பல்வேறு தானங்களும், அவற்றின் பலன்களும் பட்டியல்!

55

பல்வேறு தானங்களும், அவற்றின் பலன்களும் பட்டியல்!

அன்னைக்கு தர்மசம்வர்த்தினி என்று பெயர் உண்டு. தமிழில்: அறம் வளர்த்த நாயகி. சாஸ்திரம் மொத்தம் 32 வகையான அறங்களை சொல்லியிருக்கிறது. இவை அனைத்தையும் அம்பாளே காஞ்சிபுரத்தில் தான் செய்து காட்டி அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்ததாக கூறுவார்கள்.

இந்த 32 வகை அறங்களில் மக்கள் அனைவரும் அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப செய்யக்கூடிய அறங்கள் அனைத்தும் விளக்கப்பட்டுள்ளது. பொருள் அதிகம் தேவைப்படும் அறம் முதல் பொருள் அதிகம் தேவைப்படாத குடிக்க நீர் கொடுக்கும் தண்ணீர் தானம் வரை பல அறங்கள் இதில் சொல்லப்பட்டுள்ளன. ஒவ்வொரு தானத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. ஒரு பலன் உண்டு.

அன்னதானம்:

தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும் . பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். அன்னதானம் செய்தால் நினைத்தது கிடைக்கும்.

ஆடை தானம்:

தகாத உறவுக் குற்றங்கள் நீங்கும். பெண்களின் கற்பிற்கு ரட்சையாக இருக்கும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை பிள்ளைகளை கணக்கெடுத்து அவர்களுக்கு சீருடை வாங்கித் தரலாம். தெய்வத் திருக்கல்யாணங்கள் நடைபெறும் போதும் ஆடை தானம் (வஸ்திர தானம்) முக்கிய பங்கு வகிக்கிறது.

மாங்கல்ய சரடு தானம்:

மாங்கல்ய சரடு தானம் செய்தால் காமக் குற்றங்கள் அகலும். தீர்க்க மாங்கல்ய பாக்யம் உண்டாகும்.

பொன் மாங்கல்யம் தானம்:

பொன் மாங்கல்யம் தானம் செய்தால் மாங்கல்ய தோஷங்கள் நீங்கும். திருமண தடைகள் நீங்கும்.
ஏழை எளியோரின் திருமணத்திற்கு பொன் மாங்கல்யம் தானம் செய்யலாம்.

எண்ணெய் தானம்:

எண்ணெய் தானம் செய்தால் நாம் அறிந்தும் அறியாமலும் செய்த கர்ம வினைகள் அகலும். கடன்கள் குறையும்.
ஆலயங்களுக்கு விளக்கேற்ற எண்ணெய் வாங்கித் தரலாம்.

பசு தானம்:

பசு தானம் செய்தால் இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும். அறுப்புக்கு போகும் பசுக்களை காப்பாற்றி கொண்டு வந்து ரட்சிக்கும் கோ-சாலைகளுக்கு தீவனம், வைக்கோல் முதலியவற்றை வாங்கித் தரலாம். நிச்சயம் அது கோ தானத்தின் பலனை கொடுக்கும்.

பூ தானம்:

பூ தானம் செய்தால் அந்தஸ்து காரணமாக பிறரை அவமதித்ததால் ஏற்படும் தீவினைகள் நீங்கும். குடும்ப வாழ்க்கை சுகமாகவும் , சாந்தமாகவும் அமையும்.
வஸ்திரதானம் – ஆயுள் விருத்தி கூடும்.
பூமி தானம் – பிரம்மலோகத்தை தரும்.
தேன் தானம் – புத்திர பாக்கியம் கிடைக்கும்.
நெல்லிக்காய் தானம் – ஞானம் பெருகும்.
விதை வித்துகள் தானம் – ஆயுள், சந்ததி விருத்தி உண்டாகும்.
தாம்பூல தானம் – சொர்க்கத்தை தரும்.

பழங்கள் தானம்:

பழங்கள் தானம் செய்தால் பல ஜீவன்களை வதைத்த சாபம் தீரும். ஆயுள் விருத்தியாகும். பழங்களை யாருக்கு எங்கு வேண்டுமானாலும் தானம் செய்யலாம். ஏதேனும் ஒரு அரசு மருத்துவமனைக்கு சென்று, நோயாளிகளை சந்தித்து, அவர்களுக்கு ஆப்பிள், மாதுளை போன்ற பழங்களை வாங்கிக் கொடுக்கலாம்.

காய்கறிகள் தானம்:

காய்கறிகள் தானம் செய்தால் பித்ரு சாபங்கள் விலகும். குழந்தைகளின் ஆரோக்கியம் வளரும். கோவில்களில் தெய்வத் திருமணங்கள் நடைபெறும் போது அன்னம் பாலிப்புக்கு காய்கறிகளை வாங்கித் தந்துவிடலாம். இதெல்லாம் பணமாக இல்லாமல் நீங்கள் பொருளாகவே வாங்கித் தரலாம்.

அரிசி தானம்:

அரிசி தானம் செய்தால் பிறருக்கு ஒன்றுமே தராமல் தனித்து வாழ்ந்த சாபம் தீரும். வறுமை தீரும். அரிசி தானம் – பயம் போக்கும்.முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவற்றுக்கு அரிசி வாங்கித் தரலாம்.

குடை தானம்:

குடை தானம் செய்தால் தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும் . குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.

பாய் தானம்:

பாய் தானம் செய்வதால் பெற்றவர்களை பெரியவர்களை புறக்கணித்ததால் வந்த சாபங்கள் தீரும். கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும் . அமைதியான மரணம் ஏற்படும் . கோரைப் புற்களால் வேய்ந்த பாயை வாங்கித் தருவது விசேஷம். முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவற்றில் இதை செய்யலாம்.
பாய் தேவையில்லையெனில் பெட்ஷீட் அல்லது போர்வை நிச்சயம் தேவையிருக்கும்.

காலணி தானம்:

காலணி தானம் செய்தால் பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும். தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.