருகுகிறாய். அவன் உன்னை வாசிக்கும்போது, உன் சொல்லுக்கு கட்டுப்பட்டவன் போல இயங்குகிறான். அவன் தன்னை மறந்து ஒற்றைக்காலில் நிற்கவும் செய்கிறாய்.

பூப்போன்ற அவனது கையில் உன்னை தூங்க அனுமதிக்கிறான். அவனது சிவந்த உதட்டினால் உனக்கு தலையணை தருகிறான். அவனது விரல்களை உன் மேனியில் வருடி உன் பாதத்திற்கு சுகம் தருகிறான். அவனது அழகிய சுருண்ட முடி காற்றில் அசையும்போது உனக்கு விசிறவும் செய்கிறான்.’

வன்சி (சமஸ்கிருதம்) என்ற குழலின் பெயரை திருப்பினால், ‘சிவன்’ என்றாகிறது. இந்த குழலே சிவன். நாம் அனைவரும் சிவன் போல ஆக வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் முக்கியமாக புல்லாங்குழலை மூன்று காரணங்களுக்காக விரும்புகிறார். ஒன்று, குழலுக்கு எந்த பக்கமும் அடைப்பு இல்லை. இறுக்கமற்ற வெறுமையான இடமே அதனிடம் உள்ளது. இதன் மூலம் நாமும் இறுக்கமற்று அகங்காரம் இல்லாமல் இருக்கு வேண்டும் என்பதை உணர்த்துகிறது. அதனால் மற்றவரிடம் உள்ள கோபத்தை/பொறாமையை மனதில் அடைக்கலாகாது. இரண்டாவது காரணம், அதை யாராவது வாசித்தாலொழிய ஓசை தராது. அதாவது நீங்கள் பேச அவசியமற்ற இடத்தில் பேசாமல் இருத்தல் நல்லது. நமது வார்த்தைகள் மிக மதிப்புள்ளது. அதனால் தீய வார்த்தை பேசுவதைவிட அமைதியாக இருப்பதே சிறந்தது. மூன்றாவது காரணம், புல்லாங்குழலை வாசித்தால் இனிய இசையை மட்டுமே கொடுக்கும், இல்லையேல் ஓசையின்றி அமைதியாக இருக்கும். அதைப்போல நாம் பேசும்போது தீய சொற்கள் தவிர்த்து இனிய சொற்களை பயன்படுத்துவதே நலன் பயக்கும். இந்த மூன்று குணங்கள் யாரிடம் உள்ளதோ அவர்களுக்கு இறைவன் தனது உதடில் இடம் கொடுப்பான்.

ஒரு சமயம் ராதையே நேரடியாக குழலிடம், ‘அருமை குழலே! நான் கண்ணனை அளவு கடந்து விரும்புகிறேன். ஆனால், அவன் உன் மீது தான் பாசம் அதிகம் வைத்துள்ளான். அதனால், அவன் எப்போதும் அவனது உதட்டிலே உன்னை வைத்துக்கொள்கிறான். இதற்கு காரணம் என்ன? நீ கூறுவாயா?’
அதற்கு குழல் சொன்னது, ‘முதலில் என் உடம்பை வெட்டி, அதிலிருந்து எனது இதையைத்தையும் நீக்கி, என்னை வெறுமையாக்கினார்கள். என் மேனியெங்கும் துளைகாள ஆக்கினார்கள். இவ்வாறு இருந்தும், நான் கிருஷ்ணரின் விருப்பத்திற்கு ஏற்பவே ஓசையைக்கொடுக்கிறேன். என் விருப்பத்திற்கு நான் என்றும் ஓசையை தந்ததில்லை. உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் இதுவே. நான் கிருஷணரின் விருப்பம்போல நடக்கிறேன். நீங்களோ உங்கள் விருப்பத்திற்கு அவன் நடக்க ஆசைப்படுகிறீர்கள்.

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !