குறையொன்றும் இல்லை

215

ஒருத்தர் பெருமாள் படத்துக்கு அர்ச்சனை பண்ணிக் கொண்டிருந்தார். “ஓம் கேசவாய நம: ஓம் நாராயணய நம: ஓம் மாதவாய நம:” என்று நாமங்கள் சொல்வதைக் கேட்டு பகவான் ஆனந்தித்துக் கொண்டிருந்தார். திடீரென்று நடுவிலே “ஓம் தரித்ராய நம:” என்று ஒரு நாமாவளி வந்தது.

அதைக் கேட்டவுடனே அர்ச்சனை பண்ணியவரின் கையைப் பிடித்துக் கொண்டு விட்டான் பகவான்.
“எனக்கெங்கேயாவது தாரித்ரியம் உண்டா? ஏழ்மை உண்டா? என்னைப் பார்த்து தரித்ராய நம: என்று எப்படிச் சொல்லலாம்?” பகவான் பக்தனிடம் கேட்டான்.

“இப்போது நீர் இப்படி அர்ச்சனை பண்ணுகிறீரே என்று எல்லோருமே பண்ண ஆரம்பித்து விடுவார்கள்! இந்த தரித்திர சப்தத்தை நான் எத்தனை காலம் கேட்பது” என்று கவலைப்பட்டான்.

தரித்திர சப்தத்தைக் கேட்க பகவானுக்கே பிடிக்கவில்லை! அவ்வளவு கொடுமையானது தாரித்ரியம்.

ஊர் மத்தியிலே பிச்சையெடுத்தபடி போனானாம் ஒருவன். அவனைக் கண்டதுமே எல்லோரும் கதவைச் சாத்திக் கொண்டார்களாம். இவன் மிகவும் சோர்ந்து போய் ஊருக்கு வெளியிலே ஒரு ஸ்மசானத்திலே போய் உட்கார்ந்து கொண்டானாம். அது ஸ்மசானம் என்பது அவனுக்குத் தெரியவில்லை. அந்தச் சமயம் பார்த்து ஒரு சிதை எரிக்க ஏற்பாடாகிறது. பார்த்தான் இவன். அந்த சவத்திடம் போய் “ஒரு விசனமில்லாமல் படுத்துண்டிருக்கியே… ஏ தோழனே! ஒரு க்ஷணம் எழுந்து இந்த தாரித்ரியத்தை நீ வாங்கிக் கொள்: நீ படுத்திருக்கிற இடத்திலே நான் படுத்துக் கொள்கிறேன்” என்றானாம். அந்த சவம் பேசவேயில்லை. பதிலே சொல்லவில்லை.

ஏனடா பேசவில்லை என்று கேட்டால் “ஏழ்மையைக் காட்டிலும் புறப்பட்டுப் போய்விடுவதே மேல்.. இவனிடம் பேசினோமானால் நமக்கு நடக்க வேண்டிய கடைசி காரியம் கூட சரியாக நடக்காது’ என்று வாயை மூடி இருந்து விட்டதாம் சடலம். அப்படி சவமே கூட பரிகசிக்கும்படியான நிலை தாரித்ரியம். யார் தான் அதை விரும்புவார்கள்?

அதைச் சொல்லி அர்ச்சனை பண்ணவும் பகவானுக்கே கோபம் வந்துவிட்டது.

“யாரைப் பார்த்து தரித்ராய நம: என்றீர்.!” கேட்டார் பகவான்.

பக்தர் வெறுமனே விடவில்லை. இடுப்பில் துணியை இறுக்கிக் கட்டிக் கொண்டு வாக்குவாதத்தில் இறங்கினார்.

“அர்ச்சனைத் தட்டைப் பிடுங்கி வைத்துக் கொண்டால் உனக்கு தாரித்ரியம் இல்லாமல் போய்விடுமா? இருக்கிறதே..” என்று பதில் சொன்னார்.

பக்தன், பகவானுக்கு தாரித்ரியம் உண்டு என்று அடித்துச் சொன்னதும் அவன் விதண்டாவாதம் பண்ணவில்லை.

“எங்கே? எனக்கு ஏது தாரித்ரியம்..? என்று கேட்டான்.

‘உன்னை மாதிரி இன்னொருத்தனைக் காட்டு” என்றான் பக்தன்.

பகவான் பதிலே சொல்லவில்லை! வாயை மூடிக் கொண்டு விட்டான்!

அவன் வாயை மூடிக் கொண்டதைப் பார்த்ததும் இவருக்கு (பக்தருக்கு) தைரியம் வந்துவிட்டது.

“இந்த விஷயத்திலே உனக்குச் சமானமானவன் உளன் என்கிற விஷயத்திலே – தாரித்ரியம் நிறைய இருக்கிறதே” என்றார்.

“உண்டு உண்டு’ என்று ஒப்புக் கொண்டான் பரமாத்மா. ஏனென்றால் தன்னைப் போல் இன்னொருவனை அவனால் காட்ட முடியவில்லை அல்லவா..!

“உனக்கு ஒப்பார்தான் இல்லை: மிக்கார் உண்டென்றால் காட்டு” இது பக்தனின் அடுத்த கேள்வி. மிக்காரும் இல்லை என்பதே பதிலானதாலே பகவானிடத்திலே பதிலும் இல்லை.

“இப்போது நான் அர்ச்சனை பண்ணப் போகிறேன். வாயை மூடிக் கொண்டு கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்” என்றார் பக்தர்.

பரமாத்மாவுக்கு ஒரே சந்தோஷம்! அவனுடைய சர்வேச்வரத்வத்தைத் தெரிவிக்கும்படியான அர்ச்சனை அல்லவா அது! “ஓம் ஸமாப்யதிக தரித்ராய நம” என்பது.

விஷ்ணு என்கிற பெயரினாலே சொல்லப்படுகிற குணங்களில் ஒன்று இந்த சர்வேச்வரத்வம்.

விஷ்ணு புராணத்திலே பராசர மஹரிஷியைப் பார்த்து மைத்ரேயர் கேள்வி கேட்கிறார்.

“இந்த உலகம் எங்கிருந்து வந்தது?

எதனால் ரக்ஷிக்கப்படுகிறது?

இதற்கெல்லாம் காரணம் யார்?

இதற்கு ஒரு சுலோகத்தில் பராசரர் பதில் சொல்கிறார்.

:ஹே மைத்ரேயா ஒவ்வொன்றாகச் சொல்லி இதற்கெல்லாம் யார் காரணம்? என்று கேட்டாயே…அத்தனையும் விஷ்ணுவிடமிருந்து தோன்றின. வேறெங்கிருந்தோ கொண்டு வந்து இவற்றையெல்லாம் அவன் உண்டாக்கவில்லை. அவனுக்குள்ளிருந்தே தான் யாவும் தோன்றின. ஜகத் மொத்தமும் அவனிடத்திலேயே தான் இருக்கிறது. ஜகத்துக்கே காரணமானவன் விஷ்ணுதான்” சர்வக்ஞனான எம்பெருமானே விஷ்ணு சப்தத்தினாலே சொல்லப்படுகிறான்.

ஓம் நமோ நாராயணா !