மாங்கல்ய மாதம் என்று அழைக்கப்படும் மாசி மாதம்!
மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜகத்தை ஆள்வர் என்பதும், மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. மாங்கல்ய மாதம் என்று அழைக்கப்படும் மாசி மாதம். காரடையான் நோன்பும், சாவித்திரி விரதமும் இந்த மாசி மாதத்தில் வரும் விசேஷ விரதங்களாகும். மாசி மகத்தன்றுதான் காமதகன விழா நடைபெறுகிறது. மாசி மகத்திருநாளில்தான் மகாவிஷ்ணு அவதாரம் எடுத்தது. சங்கடஹர சதுர்த்தியிலேயே மிக விசேஷமானது மாசி மாத சங்கடஹர சதுர்த்தி. இந்நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபட்டு நலம் பெறலாம். பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றியது இம்மாசி மாதத்தில் தான்.
சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்ததும் மாசி மாதத்தில் தான். மற்ற மாதங்களை விட மாசி மாதத்தில் மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாக கருதப்படுகிறது. மாசி மகம் தான் அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துகிறது.
முருகப்பெருமான் சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தது மாசி மாத பூச நட்சத்திரம் தினத்தன்று தான். பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி, பேய்களுக்கும் நல்ல கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான்.
மாசி சுக்கிலபட்ச பஞ்சமியில் மாணவர்கள் ஸ்ரீசரஸ்வதி தேவியை மணமுள்ள மலர்களால் அலங்கரித்து வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மாசி மக நாளில் உயர் படிப்பு படிக்க விரும்புபவர்களும், ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்களும் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம். மாசி மகம் திருநாளை பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மகாமகம் என்று வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவே வடஇந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் நடைபெறுகிறது.
மாசி மாதத்தில் தான் அகத்தியர் தன் விருப்பங்கள் நிறைவேற தவம் இருந்து அருள் பெற்றார். மாசி மகத்தன்று புனித நீராட முடியாதோர் மாசி மக புராணங்களை படிக்கலாம் அல்லது கேட்கலாம் அதுவும் புண்ணியம் தான். மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோவில் பொற்றாமரை குள தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்ப திருவிழா நடத்துவார்கள். இதற்கு அப்பர் தெப்பம் என்று பெயர். மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்தபின் துளசியால் அர்ச்சனை செய்து மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும். மாசி மக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபடுபவர்களுக்கு இன்பமும், வெற்றியும் தேடி வரும்
